இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அவர் புதுடில்லி சென்று தமது கடமைகளை இன்னும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி இன்று இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொரகொடவின் நியமனத்தை பல மாதங்களுக்கு முன்பே இந்தியா ஏற்றுக் கொண்டிருந்தது. இருந்தாலும் புதுடில்லியில் உள்ள உயர் ஸ்தானிகர் பகதவிக்கான நாற்காலி இன்னமும் காலியாகவே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்புத் துறை முக கிழக்கு வாயில் விவகாரம், ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியாவின் நிலைப்பாடு என்பன காரணமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் முன்னரை விட தளர்வு நிலை ஏற்பட்டுள்ள பின்னணியில் மொரகொடவின் பதவியேற்பு தாமதமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மிலிந்த மொரகொட விரைவில் இந்தியா செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர அவர் எப்போது அங்கு செல்வார் என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.