தமது பரம எதிரி நாடான ஈரானுடன் மிகச் சிறந்த உறவுகளைப் பேணிக் கொள்ளவே தான் விரும்புவதாக சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
அல் அராபியா தொலைக்காட்சி நிலையத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கை சுபிட்சத்தை நோக்கித் தள்ளிச் செல்லும் ஒரு நாடாகவே ஈரானை நான் பார்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ள இளவரசர் சல்மான், ஈரானிடம் தான் அவதானிக்கும் பிரதான பிரச்சினை அதன் எதிர்மறை போக்கான நடைமுறைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணு ஆயுதத் திட்டம், அது நடத்தி வரும் ஏவுகணை சோதனைகள் மற்றும் அவர்களிடம் உள்ள சட்டத்துக்குப் புறம்பான ஆயுதக் குழுக்கள் என்பனவற்றை தனது அதிருப்திக்கான காரணங்களாகவும் இளவரசர் சல்மான் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காண சவூதி அரேபியா அதன் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளுடனும் உலகப் பங்காளிகளுடனும் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகளில் காணப்படும் சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இரு நாடுகளினதும் உயர் மட்டக் குழுவினர் ஈராக் தலைநகர் பக்தாத்தில் சந்தித்து இரகசியமாகப் பேசி உள்ளனர் என்ற தகவல் கசிந்துள்ள நிலையிலேயே இளவரசர் சல்மான் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.