நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வன்முறைகளைத் தடுக்கும் வகையில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்த்து வைக்கும் விடயத்தில் தலையிடுமாறு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சர்ச்சைகள் அதன் தொடராக இடம்பெறும் வீட்டு வன்முறைகள் என்பன கடந்த காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக மலையகப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அண்மைக்கால மதிப்பீடுகள் தெரிவிக்;கின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் இந்த சம்பவங்கள் கொலையிலும் முடிவடைகின்றன. கணவன் மனைவியை கொல்வது அல்லது மனைவி கணவனைக் கொல்வது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் 28 வயதான தனது மனைவியை கொலை செய்து கொத்மலை நீர்த் தேக்கத்தில் வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.
எனவே இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக குடும்பத் தகராறுகளில் தலையிட்டு சமரசம் செய்து வைக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.