உலகளாவிய ரீதியில் நோய்ப்பரவல் நிலையை அனுசரித்துக் கொண்டு புனித றமழான் மாதத்தை வரவேற்றுள்ள முஸ்லிம்கள்

Date:

உலகளாவிய ரீதியில் பல மோசமான விளைவுகளையும் கூடுதலான மரணங்களையும் விளைவித்துள்ள கொரோணா வைரஸ் பரவல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருகின்ற நிலையில் உலக முஸ்லிம்கள் தாம் நோன்பு நோற்கும் மாதமான புனித றமழான் மாதத்தை வரவேற்று நோன்பிருக்கவும் தொடங்கி உள்ளனர்.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் இது ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. அதனால் பல குழப்பங ;களும் காணப்பட்டன. ஆனால் இவ்வாண்டு இந்நிலைமைக்கு பழக்கப்பட்டவர்களாக கடந்த ஆண்டின் அனுபவத்தோடு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகப் பின்பற்றியவர்களாக முஸ்லிம்கள் தமது நோன்பு காலத்தை தொடங்கி உள்ளனர்.

இஸ்லாமியக் கலண்டரில் மிகவும் புனிதமானதோர் மாதமே றமழான் மாதமாகும். இந்த மாதத்தில் அல்லாஹ் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு புனித குர்ஆனின் முதலாவது வசனத்தை இறக்கி அருளினான்.

துருக்கியின் ஸ்தான்புல் நகர பள்ளிவாசலில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள்
பிரிட்டனில் செயற்படும் மிட்ல் ஈஸ்ட் ஐ என்ற இணையம் இவ்வாண்டு றமழான் மாதம் வித்தியாசமான அனுபவத்தைக் கொணடு வரும் என்ற நோக்கில் சில விடயங்களை ஆராய்ந்துள்ளது.

றமழான் மாதம் தொடங்குவதற்கு ஓரிரு வாரங்கள் முன்பே சில முஸ்லிம்கள் கடமையாக்கப்படாத (சுன்னத்தான நோன்புகள் : றமழான் மாத நோன்பு கட்டாயக் கடமையாகும்) நோன்புகளை முன் கூட்டியே நோற்பதுண்டு. இது புனித றமழான் மாதத்தை வரவேற்பதற்கான ஒரு முன்கூட்டிய ஆன்மீக ரீதியான செயற்பாடாகும்.

அதிகாலை முதல் நோன்பிருக்கும் முஸ்லிம்கள் தினமும் மாலையில் சூரியன் மறையும் வேளையில் நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வுகளிலும் ஈடுபடுவர். இவ்வேளையில் குடும்ப ரீதியான, நண்பர்கள் மட்டத்தில் மற்றும் சமூக ரீதியான ஒன்று கூடல்கள் இடம்பெறுவதுண்டு. ஆனால் இன்றைய நிலை காரணமாக பல நாடுகளில் இது சாத்தியமாகப் போவதில்லை.

றமழானின் ஒவ்வொரு இரவிலும் தராவீஹ் எனப்படும் விரிவு படுத்தப்பட்ட இரவு நேரத் தொழுகையும் உலகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இடம்பெறும். இந்தத் தொழுகையில் வழமையாக மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்வதுண்டு. ஆனால் இவ்வாண்டு மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சில பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. சில பள்ளிவாசல்கள் மட்டும் உரிய கட்டுப்பாட்டு விதிமுறைகளோடு திறக்கப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவில் உள்ள நபி அவர்களின் பள்ளிவாசல் நிர்வாகிகள் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் 60 ஆயிரம் பேர் மட்டுமே பள்ளிசாவலுக்குள் தொழுகையில் ஈடுபடலாம் என அறிவித்துள்ளனர். அதுவும் குறிப்பிட்ட சமூக இடைவெளி பேணப்பட வேண்டும். நோய்ப்பரவல் காலத்திற்கு முன் இந்தப் பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேர் தொழுகையில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்க நாடான செனகல்லில் பள்ளிவாசல் மைதானத்தில் உரிய சமூக இடைவெளி பேணி மக்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ள காட்சி

கடந்த ஆண்டு சவூதி அரேபியா நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்கா மற்றும் மதீனா ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இருபெரும் புனித ஸ்தலங்களிலும் இரவு நேர தராவீஹ் தொழுகையை தடை செய்திருந்தது.
இவ்வாறான காலப் பகுதியில் பொதுவாக ஹலாகா எனப்படும் கற்கை சுற்று வட்டங்களிலும் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெறுவதுண்டு. சமய ரீதியான போதனைகள் கலந்துரையாடல்கள் மற்றும் கற்கைகள் என்பன இங்கே இடம்பெறும். இது முஹம்மது நபி அவர்களின் காலந்தொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு மரபாகும். இம்முறை இவ்வாறான நிகழ்வுகள் பெரும்பாலும் இணைய வழி தொடர்பாடல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட உள்ளன.
றமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாற்களும் மிகவும் விஷேடமானதும் தெய்வீகம் மிக்கதும் ஆகும். இந்தக் காலம் இறை வழிபாடுகளில் அதிக கவனமும் நாட்டமும் செலுத்தப்படும் காலமாகும். இந்தக் கடைசிப் பத்து நாற்களில் ஒரு நாளில் தான் இறைவேதம் நபி அவர்களுக்கு இறக்கி அருளப்பட்டது. அந்த இரவை சக்தி மிக்க இரவு எனக் குறிப்பிடுவதுண்டு. இது சரியாக எந்த இரவு என்பது தெளிவாகத் தெரியாது. ஆனால் றமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் ஒற்றை இரவுகளில் ஒன்று என்பதே முஸ்லிம்களின் அடிப்படை விசுவாசமாகும்.

இந்த இரவு எப்போது என்ற சரியான விளக்கத்தை முஹம்மது நபி அவர்கள் ஒருபோதும் தெளிவு படுத்தவில்லை. எனவே முஸ்லிம்கள் றமழான் மாதத்தின் இறுதி பத்து தினங்களையும் ஆகக் கூடுதலான வழிபாடுகளிலும், நன்மையான காரியங்களிலும் அதிகமாக அல்குர்ஆனை ஓதுதல் அதன் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளல் என்பன உற்பட பல்வேறு ஆன்மீகச் செயற்பாடுகளில் கழிப்பதுண்டு.
இந்தப் பத்து நாற்களையும் முழுமையாக பள்ளிவாசல்களில் கழிக்கும் பழக்கம் உள்ள முஸ்லிம்களும் உள்ளனர். இந்த செயற்பாடு இஃதிகாப் எனப்படும். இது இறை வழிபாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தும் நடவடிக்கையாகும். ஆனால் இவ்வாண்டு பல பள்ளிவாசல்களில் இதற்கு அனுமதி கிடைக்கப் போவதில்லை. இது வழிபாட்டுத் தன்மையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

காஷ்மீர் பிராந்தியத்தில் பள்ளிவாசலுக்கு வெளியே சமூக இடைவெளி பேணி தொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள்.
றமழான் மாதத்தின் மத்திய பகுதி தான தர்மங்களில் அதிகமாக ஈடுபடும் காலமாகும். மற்றவர்களுக்கு உதவும் பணியில் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தளவுக்கு ஈடுபடுவர். இது தமது விசுவாசத்தின் ஒரு முக்கிய அங்கம் என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையாகும். றமழான் மாதத்தில் இவ்வாறான தான தர்மங்களில் ஈடுபடுவது தமக்கு மேலதிகமாக இறை அருளைப் பெற்றுத் தரும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
கடந்தாண்டு நோய்ப்பரவல் நிலை காரணமாக இந்த தர்மங்களில் குறைவு ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய கணிப்புக்களின் படி அது முன்னைய ஆண்டுகளை விட கடந்தாண்டு மிகக் கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
றமழான் மாதம் முழுவதும் சிலர் சமூக மட்டத்தில் வறுமை ஒழிப்புப் பணிகளில் தொண்டர் அடிப்படையில் ஈடுபடுவதும் உண்டு. மோதல் பகுதிகளிலும், அழிவுப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொதிகளைத் தயாரித்தல், பொதி செய்தல், விநியோகித்தல் என்பன இவற்றில் அடங்கும். இவ்வாண்டு பயணக் கட்டப்பாடுகள் நீடிப்பதால் இந்தப் பிரிவில் தாக்கம் ஏற்படவும் அது தர்மங்களை நம்பி வாழும் மக்களின் வாழ்வில் பாதிப்புக்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.

சிரியா, யெமன், லிபியா, எகிப்து போன்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பொருளாதார சீர்கேட்டை எதிர்நோக்கியுள்ள நாடுகளில் றமழான் மாதம் மட்டுமே சில குடும்பங்களுக்கு இறைச்சி போன்ற உணவு கிடைக்கும் மாதமாகவும் காணப்படுகின்றது.
நோய்ப்பரவலுக்கு முந்திய நிலையில் றமழான் மாதத்தில் மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு விஜயம் செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிப்பதுண்டு. உம்ரா எனப்படும் இந்த விஜயம் அல்லது சிறுயாத்திரை றமழான் மாதத்தில் ஆன்மிக உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
கடந்த ஆண்டு சவூதி அரேபியா கொரோணா வைரஸ் பரவலை அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக புனித நகரங்களுக்கான இந்த விஜயங்களையும் தற்காலிகமாகத் தடை செய்திருந்தது. பயண முகவர்கள் இதனால் பாதிப்புக்களை எதிர் கொண்டதோடு மீண்டும் அதை ஒழுங்கு செய்வதில் குழப்பங்களையும் எதிர்நோக்கினர்.

இவ்வாண்டு றமழான் மாதத்தில் இதற்கான அனுமதியை சவூதி அரேபியா வழங்கி உள்ளது. ஆனால் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் அனைவரும் கட்டாயம் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றி இருக்க வேண்டும் என கட்டாய நிபந்தனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பேணப்படும் றமழான் பாரம்பரியங்களில் ஒன்று வீதிகளில் மேளம் முழங்கி அயலவர்களோடு இணைந்து றமழானை வரவேற்பதாகும். அதிகாலை வேளையில் ஷ{ஹ{ர் எனப்படும் நோன்பிருப்பதற்கான உணவை உண்ணும் வேளையை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் மேளம் முழங்கியவாறு முஷாஹராத்தி எனப்படும் நபர்கள் மக்களை நோன்பு நோற்க விழிக்குமாறு கேட்டு வீதிகளில் வலம் வருவர்.
அடுத்த மாதத்தின் (ஷவ்வால்) புதிய தலைபிறை தென்படுவதோடு றமழான் மாதம் நிறைவடையும். இது ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளைக் குறிக்கும். முஸ்லிம் நாடுகள் பலவற்றில் இது மூன்று தினங்கள் நீடிக்கும் ஒரு பண்டிகைக் காலமாகும். இதன் பிரதான அம்சமான காலை வேளை கூட்டுத் தொழுகையோடு மீண்டும் குடும்ப ரீதியான ஒன்று கூடல்கள் இடம்பெறும். அத்தோடு பெரும்பாலான குடும்பங்களில் அன்றைய தினம் பகல் வேளை உணவை கூட்டாக அமர்ந்து உண்ணுவதும் ஒரு பாரம்பரியமாகும்.

லத்தீப் பாரூக்

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...