ஹொரவ்பொத்தான – கபுகொல்லாவ பிரதான வீதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மாணவன் ஹொரவ்பொத்தான நகரில் பிரபல சிங்கள பாடசாலையில் கல்வி பயின்று நேற்று முடிவடைந்த சதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய ஹொரவ்பொத்தான முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஆர்.எம்.கே.எம்.டி.சில்வா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ஹொரவ்பொத்தானயிலிருந்து வாகொல்லாகட நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவன் உழவு இயந்திரம் மற்றும் கெப் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பஸ் சாரதியின் அசமந்தப் போக்கினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சாரதியை கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிசார் தெரிவித்தனர்.
முஹம்மட் ஹாசில்