முஸ்லீம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சமும் அழுத்தங்களும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிண்ணியா நகர சபையின் அமர்வில் நேற்று(20)உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் இந்த நாட்டிலே வாழுகின்ற சிறுபான்மை சமூகமாகிய அப்பாவி முஸ்லிம் சமூகம் பல்வேறு சொல்லொணாத் துண்பங்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் இந்த அப்பாவி முஸ்லீம் சமூகம் திட்டமிட்டு தாக்கப்படுகின்றார்கள்.
முஸ்லிம் தலைமைத்துவங்கள், கல்விமான்கள், உலமாக்கள் போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்கள். இஸ்லாமிய இயக்கங்களை தடை செய்தல், அவர்களுடைய சொத்துக்களை அரசுடமை ஆக்குதல், பள்ளிகளை மூடுதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் தொழுகைக்கு அனுமதிக்கப்படுதல் , மதரஸாக்களை மூடுதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேற்ற படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
பள்ளிகளிலும் மதரஸாக்களிலும் அடிப்படை வாதம் மத வாதம் போதிக்கப் படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் பொய்யாக குறைகள் காணப்படுகின்றது.
ஆனாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப் படக் கூடாது. முஸ்லீம் சமூகம் மாத்திரம் வீணாக பழி வாங்கப் படுகிறார்கள். சட்டம் என்பது எல்லோருக்கும் சமமாக பயன்படுத்தப் பட வேண்டும்.
இவ்வாறான சூழ் நிலையில் முஸ்லீம்கள் மிக நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். முஸ்லீம் தலைமைகளும் உலமா சபையும் பெரும்பாண்மை சமூகத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும் அல்குர்ஆன், ஹதீஸ், மதுரஸாக்கள், பள்ளிகள் பற்றி தெளிவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொலீஸாரும், பாதுகாப்பு தரப்பினரும், பௌத்த மதகுரு மாரும் அல் குர்ஆன், ஹதீஸ்,பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மதுரஸாக்கள் , பள்ளிகளுக்குள் சென்று அங்கு நடப்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் இந்த முஸ்லீம்களின் அப்பாவித் தனத்தை அவர்கள் அறிய வேண்டும். அது பௌத்த மக்களுக்கு தெளிவு படுத்தப் பட வேண்டும். இதற்கான பொறிமுறையை அரசாங்கமும் நாமும் இணைந்து செயற்படுத்த வேண்டும்.
இல்லாவிடின் இந்த முஸ்லீம்கள் மீதான பெரும்பான்மை மக்களின் சந்தேகம் குறையப் போவதில்லை. கடும் போக்காளர்களின் துவம்சம் கட்டுப்படப் போவதில்லை. இனவாத அரசியல் செய்வோர் இதை கைவிடப் போவதுமில்லை. நாட்டின் அழிவை நோக்கிய பயணம் நிறுத்தப் படப் போவதுமில்லை.
எனவே பொது மக்களிடையே அச்சமின்றி வாழ்வதற்கும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கும் இனங்களுக்கிடையிலான அச்சத்தையும் வீண் சந்தேகத்தையும் போக்க அரசாங்கமும் சமூகத் தலைவர்களும் செயற்பட தயாராக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.