தான்சானிய ஜனாதிபதி ஜான் மகுஃபுலி (John Magufuli) 61ஆவது வயதில் காலமானார்

Date:

தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி (வயது 61) இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார் நாட்டின் துணை அதிபர் சமியா சுலுஹு ஹாசன். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக புரளி பரவியது.

இவர் கொரோனா வைரஸ் குறித்தே சந்தேகங்களை எழுப்பிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வாரங்களாக பொது வெளியில் காணப்படாமல் இருந்த நிலையில் தாருஸ்ஸலாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அரசுத் தொலைக்காட்சியில் அறிவித்தார் சமியா சுலுஹு.

முன்னதாக, அதிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறிவந்தனர். ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை.

வெளிநாடுகளில் வாழும் வெறுப்பு மிகுந்த தான்சானியர்கள்தான் அதிபரின் உடல் நலம் குறித்து புரளி பரப்பிவந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

ஆனால், அதிபர் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவதாக தமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிப்பதாக கூறியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் டுண்டு லிஸ்ஸு.

கணிதமும், வேதியியலும் படித்தவரான ஜான் முகுஃபூலி இந்த இரண்டு பாடங்களுக்குமான ஆசிரியராக சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். 2015ம் ஆண்டு முதல் முறையாக அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வைரஸே இல்லை என்று கூறியவர்

தான்சானியாவில் கொரோனா வைரஸே இல்லை என்று கடந்த ஆண்டு ஜூன் மாதமே அறிவித்த மகுஃபூலி முகக் கவசம் என்ன பாதுகாப்பைத் தரும் என்பது குறித்து கிண்டல் செய்த அவர், பரிசோதனை முடிவுகள் குறித்தும் சந்தேகம் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் அண்டை நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர் கிண்டல் செய்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தங்கள் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் விவரங்களை வெளியிடவில்லை தான்சானியா. தடுப்பூசி வாங்கவும் தான்சானியா மறுத்துவிட்டது.

அதிபருக்கு உடல்நலமில்லை என்று சமூக ஊடகத்தில் புரளி பரப்பியதாக நான்கு பேரை கைது செய்தது போலீஸ். இப்படி புரளி பரப்புவது வெறுப்புணர்வைக் காட்டுவதாக அப்போது குறிப்பிட்டார் மஜாலிவா.

கொரோனா வைரஸ் குறித்தே சந்தேகம் கொண்டிருந்தவர் மகுஃபூலி. தொழுகை மூலமும், மூலிகை வேது பிடிப்பதன் மூலமும் இந்த நோயை எதிர்கொள்ளமுடியும் என்று அவர் கூறிவந்தார்.

மகுஃபூலி இறந்ததை அடுத்து நாட்டில் 14 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுதான் மகுஃபூலியின் அதிபர் பதவிக்காலம் தொடங்கியது. தான்சானியா அரசமைப்புச் சட்டத்தின்படி, மீதமிருக்கும் நான்காண்டு பதவிக் காலத்துக்கும் துணை அதிபர் சமியா சுலுஹு ஹாசன் அதிபராக பதவி வகிப்பார்.

பிப்ரவரி 27-ம் தேதிக்குப் பிறகு அதிபர் வெளியில் காணப்படவில்லை. ஆனால், அவர் “ஆரோக்கியமாக இருக்கிறார். கடுமையாக உழைக்கிறார்” என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார் தலைமை அமைச்சர் காசிம் மஜாலிவா.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...