நமக்கு மிகவும் நெருக்கமான, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களோடு பல்வேறு வழிகளில் உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டுள்ள தென் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி இடம்பெறவுள்ளது. நமக்கு மிகவும் நெருக்கமான மாநிலம் என்பதால் அது பற்றிய சில கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
இந்தியாவில் சட்டமன்ற ஆட்சி முறை என்பது நமது மாகாண சபை ஆட்சி முறையைப் போல் பெயரளவில் மட்டுமே உள்ள ஒன்றல்ல. அது மிகவும் அதிகார பலம் கொண்டது. கிட்டத்தட்ட ஒரு நாடாளுமன்றம் போன்றது. அதில் முதலமைச்சராக வருபவர் கிட்டத்தட்ட அந்த மாநிலத்தின் பிரதமரைப் போன்ற அதிகாரம் கொண்டவர். எனவே இந்திய மக்களைப் பொருத்தமட்டில் சட்டமன்றத் தேர்தல் என்பது மிகவும் பிரதானமான ஒரு விடயமாகும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாடு மாநில சட்டப் பேரவைக்கு நடக்கவுள்ள 16வது தேர்தல் இதுவாகும். தற்போதைய 15வது சட்டமன்றத்தின் ஆட்சிக் காலம் 2021 மே மாதம் 24ம் திகதி முடிவடைகின்ற நிலையிலேயே 16வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றம் 234 ஆசனங்களைக் கொண்டது. இங்கு தேர்தல் என்பது கடந்த 50 வருடங்களாக பிரதான இரு கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) ஆகிய கட்சிகளை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. இந்தப் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஏனைய கட்சிகள் தேர்தலை சந்திப்பதுண்டு. இதற்கு அப்பால் கொள்கைவாத கட்சிகள் சில தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்டாலும் அவை பெரிய அளவில் சாதித்துள்ளதாக வரலாறு கிடையாது.
இந்தத் தேர்தலிலும் இதே நிலை தான் காணப்படுகின்றது. இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் பிரதான கட்சிகளான திமுக வும் அஇஅதிமுகவும் அதன் ஜாம்பவான் அரசியல் தலைமைகளான மு.கருணாநிதியும் ஜெயலலிதாவும் இன்றி இந்தத் தேர்தலில் புதிய தலைமைகளின் கீழ் களமிறங்கி உள்ளமையாகும். கடைசியாக 2016ல் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அவரது அஇஅதிமுக 136 ஆசனங்களைப் பெற்று ஆட்சி பீடம் ஏறியது. அதற்கு முந்திய தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றார். 2016 தேர்தல் முடிவடைந்த சுமார் ஆறு மாத காலத்தில் அதாவது 2016 டிசம்பரில் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன் பிறகு அந்தக் கட்சி பல உட்பூசல்களைச் சந்தித்த பின் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டு முதலில் பன்னீர் செல்வம் சிறிது காலம் தமிழ்நாடு முதலமைச்சராகவும், பின்னர் தற்போது (2017முதல்) எடப்பாடி கே பழனிசாமி முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றார்.
அதேபோல் திமுக வின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாக இருந்து, தள்ளாத வயதிலும் சக்கரநாற்காலியில் இருந்து அதன் தலைவராக வலம் வந்த மு. கருணாநிதி 2018ல் மரணம் அடைந்தார். அதன் பிறகு எந்த வித சவாலும் இன்றி கருணாநிதியால் அவரது வாழ்நாளிலேயே அவரது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட மு.க. ஸ்டாலின் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அந்த வகையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தமிழக அரசியல் ஆளுமைகளும் இல்லாத நிலையில் அவர்களின் பொறுப்பை சுமந்திருக்கும் எந்தத் தரப்பை முதற் தடவையாக தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள உள்ளனர் என்பதை அறிய இந்திய மக்கள் மட்டும் அன்றி உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களும் ஆர்வமாக உள்ளனர்.
இதனிடையே 2019ல் இடம்பெற்ற இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலில் (லோக்சபா) ஸ்டாலின் தலைமையிலான திமுகவின்; கீழ் ஒன்றிணைந்த கட்சிகள் மதச்சார்பற்ற முற்போக்கு முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா ஆசனங்களில் 38 ஆசனங்களில் அமோக வெற்றியீட்டி மத்திய பாராளுமன்றத்தில் உறுதியான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டது. இது ஸ்டாலினின் துடிப்புள்ள தலைமைத்துவத்துக்கு கிடைத்த அமோக வெற்றியாக நோக்கப்படுகின்றது. அதேபோல் கடந்த காலங்களில் இடம்பெற்ற 13 ஆசனங்களுக்கான இடைத் தேர்தல்களின் போதும் 10 ஆசனங்களை திமுக வே வென்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எனவே ஸ்டாலின் தலைமையில் திமுக சரிவைச் சந்திக்கவில்லை என்பது இங்கே அவதானிக்கத்தக்கது.
இதுவரை தமிழ்நாட்டின் பிரதான பிரிவு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் இந்திய தேசிய ஊடகங்கள் என பல பிரிவினரும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் ஸ்டாலின் தலைமையிலான் மதச்சார்பற்ற முற்போக்கு முன்னணியே வெற்றிபெறும் நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவாகட்டும் அல்லது இலங்கையாகட்டும் தேசிய அரசியலாயினும் சரி அல்லது மாநில அரசியலாயினும் சரி அங்கு பிரதான இடம் பிடிப்பது கட்சிகள் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள். இதில் இலங்கையை விட இந்தியா ஒரு படி மேலே உள்ளது அதாவது அங்கு வாக்குறுதி மட்டும் அல்ல வாக்காளர்களுக்கு வாக்களிப்புக்காக வழங்கப்படும் பணமும் புகுந்து விளையாடும். தற்போதைய தமிழ் நாடு கருத்துக் கணிப்புக்களும் அதையே சுட்டிக் காட்டி உள்ளன.
இம்முறை ஆளும் அஇஅதிமுக உடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், பசும்பொன் தேசியக் கழகம் என்பன இணைந்துள்ளன.
மறுபுறத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு முன்னணி என்ற பெயரில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ) பிரிவு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய போவர்ட் புளக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆதி தமிழர் பேரவை என்பன கூட்டணி அமைத்துள்ளன.

முன்னர் குறிப்பிட்டதைப் போல் ஆளும் அஇஅதிமுக வுக்குள் ஏற்பட்ட உற்பூசல்கள் காரணமாக பிளவடைந்து உருவான, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வலது கரமாகச் செயற்பட்ட சர்ச்சைக்குரிய சசிகலாவுக்கு ஆதரவான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இம்முறை சிறிய கட்சிகள் சிலவற்றை இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்தப் பிரிவுக்கு சசிகலாவின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படும் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்குகின்றார். தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன், கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அரசு கட்சி என்பன இந்தக் கூட்டணியில் இடம்பிடித்துள்ளன.
அடுத்த பிரதான கூட்டணியாகக் கருதப்படுவது தமிழக அரசியலில் பாரிய மாற்றங்களை கொண்டு வரப் போவதாக பாரிய கோஷத்துடன் களம் இறங்கி உள்ள நடிகர் கமலஹாசன் தலைமையிலான கூட்டணி. கமலஹாசன் ஸ்தாபித்துள்ள மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் கீழ் இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தள் என்பன ஒன்றிணைந்துள்ளன.
இவை தவிர பிரபல அரசியல்வாதி சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜவாதக் கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி என்பன எந்தப் பிரிவுகளோடும் இணையாமல் தனித்தனியாகப் போட்டி இடுகின்றன.
இந்தக் கட்டுரை எழுதப்படும் மார்ச் 31ம் திகதி காலை வரை வெளியாகி உள்ள பிரதான கருத்துக் கணிப்பீடுகளின் படி ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றிவாய்ப்பை நோக்கி நகர்ந்து வருவதாகவே கூறப்படுகின்றது.
ஆளும் அஇஅதிமுக வைப் பொறுத்த மட்டில் ஜெயலலிதாவுக்குப் பின் அந்தக் கட்சியில் ஏற்பட்ட பிளவு அதாவது தினகரன் தலைமையிலான சசிகலாவுக்கு ஆதரவான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அஇஅதிமுகவின் வாக்கு வங்கியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தக் கட்சிக்குள் இந்தியாவின் மத்தியில் அதிகாரத்தைக் கொண்டுள்ள பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி இடம்பிடித்துள்ளமை தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் தனது ஆதிக்கத்தை விரிவு படுத்தும் நோக்கோடு, தமிழகத்தையும் அஇஅதிமுகவுடன் இணைந்து வளைத்தப் போடும் திட்டத்தின் கீழேயே பிஜேபி அவர்களோடு கைகோர்த்துள்ளது. ஆனால் தமிழக தேர்தலில் முஸ்லிம்கள் உற்பட ஏனைய சிறுபான்மையினர் மற்றும் சாதி வேறுபாட்டுக்கு முகம் கொடுப்போர் ஆகியோரின் வாக்குகளும் முக்கிய இடம் பிடிக்கின்றது. அந்த வகையில் அவை பிஜேபிக்கோ அல்லது அவர்களுடன் இணைந்திருக்கும் பிரிவுக்கோ சாதகமாக அமையப் போவதில்லை. எனவே அஇஅதிமுக தனக்குளளே ஏற்பட்டுள்ள பிளவை பற்றியும் சிந்திக்காமல் பிஜேபி உடன் கூட்டணி அமைத்தமைக்காக வருந்தும் நிலை ஏற்படலாம் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அடுத்ததாக தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூவித் திரியும் நடிகர் கமலஹாசன் இந்தத் தேர்தலில் வெறும் புஷ்வானமாகவே இருப்பார். அவர் தமிழக அரசியல் களத்தை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். அரசியல் என்று வருகின்ற போது மக்கள் எதை எல்லாம் கவனத்தில் எடுப்பார்கள் என்பதை கமலஹாசன் குறைவாகவே மதிப்பீடு செய்துள்ளார்.
நடிப்புலக சக்கரவார்த்தியாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட தனிக்கட்சி அமைத்து அரசியலில் குதித்து துண்டைக்கானோம் துணியைக் காணோம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு மீண்டும் நடிப்புக்கே வந்தவர். 1988ல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை அமைத்து அரசியலில் குதித்து காணாமல் போனவர் தான் நடிகர் திலகம். மீண்டும் அவரை நடிப்புலகில் தான் சந்திக்க முடிந்தது.
அதன் பிறகு விஜயகாந்த், சரத்குமார் உற்பட இன்னும் பல சிறிய நடிகர்களும் கூட இந்த விஷப் பரீட்சையில் ஈடுபட்டு ஒன்றில் முகவரி இழந்துள்ளனர் அல்லது எங்கோ ஒரு மூலையில் கிடக்கின்றனர்.
பிரபலமான ஒரு நடிகனாக இருந்து கொண்டே தான் ஏற்ற கதாபாத்திரங்கள் மூலமும் அந்தக் கதைகளில் தன்னைச் சுற்றி பின்னிப் பிணைக்கப்பட்ட ஏனைய கதாபாத்திரங்கள் மூலமும், திரைப்படங்களில் தனது பாடல் வரிகள் மூலமும் ஏனைய வசனங்கள் மூலமும் தனது அரசியல் கொள்கைகளையும் சருத்துக்களையும் சிந்தனைகளையும் மக்கள் மயப்படுத்தி, கொடை வள்ளல், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் எனப் பல புகழாரங்கள் சூட்டப்பட்டு சினிமாவை விட்டு வெளியேறிய கையோடு அரசியலில் குதித்து முதலமைச்சராகிய மகிமைக்குரியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டுமே. அவரை அடி ஒட்டி வந்ததால் தான் ஜெயலலிதாவுக்கு கூட அது சாத்தியமாயிற்று என்று எந்தத் தயக்கமும் இன்றி கூறலாம்.
கமலஹாசன் 60 வருட காலம் சினிமாவில் இருந்திருந்தாலும் சரி, இன்று அவர் தன்னை காந்தி, காமராஜர், அப்துல் கலாம் ஆகியோர் வரிசையில் வைத்து விளம்பரம் செய்தாலும் சரி அவர் இன்னொரு எம்ஜிஆராக இப்போதைக்கு வர முடியாது. ஏம்ஜிஆரின் கை அசைவைக் கற்றுக் கொள்ளவே கமலஹாசன் இன்னும் பல காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். கருத்துக் கணிப்புக்களின் படியும் கமலஹாசன் கடைசியிலேயே உள்ளார். அவர் நினைக்கும் மாற்றங்களைக் கொண்டு வருவதும் மக்கள் அதை ஏற்றுக் கொள்வதும் இப்போதைக்கு சாத்தியமாகாத ஒன்று. ஒருவேளை கருத்துக் கணிப்புக்கள் சரி என்றால் இந்தத் தேர்தல் முடிவுகளின் பின் கமலஹாசன் காணாமல் போகாமல் இருக்க வேண்டும், குறைந்த பட்சம் மீண்டும் நடிப்புலகிலாவது அவர் இருக்க வேண்டும்.
எம்.நௌஷாட் மொஹிடீன்