ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் (UNHCR) இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றுவதில் பிரிட்டன் முன்னின்று உழைத்தள்ளது. 30 வருட சிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்மானத்தில் கேற்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் தூர நோக்கற்ற கொள்கைகளும் அது விளைவித்துக் கொண்ட குழப்பங்களும் தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட முக்கிய காரணங்களாகும். அது ஒரு புறம் இருக்க இங்கே எழுப்பப்பட வேண்டிய பிரதான கேள்வி அமெரிக்காவும் பிரிட்டனும் சுமார் 18 வருடங்களுக்கு முன் ஈராக்கில் இழைத்த காட்டுமிராண்டித்தனம், கொடுங்கோல் மற்றும் மனித உரிமை மீறல் யுத்தக் குற்றங்களுக்காக ஏன் இன்றுவரை இவ்வாறான ஒரு தீர்மானம் UNHRC இல் முன்வைக்கப்படவில்லை?
மார்ச் 2003இல் ஈராக்கிடம் பாரிய அழிவை ஏற்படுத்தும் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய் உரைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக் மீது படையெடுப்பை நடத்தின. இந்த ஆக்கிரமிப்பு மற்றும் படை எடுப்பின் பிரதான பங்காளிகளாக அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளாயர் மற்றும் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஜுனியர் ஆகியோர் பிரதான பங்காளிகளாகச் செயற்பட்டனர். இதன் மூலம் அன்றைய காலகட்டத்தி;ல் பெரும்பாலும் அபிவிருத்தி கண்டிருந்த ஈராக் இன்று சவக்காடாக மாற்றப்பட்டுள்ளது.
யூப்பிரடீஸ், தைக்கிரீஸ் நதிகளுக்கு நடுவே 7000 வருடங்களுக்கு முற்பட்ட மெசபொதேமியா, சூமா, அக்காத், பாபிலோனியா, அஸிரியா போன்ற பழம்பெரும் மனித நாகரிகங்களின் தோற்றுவாயாக செழித்தோங்கிய பிராந்தியமே ஈராக் ஆகும். இதற்கு மேலதிகமாக நவீன எண்ணெய் வளமும் நூற்றாண்டுகளுக்கு மேலாக அங்கே பெருக்கெடுத்து ஓடியது. இவை அணைத்துமே அமெரிக்கா மற்றும் நவ ஐரோப்பிய காலணித்துவவாத ஆதிக்கவாத சக்திகளால் கற்பழிக்கப்பட்டன என்று கூறினால் கூட அது மிகையாகாது.
உதாரணத்துக்கு முதலாம் உலகப் போருக்கு முன்பிருந்தே அமெரிக்க கொள்கையின் பிரதான கருப்பொருளே ஈராக்கின் எண்ணெய் வளச் செல்வத்தை தனது கடடுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து வைத்திருப்பதாகும். 1927ல் ஈராக்கின் மோசுல் பிராந்தியத்தில் மிகப் பாரிய அடர்த்தியான எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் பெற்றோலியம் (அன்றைய ஆங்கிலோ ஈரானிய) கம்பனியை உள்ளடக்கிய ஈராக்கிய பெற்றோலியக் கம்பனி, ஷெல், மோபில், எக்ஸொன் (அன்றைய நியு ஜெர்ஸி எண்ணெய்; கம்பனி) என்பன இவற்றின் மீது பூரண கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஒல்லாந்து என்பன தமக்கு இடையில் 23.75 வீதம் என்ற அடிப்படையில் இந்த வளங்களைப் பகிர்ந்து கொண்டன. எஞ்சிய ஐந்து வீதம் இந்த கொடுக்கல் வாங்களை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்த baron Caloste Gulbenkin நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த செல்வத்தின் சட்டபூர்வ முழுச் சொந்தக்காரர்களான ஈராக்கிற்கு இதன் மூலம் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் அந்த மக்கள் கிளர்ந்தெழுந்தனர். பிரிட்டன் தனது யுத்த விமானங்கள் மூலம் நச்சு வாயுக்களைத் தூவி இந்த கிளர்ச்சியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டது. மனித வரலாற்றில் விமானத்தில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சு வாயுக்கள் தூவப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும். சுலைமானியா நகரிலேயே இந்த நச்சு வாயு தூவப்பட்டது
இந்தக் கொடுமைகள் யாவற்றுக்கும் அப்பால் ,ஈராக் நவீன உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், கல்வி மற்றும் ஏனைய வசதிகளோடு பெரும்பாலும் அபிவிருத்தி கண்ட ஒரு நாடாக தலைநிமிர்ந்து நின்றது. அந்த நாட்டு மக்கள் அதி உயர் வாழ்க்கைத் தரத்தையும் அனுபவித்தனர்.
அதன் பிறகு 1979ல் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி இடம்பெற்றது. அப்போது அமெரிக்க, ஐரோப்பிய, வளைகுடா மற்றும் அரபு தலைவர்கள் ஒன்றிணைந்து அப்போதைய ஈராக் ஜனாதிபதியைத் தூண்டிவிட்டு ஈரானுக்கு எதிரான யுத்தத்தை அவர் மீது திணித்தனர். இந்த யுத்தம் எட்டு வருடங்கள் நீடித்தன. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். சுமார் 100 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் இந்த யுத்தத்தில் செலவிடப்பட்டதாக சில மதிப்பீடுகள் கூறுகின்றன. இதனால் மேற்குலக ஆயுத உற்பத்தித்துறை பூத்துக் குலுங்கியது.
1988ல் இந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மீண்டும் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷால் தூண்டப்பட்ட ஈராக் ஜனாதிபதி சதாம் ஹ{சேன் குவைத் மீது படையெடுப்பு நடத்தினார். குவைத்துக்குள் ஈராக்கிய படைகள் பிரவேசித்ததும் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மிக மோசமான அழிவை உருவாக்கும் குண்டுத் தாக்குதலை தொடராக மேற்கொண்டு ஈராக்கிய நகரங்களை தவிடு பொடியாக்கி அதை மீண்டும் பழைய சிதைவுற்ற நிகரின் நிலைக்கு கொண்டு வந்தனர். மனித உடல்களை துண்டு துண்டாக்கும் கொத்தணி குண்டுகளும் நேபாம் குண்டுகளும் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளும் இந்தத் தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டன. இவை கிட்டத்தட்ட ஒரு சிறிய அணு குண்டுத் தாக்குதலின் விளைவை ஏற்படுத்தின.
இதனால் பாதிக்கப்பட்ட ஈராக் மக்களின் உடல்கள் உருகி வழிந்தன. ஈராக் மீது அமெரிக்கா வீசிய குண்டுகளின் எண்ணிக்கை இரண்டாம் உலகப் போரின் போது நேசப் படைகள் எதிரி இலக்குகள் மீது வீசிய குண்டுகளின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். இந்தமுறை மோசமான இந்தக் குண்டுத் தாக்குதல்களுக்கு சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ஈராக் மக்களின் உயிர்கள் பலியாகின. இந்த யுத்தம் மூலம் மேற்குலக ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு கிடைத்த வருமானமோ சுமார் 157 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒருபுறம் காட்டு மிராண்டித் தனமான விமானக் குண்டு வீச்சு, மறுபுறம் மனிதாபிமானமற்ற சர்வதேசத் தடைகள் என்பனவற்றில் சிக்கி ஈராக் என்ற செல்வம் கொழிக்கும் தேசம் சீரழிந்து போனது. இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மூலம் ஐந்து லட்சம் சிறுவர்களும் பலியானதாக புறம்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றுக்கு அப்பால் ஈராக் மக்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு இன்னும் பல துன்பங்களுக்கும் முகம் கொடுத்தனர். நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் போஷாக்கின்மை, பலவிதமான தொற்றுநோய்கள், கருச்சிதைவுகள் என்பனவற்றால் பாதிக்கப்பட்டனர். அத்தோடு ஈராக் மக்களின் ஆயுள் எதிர்ப்பார்க்கை காலமும் சரிவடையத் தொடங்கியது.
பின்னர் 2003ல் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஜுனியரும் தனது பங்கிற்கு ஈராக் மீது மற்றொரு படையெடுப்பை நடத்தினார். இந்த அத்தியாயத்தில் ஈராக்கின் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச பகுதிகளும் ஈவிரக்கமற்ற விமானக் குண்டு வீச்சில் இலக்கு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல்கள் தொடங்கி ஒரு சில தினங்களிலேயே ஈராக் மக்கள் குடிநீருக்கு அல்லல் படத் தொடங்கினர். மின்சாரம், மருத்துவம், உணவு, உறைவிடம் என அது நீடித்தது. இந்த பயங்கர குண்டு வீச்சால் ஒரு சாதாரணக் குடிமகன் எந்தளவு பாதிக்கப்பட்டிருப்பான என்று கற்பனை செய்வது கூட கடினமாயிற்று. தினசரி ஈராக்கின் வான் பரப்பில் இருந்து மழை பொழிந்ததோ இல்லையோ அமெரிக்க விமானங்களின் குண்டு மழை மட்டும் தவறாமல் பொழிந்தது. பூமியே அதிர்ந்து குலுங்கும் வகையில் அது அமைந்திருந்தது. அபிவிருத்தியில் செழித்தோங்கிய பூமி இரத்த வெள்ளத்தில் மூழ்கியது.
அமெரிக்கப் படைகள் ஈராக்கிய இளம் பெண்களை கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து கற்பழிக்கும் காட்சிகள் வெளியாக உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. எந்தவிதமான உதவியும் பாதுகாப்பும் இன்றி தமது வீடுகளுக்குள் அச்சத்தால் உறைந்து போயிருந்த பெண்கள் பலவந்தமாக வீதிகளுக்கு இழுத்து வரப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து அமெரிக்க காம வெறியர்களின் இச்சைக்குப் பலியாக்கப்பட்டனர். இந்த மக்களைக் காப்பாற்றவே தாங்கள் அங்கு சென்றுள்ளதாக உலகுக்கு விளக்கம் அளித்த அமெரிக்கப் படையினர் மிகக் கேவலமாகவே அங்கு நடந்து கொண்டனர்.
சாதாரண இல்லத்தரசிகள், தாய்மார், மகள்மார். என எந்தப் பெண் பிரிவும் விட்டு வைக்கப்படவில்லை. இவர்கள் எல்லோருமே நாகரிகமான மிகவும் கௌரவமான பாரம்பரியமான ஒரு சமூகக் கட்டமைப்புக்குள் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பின்பற்றிய சமயம் பெண்ணின் பனிதத்தன்மைக்கு எப்போதுமே முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளிக்கின்ற ஒரு மார்க்கம். கட்டுக் கோப்பான குடும்ப வாழ்க்கை முறைக்கு அங்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் எந்தக் காரணமும் இன்றி கண்டபடி கைது செய்யப்பட்டனர். மிக மோசமான சித்திரவதைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். இந்த சித்திரவதை முறைகள் கேள்வியுற்று பிற்காலத்தில் உலகம் முழுவதும் அவை வன்மையான கண்டனத்துக்கு ஆளாயின.
உலகப் புகழ் பெற்ற புலிட்சர் விருது வென்ற புலனாய்வு செய்தியாளர் செய்மோர் ஹேர்ஷ் என்பவர் இவற்றைக் கண்டு பிடித்து தொடர் கட்டுரையாக உரிய புகைப் படங்களோடு வெளியிடும் வரை இந்தக் கொடூரங்கள் அனைத்தும் உலகின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டன. பக்தாத் நகருக்கு அருகில் உள்ள அபுகைராப் சிறைச்சாலையில் நடந்த மனித இனமே வெற்கித் தலைகுணியும் வகையிலான அமெரிக்கப் படைகளின் சித்திரவதைக் காட்சிகள் வெளிவரத் தொடங்கி உலகை உலுக்கியது.
புஷ் மற்றும் பிளாயர் ஆகியோருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோஷமிட்டனர். ஆனால் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிரான அந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் இதுவரை ஏன் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படவில்லை? மனித உரிமை, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றின் ஏக காவலர்களாக உரிமை கோரிக் கொண்டிருக்கும் இவர்களே வன்முறைக்கும் யுத்தக் குற்றங்களுக்கும் காரணமானவர்களாக இருந்துள்ளனர். இதுதான் இன்றைய உலக அரசியல். துரதிஷ்டவசமாக இலங்கையின் இனவாத அரசியலால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
லத்தீப் பாரூக்