திட்டம் ஆரம்பம்/அரசின் எதிர்பார்ப்புகள்!
உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டமானது 2010ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.இதன் ஆரம்ப செலவாக 514 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது.நீரின் கீழ்நிலைத் தேவையைப் பாதிக்காமல் அதிகப்படியான நீரை உமாஓயா ஆற்றுப் பள்ளத்தாக்கின் மேல் பகுதிகளிலிருந்து தென்கிழக்கு வரண்ட மண்டலத்தில் உள்ள கிரிந்தி ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.இதனால் இப்பகுதியில் நீரின் தேவையை உகந்த முறையில் பூர்த்தி செய்யப்படுவதாகவும் , நீருற்றுக்களின் இருப்பிடங்களுக்கும் அது தேவைப்படும் இடத்திற்கும் இடையிலான உயரத்தில் கணிசமான வேறுபாடு காணப்படுவதால் பொருத்தமான நீர் மின்சக்தியை உருவாக்குவது அவசியமானதாகக் கருதப்படுகிறது.இதனால் நீர்மின் உற்பத்திக்கு இதனை திறம்பட பயன்படுத்த முடியும் என்றதாகவும் எதிர்பார்க்கப்பட்டது.இவற்றில் தேவையான நீரானது முதலாவது அணையான புஹுல்பொல அணைக்குப் பின்னால் சேமிக்கப்படுவனால் பெறப்படுகிறது.இது உமா ஓயா ஆற்றை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்நீர் தைராபா பகுதியிலுள்ள மஹா தொதில்ல ஓயா ஆற்றை மையப்படுத்தி கட்டப்பட்டுள்ள மற்றொரு அணையை உடைய நீர்த்தேக்கத்தினூடாக அமைந்துள்ள சுமார் 3.75 கி.மீ தூர சுரங்கப்பாதை வழியாக நிலத்தடி மின்நிலையத்திற்கு அனுப்பப்படும் அத்தோடு மின்சக்தி நிலையத்திலிருந்தான வெளியேற்றம் சுமார் 3.6 கி.மீ தூரம் கொண்ட டெயில்ரேஸ் சுரங்கப்பாதை வழியாக கிரிந்தி ஆற்றின் கிளை நதியான அலிகொட ஏரி ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.உமாஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தென்கிழக்கு உலர் மண்டலத்திலிருந்து 5000ஹெக்டர் புதிய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு 23 கி.மீ சுரங்கப் பாதை வழியாக உமா ஓயாவிலிருந்து கிரிந்தி ஓயா வரை 145 எம்.சி.எம் தண்ணீரை திருப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் ஊடாக அனைத்து இலங்கையருக்கும் பயனளிக்கும் வகையில் தேசிய மட்டத்தில் சுமார் 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஒரு நீர்மின் உற்பத்தி ஆலையை அமைப்பதும் நோக்கமாக கொள்ளப்பட்டது.இத்திட்டத்தின் தனிக்கூறுகளாக விரிவான பரப்பளவில் பரந்து காணப்படுவதோடு , ஒன்றிலிருந்து மற்றொன்று வெகுதொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.எனவே , ஐரோப்பா மற்றும் ஈரானைச் சேர்ந்த நன்கு தேர்ச்சி பெற்ற ஆலோசனைப் பொறியியலாளர்கள் விசாரணை,ஆய்வு மற்றும் மேற்பார்வைக்கு பணியமர்த்தப்பட்டனர்.இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளாக ஆண்டுக்கு 231 ஜிகா வாற் மின்சாரம் உற்பத்தி செய்யும் தேசிய மின் தொகுப்புக்கு 120 மெகா வாற் மின்சாரம் மேலதிகமாக சேர்க்கப்படுகிறதாகவும் ,இது தற்போதுள்ள மின்சக்தி கொள்ளளவில் சுமார் 5 வீதத்திற்குச் சமமானதாகும்.இது நாட்டின் முன்னேற்றப் பாதையில் இது ஒரு முக்கிய படியாக எதிர்பார்த்திருந்தனர்.
தென்கிழக்கு உயர் மண்டலத்தில் விவசாய நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதாக எதிர்பார்க்கப்பட்டது.குறிப்பாக ஹம்பாந்தோட்டை , மொனராகலை, அம்பாறை மற்றும் அயல் மாவட்டங்கள் இவற்றில் அடங்கும்.இவற்றினால் உணவு உற்பத்தி நடவடிக்கையின் அதிகரிப்புக்கு வழிவகுப்பதோடு நாட்டின் வேலையில்லாப் பிரச்சினையை குறிப்பிட்ட அளவுக்கு குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.இத் திட்டத்தில் அமையப் பெறும் இரண்டு அணைக்கட்டுகள் மூலம் நீர்வளத்தை சிறப்பாக நிர்வகிக்க முடிந்ததாகவும் ,இவை வரண்ட காலங்களில் நீரை சேமிக்க உதவுவதோடு ,வெள்ளநீரை பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்தவும் வழி செய்வதாகவும் இவை தொழில் துறையின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என கடந்த காலத்தில் அரசு கனவு கண்டது.
நல்லாட்சியில் உமா ஓயா திட்டம்!
2017ஆம் ஆண்டு உமா ஓயா திட்டத்தின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இது தொடர்பான அறிவிப்பினை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளராக நல்லாட்சியில் இருந்த அனுர திசாநாயக்க வெளியிட்டிருந்தார்.இந்த முடிவானது கடந்த நல்லாட்சியில் உத்தேசிக்கப்பட்டதற்கான காரணங்களாக , நீரை எடுத்துச் செல்லும் சுரங்கப் பாதையில் பெருமளவிலான நீர்க்கசிவு ஏற்படுவதளாலும் , மக்களின் போராட்டங்களை முன்னிலைப்படுத்தியுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமா ஓயா திட்டத்தினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் குறித்து நேரடியாக விரிவாக ஆராய்வதற்காக நோர்வே நாட்டின் விஞ்ஞான தொழில் நுட்பவியலாளர் குழுவினரின் உதவியை பெற்றதோடு இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க முன்னாள் பதுளை மாவட்ட அரச அதிபர் நிமால் அபயசிரியிடம் 300 மில்லியன் ரூபா நிதித்தொகை அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றது.உமாஓயா வேலைத்திட்டத்தினால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களின் நன்மை கருதி ,பண்டாரவளையை அண்மித்த பெருந்தோட்டமொன்றில் ஆரம்ப கட்டமாக ஐம்பது ஏக்கர் காணியை சுவிகரீக்கவும் நல்லாட்சி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்த தகவலை உமாஓயா திட்டம் குறித்து பரிசீலனை செய்ய நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட குழுவின் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.இவ் வேலைத்திட்டத்தினால் சுமார் நாற்பதாயிரம் பேர் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் பெருமளவிலானோருக்கு வாழ்வாதாரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது இதனால் அவர்கள் தத்தமது வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இப் பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்காவிட்டால் தோண்டப்பட்டிருக்கும் சுரங்கப் பாதைகளினது இருமருங்கிலும் நுழைவாயில்களை அடைத்து மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் நல்லாட்சி அரசில் மக்கள் தெரிவித்திருந்தனர்.இத் திட்டத்தினால் பண்டாரவளை மாநகரம் பாதிக்கப்படவிட்டாலும் கூட, மாநகரை அண்மித்த பகுதிகள் பலவும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளன.ஆனாலும் பண்டாரவளை மாநகர் உள்ளிட்டு அனைத்து பகுதிகளின் மக்கள் குடிநீரினைப் பெற்றுக் கொள்வதற்கும் பல்வேறு சிரமங்களையும் ,அசெளகரியங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.80%மான பெரும்பான்மையான மக்களாக முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் இத் திட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இத்திட்டத்தில் மின் அபிவிருத்தி திட்டமொன்றும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு நீரை எடுத்துச் செல்லும் திட்டமும் உள்ளடக்கியுள்ளது.அத்துடன் டயரபா என்ற இடத்திலிருந்து புகுல்பொலை வரைக்குமான நீரை எடுத்துச் செல்லும் சுரங்கப்பாதையொன்றும் புகுல்பொலையிலிருந்து கரந்தகொல்லைக்குமான நீரை எடுத்துச் செல்லும் சுரங்கப் பாதையொன்றும் அமைக்கப்பட்டுள்ளன.இச் சுரங்கப் பாதையிலேயே பெருமளவிலான நீர் கசிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.இச் சுரங்கப் பாதை 600 அடி ஆழத்திலேயே அமைந்துள்ளது.நீர் கசிவுகளை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படாமையினால் சுரங்கப்பாதை நிர்மாண வேலைகள் ஆமை வேகத்திலே கடந்த காலத்தில் இருந்து இடம்பெற்று வந்துள்ளது. நீர் கசிவினை தடுக்கும் வகையில் வெளிநாட்டு தொழில்நுட்பவியலாளர்களின் உதவி இருந்ததாக கடந்த கால முயற்சிகள் எடுத்துக்காட்டுகின்றது.
தற்போதைய நிலையில் பெருந்தொகையான வீடுகள் ,கட்டடங்களுடன் விகாரைகள், பள்ளிவாசல் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களிலும், பாடசாலைகள் பலவற்றிலும் பெரும் பாதைகளிலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன . பண்டாரவளையை ஊடறுத்துச் செல்லும் ஹீல்ஓயாவின் சிசில ஓயா என்றழைக்கப்படும் ஆறும் முற்றாக வற்றியுள்ள நிலையிலேயே உள்ளது.நுவரெலியாவிற்கு அடுத்தபடியாக பண்டாரவளை மாநகரமே உல்லாச புரியாகவும் பசுமை மிகு பகுதியாகவும் காணப்பட்டது. எனினும் அத்தகைய வசந்த சூழலை இன்று பண்டாரவளையில் காணமுடியாதுள்ளது. இத்தகைய அவல நிலையினால் பண்டாரவளை பகுதியில் தொழில்களை ஆரம்பிப்பதற்காக முதலீடுகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் தயக்கம் காட்டி வருவதுடன் ,காணிகளை கொள்வனவு செய்யும் எவரும் முன் வருவதாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.பல வருடங்களுக்கு முன் கொள்வனவு செய்த காணிகளையும் உரியவர்கள் விற்பனை செய்து கொள்ளவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது.
மகாவலி அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு பிறகு நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய வேலைத் திட்டமாக உமாஓயா கருதப்படுகிறது. இவ் வேலைத்திட்டம் தொடர்பாக கடந்த 1991 ஆம் ஆண்டில் செயல் முறை வரைபடம் தயாரிக்கப்பட்டது. அவ்வேளையில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின் போது இத் திட்டத்தினால் பாரிய பாதிப்புகளும், சூழல் மாசடையும் நிலையும் ஏற்படுமென்று தெரியவந்துள்ளது. அதனால் அக்காலத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி உமா ஓயா ஓயா திட்டம் தொடர்பான முன்னெடுப்புக்களை கைவிட்டது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கைவிடப்பட்ட உமாஓயா குறித்த வரைபடம் மற்றும் செயல் திட்ட அறிக்கை மீண்டும் தூசு தட்டப்பட்டு அதற்கு உயிரூட்டபட்டது .அதன டிப்படையில் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கொட்டாயாரே என்ற இடத்தில் உமாஓயா வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கும் வகையில் வைபவரீதியாக அடிக்கல் நாட்டப்பட்டது. அதையடுத்து சலுகை அடிப்படையில் வட்டி முறையுடன் ஈரான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு உமா ஒயா திட்டத்தின் வேலைகள் ஆரம்பமாகியது.
உமா ஓயாவினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் நிலை….
உமா ஓயா மாதொட்டில்ல ஓயா டயரபா தோட்டப் பகுதியை ஊடறுத்து மேற்கொள்ளப்படும் நீர்த்தடாகங்களில் சேமிக்கப்படும் நீர் 17 1/2 கிலோ மீற்றர் நீளமான சுரங்கப்பாதை நீர்க்குழாய் அமைக்கப்பட்டு அதனூடாக கரந்தகொள்ளை நீர் மின் திட்டத்தில் தேவையான மின் உற்பத்தியைப் பெற்றதும் ,அதனுள்ளே நீர் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம் மாவட்டங்களில் கமநல துறையில் துரித அபிவிருத்தியை முன்னெடுப்பதே இத்திரைப்படத்தின் நோக்கமாகும்.
இத் திட்டத்தின் மூலம் பண்டாரவளை,வெலிமடை ,ஊவா பரணகம உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் ஆகக் கூடுதலான கிராமங்களின் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அம்மக்கள் அனாதைகளாக்கப்பட்டனர்.விவசாயிகளாக இருந்த இப்பகுதியின் ஆயிரக்கணக்கான மக்கள் கூலித் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை நிலத்தடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட போதிலும் ,அச் சுரங்கத்தில் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி நீர்க்கசிவு ஆரம்பத்தில் ஏற்பட்டதோடு , பண்டாரவளை மக்களின் வாழ்வாதாரம் பூச்சிய நிலைக்கு தள்ளப்பட்டது.ஹீல் ஓயா ,எகடகம,மெதபேருவ ,பல்லேபேருவ உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஊற்றுக்கள் வற்றியதுடன் கிணறுகளும் வற்றத் தொடங்கின.பாதைகள்,மேட்டு பூமிகள் ,தாழிறங்கவும் , வீடுகள் , கட்டிடங்கள் ஆகியவற்றில் வெடிப்புக்கள் ஏற்படவும் தொடங்கின.பண்டாரவளையில் மட்டும் 2303 வீடுகள் மற்றும் உயர் கட்டிடங்கள் இரண்டு ,பாடசாலைக்கட்டிடங்கள் என்ற வகையில் பாரிய வெடிப்புக்கள் ஏற்படத் தொடங்கின.
கடந்த காலங்களில் உமாஓயா வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.கடந்த 2017 ம் ஆண்டு மக்கள் திரண்டு இத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.அப்போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது.
உமா ஓயாவினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்….
உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்தால் ஏற்பட்ட விளைவால் நீர்நிலங்கள் வற்றிப்போனதோடு , பாதிக்கப்பட்ட நெல் நிலங்களுக்கான இழப்பீடுகளை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
2016ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பதவியில் இருந்த அரசுகள் இவை பற்றி அறிந்திருந்தாலும் அவை வெறும் கானல்நீராகவே போயுள்ளது.நூற்றுக்கணக்கான ஆவணங்களை கிராமவாசிகள் அரச அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தனர்.என்.பி.ஆர் அறிக்கையானது உமா ஓயா அகழ்வாராய்ச்சி காரணமாக விவசாய சேவைகள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர் என்பதை வெளிக்கொண்டு வருகின்றது.கடந்த ஐந்து ஆண்டுகளாக இப்பகுதிகளில் எந்த நிவாரணங்களுமின்றி விவசாயிகள் பரிதாபமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது கவலைக்கிடமானது.
உமாஓயா சுரங்கப் பாதையானது குருகுதே மற்றும் வரகாகந்தா கிராமங்களுக்கு கீழே உள்ள டயாரபா அணையில் இருந்து தொடங்குகிறது.இந்த கிராமமானது பதுளை மாவட்டத்தின் ஹாலி எல்லை வாக்காளர் பிரிவிற்குள் அமைந்துள்ளது.வரகாகந்த கிராமத்தில் மட்டும் 65 ஏக்கர் கைவிடப்பட்ட நிலங்கள் உள்ளன . அத்தோடு குருகுதே கிராமத்தில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் கைவிடப்பட்டுள்ளன.நீர் நிலைகள் வரண்டு போயுள்ளதால் உதவியற்ற குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 700ஆக அதிகரித்துள்ளது.
இவற்றின் உண்மை நிலையை அறிவதற்காக நாம் அங்கு சென்றிருந்த போது மக்களில் பலர் அவர்களது ஆதங்கங்களை முன்வைத்தனர்.
(விவசாயி ஒருவரின் குரல் பதிவு)
இரண்டு கிராமத்திற்கும் நடந்த அநியாயத்தை கேட்க இன்று வரை யாரும் இந்தப் பக்கம் வரவே இல்லை.ஒட்டு மொத்த கிராமத்திற்கும் நீர் வழங்கிய இரண்டடி ஆழத்தோடு கிணறு ஒன்று இருக்கின்றது.அதனை அமைப்பதற்காக 20இலட்சம் செலவழிக்கப்பட்டது. இந்த கிராமத்திற்கே நடந்த முதலாவது அநியாயமாக 80 குடும்பங்களுக்கும் நீர் வழங்கிய கிணறு வற்றிப்போனதுதான் . அதன் பிறகு தான் இந்த கிராமத்தில் இருக்கின்ற விவசாய நிலங்களில் விவசாயத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாமல் போனது.
பயிர்கள் செழிப்பாக வளர்வதில்லை.ஒரு விவசாயி தனது நிலத்தில் விவசாயம் செய்ய 25000 செலவு செய்ய வேண்டியுள்ளது.அப்படியிருந்தும் தனது நிலத்தில் பயிர்கள் செழிப்பாக வளராமையினால் குறித்த விவசாயி தனது விவசாய நிலத்தை கைவிட்டு இன்று கூலிவேலைகளை செய்து கொண்டிருக்கிறான்.
விவசாயிகளாகிய நாங்கள் உமாஓயாவுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களை சந்தித்து கூறியும் எந்த பலனும் இல்லை, குடிக்க நீரும் இல்லை, விவசாயம் செய்ய நீரும் இல்லை என்பதே கவலைக்கிடமானது.இன்றுவரை எந்த அரசாங்க உத்தியோகத்தர்களோ, தனியார் நிறுவன உத்தியோகத்தர்களோ எந்த வித முடிவையும் எடுக்கவில்லை அதனால் நாம் கேட்பது என்னவெனில் , அன்று எமக்கு இருந்த அந்த செழிப்பான நிலங்கள் மீண்டும் தேவை என்பதாகும்.இதற்கு முன்னர் எடுத்த புகைப்படங்களும் எம்மிடம் இருக்கின்றன. 3-4 வருடங்களாக தொடர்ந்து நிலங்கள் அனைத்தும் வரண்டு போயுள்ளது.இதனால் விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்டுள்ள விவசாயிகளுக்கு செய்வதறியாது கட்டுமானத் தொழில்களையும் செய்து வாழ்க்கையை நடாத்தி வருகின்ற நிலை உருவாகியுள்ளது.
நாங்கள் தயவாய் கேட்பது என்னவெனில் அரச அதிகாரிகள் தங்களுடைய கண்களை திறந்து இவற்றை பார்க்க வேண்டும் என்பதுதான்.
ரன்ஜித்
( சங்கத்தின் செயலாளர்)
உமா ஓயா செயற்திட்டத்தால் பாதிப்படைந்த பகுதிகள் சுமார் 65 ஏக்கர் இருக்கின்றது. இந்த 65 ஏக்கரிலும் செழிப்பாக வளர்ந்த அனைத்துப் பயிர்களும் அழிவடைந்து விட்டது. இந்த கிராமத்தின் வரலாற்றைப் பொருத்தவரையில் கடையிலிருந்து அரிசி வாங்காத விவசாயிகள் தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்று மனிதர்களின் எலும்புகளையும் சேர்த்தே கொடுக்க வேண்டியுள்ளது. நீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயம் செய்யவும் வழி இல்லாமல் இருக்கின்றது .நீர் தட்டுப்பாடு குறித்து அரச அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட கிட்டத்தட்ட நூறு கடிதங்கள் என்னிடம் இருக்கின்றது. இவை பிரதேச உத்தியோகத்திலிருந்து நாட்டு ஜனாதிபதி வரை உள்ளடங்குகின்றன. இந்த கடிதங்களுக்கு பதில் கடிதங்கள் மாத்திரமே அனுப்பி இருக்கின்றார்கள். இதற்கு ஏற்ற முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என கூறுகின்றார்கள் ஆனால் இதுவரையில் எதுவும் கிடையாது. இன்று வரை விவசாய நிலங்களுக்கான ஒரு ரூபா கூட கொடுக்கவில்லை அதனால் சிலர் கை , காதுகளில் போட்டிருந்த நகைகளை அடகு வைத்து தங்களுடைய விவசாய நிலங்களுக்கான 2500 ரூபா கட்டினார்கள். இப்போது மறுபடி அவற்றை செலுத்திய பின்னர் ரூபா 5000 கட்டி இருக்கின்றார்கள்.2016 இல் இருந்து 2021வரை ஐந்து வருடங்கள் இப் பணத்தை கட்டிக்கொண்டு தான் இருக்கின்றோம்.
எங்களுக்கு 25/100 தர இருப்பதாக கேள்விப்பட்டோம்.எங்களுக்கு அவ்வாறு தேவையில்லை.எமது தேவை 100/100 தர வேண்டும் என்பதேயாகும்.தேர்தல் காலங்களில் தான் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான அதிகப்படியான கோஷங்கள் எழுப்பப்படுகிறது.ஆனால் தேர்தலின் பின்னர் இவை பற்றி கதைக்க அமைச்சர்களை , அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அதற்கு பதிலளிக்க மாட்டார்கள்.
இவர்களுக்கான உரிய தீர்வை ஒரே நாடு ஒரே சட்டம் என கோஷம் எழுப்பும் இந்த அரசு வழங்குமா? என்பது கேள்விக்குறியாகும்.
தொகுப்பு:அப்ரா அன்ஸார்