உலக நாடுகளே கொரோனா அலையில் தத்தளித்துக்கொண்டிருக்க, சீனா ஏறக்குறைய கரையைக் கடந்திருப்பது மலைக்க வைக்கிறது.
அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்த திணறிக்கொண்டிருக்க சீனாவோ எப்போதோ இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் சீனா 93-வது இடத்தை பிடித்திருக்கிறது. ஓராண்டுக்கும் மேலாக உலகைக் கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் வூஹானிலிருந்து பரவியது உலக நாடுகள் அறிந்ததே.
முதன்முதலில் சீனாவில்தான் கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டதால், “இது சீன ஆய்வகத்திலிருந்துதான் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளது. சீனா பிற நாடுகளுக்கு எதிராக நடத்தும் உயிரி போர் இது” என்றெல்லாம் பல ஆதாரமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. உலக நாடுகளே கொரோனா அலையில் தத்தளித்துக்கொண்டிருக்க, சீனா ஏறக்குறைய கரையைக் கடந்திருப்பது மலைக்க வைக்கிறது.
இதுவரையிலான நிலவரப்படி அமெரிக்காவில் மூன்று (3,19,90,143) கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்தியாவும் இதற்குச் சளைத்ததில்லை. ஒரு கோடிக்கும் (1,36,89,453) மேற்பட்ட மக்கள் தொற்றால் அவதிக்குள்ளாகி, உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா.
வூஹானிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் பொருளாதார ரீதியாகவும் நிலைகுலைந்து கிடக்கின்றன. உலகமே இப்படியாகக் களேபரம் கொண்டிருக்க, சீனாவில் தொண்ணூறாயிரத்திற்கு (90,435) மேற்பட்ட எண்ணிக்கையிலானவர்கள்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மொத்த இறப்புகளாக நான்காயிரத்தையே (4,636) கடந்திருக்கிறது சீனா. அமெரிக்கா போன்ற நாடுகள் லட்சக்கணக்கில் (5,76,298) இறப்புகளைச் சந்தித்து வர, ஆயிரங்களிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது சீனா. கொரோனா தொற்றுப் பரவுதலுக்கு எதிராக சீன அரசு கையாண்டு வரும் கட்டுப்பாடுகள்தான் குறைவான இந்த எண்ணிக்கைக்கு முக்கிய காரணம் எனவும், அந்நாடு எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறது எனவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டன. முகக்கண்காணிப்பு சாதனங்கள், செல்போன்கள் ஆகியவற்றின் மூலம் மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்குச் சிறைத்தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை சீன அரசு கொண்டுவந்தது. இப்போது தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கூட போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வலியுறுத்திக்கொண்டே வருகிறது சீன அரசு. இதையடுத்து வைரஸ் பரவத் தொடங்கிய வூஹானும், சீனாவும் எப்போதோ இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டன.
சீனாவை அடுத்து உலகளவில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடான இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தது மகாராஷ்டிரா மாநிலம்.
மகாராஷ்டிரா மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. மீண்டும் மகாராஷ்டிராவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்திலும் ஊரடங்கு போடப்படலாம் என பேசப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி காத்தல் இன்னும் பல கட்டுப்பாடுகளை சீனாவைப் போல மற்ற நாடுகளும் உறுதியாகக் கையாண்டால் கொரோனாவின் அடுத்த அடுத்த அலைகளிலிருந்து மக்கள் தப்பிக்கலாம்.