இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி இலங்கையில் ஆட்சியமைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாக இருந்தால் இலங்கை அரசு அதற்கு பதிலளிக்கும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் வெளியிட்டுள்ள கருத்தானது உத்தியோகபூர்வமானது அல்ல . இதனால் இது தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாட்டைக் கூற முடியாது.
இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் ஆட்சி அமைக்கும் திட்டத்தில் பா.ஜ.க. உள்ளது என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவ்வாறு கூறியுள்ளார் என்று திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் கருத்து வெளியிட்டுள்ளாரே தவிர, அமித் ஷா எங்கேனும் அவ்வாறு கூறியுள்ளார் என்று செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.
இதனால் இந்த விடயத்தை நாங்கள் வெறும் வதந்தியாகவே பார்க்கின்றோம் என்றார்.