கொரோனாவை சமாளிக்கும் தமிழகம் | மருத்துவக் கட்டமைப்பில் `தமிழ்நாடு மாடல்’ | ஓர் அலசல்

Date:

உ.பி., பீகார் போலவே ஒரு காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த தமிழ்நாடு, மருத்துவக் கட்டமைப்பில் இன்று தலைசிறந்து விளங்குகிறது. இதற்கு என்ன காரணம்?

கொரோனா 2-வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்து, 24 மணி நேரமும் இடுகாட்டில் சடங்கள் எரிகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் ஒரு படுக்கையில் இரண்டு மூன்று நோயாளிகள் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு பரிதாபமாகப் படுத்திருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் கொரோனா நோயாளிகளுடன் சாலையோரம் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் தினந்தோறும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 13,000 என்ற நிலையிலும், இங்கு மரணம் குறைவாக இருக்கிறது. பாதிக்கப்படுவோருக்கு தரமான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அந்தளவுக்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு மிகவும் வலுவாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே மருத்துவக் கட்டமைப்பில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதற்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களும் கல்வி, மருத்துவம், தொழில்துறை போன்றவற்றில் ஒரே பாதையில், சுமாரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், மற்ற மாநிலங்கள் சென்றுகொண்டிருக்கும் பாதையிலிருந்து சற்று விலகி ஒரு மாநிலம் செல்ல ஆரம்பித்தது. அது, வளர்ச்சியிலும் விரைந்து செல்லத் தொடங்கியது. அதுதான், தமிழ்நாடு. உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில்துறை, கல்வி, மருத்துவம் என பல துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்தது. எனவேதான், தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்ற பேச்சு பரவலாக இருக்கிறது

உலக அளவில் மருத்துவச் சுற்றுலாவுக்கு மிகச்சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்குகிறது. பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மருத்துவச் சிகிச்சைகளுக்காக லட்சக்கணக்கில் இங்கு வந்துசெல்கிறார்கள். சகல வசதிகளையும் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் ஏராளம். அதேபோல, நடுத்தர வகுப்பினரும் ஏழை எளிய மக்களும் சிகிச்சை பெறுவதற்கு நவீன வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன.

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு வந்துசெல்கிறார்கள். ராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசுப் பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். வட மாநிலங்களிலிருந்தும் இங்கு வருகிறார்கள். பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய மிகப்பெரிய அறுவைச் சிகிச்சைகளை, இங்கு வந்து முற்றிலும் இலவசமாக செய்துகொண்டு போகிறார்கள். மொத்தத்தில், வசதிபடைத்தவர்கள் மற்றும் ஏழைகள் என அனைத்துப் பகுதியினருக்குமான மருத்துவம், சகல வசதிகளுடன் தமிழகத்தில் கிடைக்கிறது என்பதுதான் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் என்கிற ஓர் அமைப்பு தமிழக அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஓர் அமைப்பு வேறு மாநிலங்களில் இல்லை. இதன் சிறப்பு என்னவென்றால், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளும் உபகரணங்களும் பொதுச்சந்தையில் மிகக்குறைந்த விலைக்கு இந்த நிறுவனத்தின் மூலம் வாங்கப்படுகின்றன. அதனால், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்பவர்களுக்குத் தேவையான மருந்துகளை வழங்க முடிகிறது. இதன் மூலம், இந்தியாவிலேயே மிகக்குறைந்த செலவில் மருத்துவம் அளிக்க முடிகிறது. இது மிகப்பெரிய முன்னேற்றம்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அரசு மருத்துவமனைகள் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிவருகின்றன. குறிப்பாக, கொரோனா முதல் அலையின்போதும், தற்போதைய இரண்டாம் அலையின்போதும் பாதிக்கப்பட்டோரின் உயிரைக் காப்பாற்றுவதில் அரசு மருத்துவமனைகள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது. மருத்துவத்துறையில் இத்தகைய அளப்பரிய வளர்ச்சியை தமிழகம் எட்டியது எப்படி என்ற கேள்வியை சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை தலைவரான பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் முன்வைத்தோம்.

“தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற சுகாதாரக் கட்டமைப்பு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டைப் போல கேரளாவும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். அதே நேரத்தில், கேரளாவைவிட பல இன்டிகேட்டர்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. இவ்வளவு பெரிய வளர்ச்சியை ஓரிரு நாளில் தமிழ்நாடு எட்டிவிடவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக இதற்கான விதை போடப்பட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், நீதிக் கட்சி ஆட்சியிலேயே இது தொடங்கிவிட்டது.

காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தின் பலனாக கிராமப்புற குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு வர ஆரம்பித்தார்கள். கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் வருவதற்கான வாசல்களை சத்துணவுத் திட்டம்தான் திறந்துவைத்தது. அண்ணா முதல்வராகி, அவரது மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராக வந்தவுடன், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, பட்ஜெட்டில் அதிகமான தொகை அவற்றுக்கு ஒதுக்கப்பட்டது.

அப்போதுதான், ‘தமிழ்நடு வளர்ச்சி மாடல்’ என்பது உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடல் என்பது ஒரு வித்தியாசமான மாடல். இதை, திராவிட இயக்கங்களின் வளர்ச்சி மாடல் என்றும் சொல்லலாம். மக்களுக்கு நேரடியாக எது தேவையோ, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தார்கள். கருணாநிதி உருவாக்கிய அந்தப் பாதையில் அடுத்து வந்த ஆட்சியாளர்களும் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எனவே, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சமூகநல நோக்கத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஒரு தொடர்ச்சி இருந்தது. இன்றைக்கு இந்தியாவிலேயே மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு அதுதான் காரணம்” என்றார் ஜோதி சிவஞானம்.

உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் மாநில அரசுகள் கடன்கள் வாங்கி பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. கடன் கொடுப்பவர்கள் பல நிபந்தனைகளை விதிப்பதும் வழக்கம். அவர்களின் நிபந்தனைகளுக்கு பல மாநில அரசுகள் பணிந்து போவது உண்டு. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, அதைப் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டில் கருணாநிதியாக இருந்தாலும் ஜெயலலிதாவாக இருந்தாலும், அவர்களின் ஆட்சிக் காலங்களில் உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன்கள் வாங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது, கடன் கொடுக்கும் அமைப்புகள் முன்வைக்கும் நிபந்தனைகள் அனைத்துக்கும் பணிந்துபோகவில்லை. மாறாக, தமிழகத்துக்கு எது தேவையோ அவற்றை தேர்ந்தெடுத்து செய்யக்கூடியவர்களாக தமிழக முதல்வர்கள் இருந்தனர்.

குறிப்பாக, சமூகநலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க வேண்டும் என்று அழுத்தங்கள் வந்தபோதும், தனியார்மயத்துக்கான நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டபோதும், அவை எல்லாவற்றுக்கும் தமிழக ஆட்சியாளர்கள் இணங்கிப்போய்விடவில்லை. மருத்துவத் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள மிகப்பெரிய வளர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...