கொவிட்-19 தடுப்பூசியில் முதலாவது சொட்டு வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது சொட்டை வழங்குவதற்குத் தேவையான அஸ்ட்ரா செனிகா கொவி ஷீல்ட் தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக முதலாவது சுற்றில் அஸ்ட்ரா செனிகா கொவி ஷீல்ட் தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது சுற்றில் வேறு ஒரு உற்பத்தியை வழங்க முடியுமா என்பது பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதலாவது சுற்றில் அஸ்ட்ரா செனிகா தடுப்பு மருந்து இந்தியாவின் செரம் உற்பத்தி நிலையத்தில் இருந்து இந்திய உதவித் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது இரண்டாவது சுற்றுக்கான காலப்பகுதி வந்துள்ளது. ஆனால் முதலாவது சொட்டைப் பெற்றுக் கொண்ட அனைவருக்கும் இரண்டாவது சொட்டு அஸ்ட்ரா செனிகா தடுப்பு மருந்தை வழங்குவது நடைமுறை சாத்தியம் அற்றதாகக் காணப்படுகின்றது.
செரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இந்தியாவில் தற்போது மிகவும் மோசம் அடைந்துள்ள கொரோணா நிலை என்பனவே இதற்கு பிரதான காரணமாகும்.
இந்நிலையில் சீனா மற்றும் ரஷ்யா உற்பட ஏனைய சில கொவிட் தடுப்பூசி மருந்துகளும் சந்தையில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதால் முதலாவது சுற்றில் அஸ்ட்ரா செனிக்கா வழங்கப்பட்டவர்களுக்கு ஏனைய உற்பத்தி ஒன்றை வழங்குவது சாத்தியப்படுமா? இரண்டாவது சுற்றில் வேறு ஒரு உற்பத்தி வழங்கப்பட்டால் அதை மனித உடல் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது வேறு விளைவுகள் ஏற்படுமா என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இந்தியாவில் இருந்து இப்போது அஸ்ட்ரா செனிக்கா தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்வது சாத்தியம் அற்றதாகி உள்ள நிலையில் இலங்கையர்களுக்கு கலப்பு தடுப்பு மருந்தை வழங்கலாமா என்பது பற்றி தாங்கள் விரிவாக ஆராய்ந்து வருவதாக இலங்கை சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.