சித்திரை தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழர்கள் புத்தாண்டு என்று கொண்டாடுகிறோம்.
தமிழ் புத்தாண்டு பிறக்கும் கோயில்களில் விசேட பூஜைகள் செய்யப்படும். மக்கள் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
சூரியன் மேஷ இராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரை மாதத்தில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக ஆரம்பித்தார்கள்.
அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகத் பிரிக்கப்படுகின்றது. இளவேனில் காலம் (சித்திரை-வைகாசி), முதுவேனில் காலம் (ஆனி- ஆடி), கார் காலம் (ஆவணி- புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி- கார்த்திகை), முன் பனிக்காலம் (மார்கழி- தை) பின் பனிக்காலம் (மாசி,-பங்குனி) என்ற ஆறு பருவங்களில் வசந்த காலம் எனப்படும் இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலமாக கணிக்கப்படுகின்றது.
சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப்பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அந்தவகையில் இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப்பிறப்பு இருப்பதால் எமது நாட்டில் இது தேசியப் பெருவிழாவாக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டு
இந்த ஆண்டு பிலவ தமிழ்புத்தாண்டு 14 ஆம் திகதி சித்திரை 1 ஆம் நாள் புதன்கிழமை வாக்கியப் பஞ்சாங்கம் படி மணி 39 நிமிடத்தில் பிறக்கின்றது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி அதிகாலை 2 மணி 31 நிமிடத்தில் பிலவ வருடம் பிறக்கின்றது.
புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்க மாதமான மிகச் சிறப்பு வாய்ந்த இந்த சித்திரை மாதப் பிறப்பின் போது நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்
தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் முதல் நாள் அன்று அதிகாலையிலேயே துயில் எழுவது மிகவும் நல்லது.
மற்ற தினங்களைப் போல அல்லாமல் இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகள் சேர்ந்த மருத்துநீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.
மருத்து நீரில் அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும். மருத்து நீர் என்பது நமது முன்னோர்களால் தமிழ் வருடப் பிறப்பு அன்று குளிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஒரு நீராகும்.
தற்கால தமிழர்கள் அதிகம் இதை பற்றி அறியாமல் இருக்க காரணம் இந்த மருத்து நீரை தயாரிக்க தேவையான பொருட்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்காததும், இதை தயாரிக்கும் முறை பற்றி அறியாததே ஆகும். எனினும் இந்த மருத்து நீரை தயாரிக்க நினைப்பவர்கள் ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டிலேயே இந்த மருத்து நீரை தயாரிக்க தெரியாதவர்கள், இப்புனித மருத்து நீரை, கோயில்களில் பெற்று கொண்டு குளிக்க வேண்டும்.
குளிக்கும் போது தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் தமிழ் வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க பெறும்.
மற்ற நட்சத்திரக்காரர்களும் இப்படி குளிப்பதால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி, புதிதாக பிறந்திருக்கும் புத்தாண்டில் அதிர்ஷ்டங்கள் பெருகும்.
எனவே புத்தாண்டு தினத்தில் மேற்கண்ட முறையில் குளியலை முடித்த பின்பு , நீலம், சிவப்பு பட்டாடை அல்லது நீலம், சிவப்பு கரையுள்ள புதிய ஆடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.
பின்னர் உங்கள் வீட்டின் பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும். பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்.
கைவிசேடம் வழங்குதல்
கைவிசேடம் வழங்குதல் என்பது மிகவும் முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். பிறந்த வருடத்தில் எமது கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் வருடம் பிறந்து அதற்கென வகுக்கப்பட்ட சுபநேரத்தில் பெரியோர் பெற்றோர் குரு முதலானவர்களிடமிருந்து கைவிசேடங்களை பெற்று பரிமாறிக் கொள்ளும் நிகழ்வாகும்.
இந்தப் பிலவ வருடப்பிறப்பில் கைவிசேடத்துக்குரிய நாளாக வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 14 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 09.09 முதல் 09.52 வரை, மற்றும் பிற்பகல் 02.22 முதல் 04.11 வரை – 16.01.2021- அதிகாலை 04.14 முதல் 05. 07 வரை 17.04.2021 காலை 07.40 முதல் 09.00 மணிவரை சுபவேளையாக வகுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சிற்றுண்டிகள்- இனிப்புக்கள் ஆகியவற்றை அயலவர்- உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்று வழங்கி சந்தோஷமாக அளவளாவி மகிழ்வார்கள். தொடர்ச்சியாக ஒரு வார காலம் இவ்வாறு உறவுகளுடன் கொண்டாடி மகிழ்வர்.
கலை கலாச்சார நிகழ்வுகள்
எமது நாட்டின் முக்கிய பகுதிகளிலும் கலை, கலாசார, இசை நிகழ்ச்சிகளுடன் சித்திரைப் புதுவருடம் இன மத பேதமின்றி சிறப்பாகவே கொண்டாடப்படும்.
இடத்துக்கு இடம் அந்தந்தப் பிரதேச கலாசார மரபுகளுக்கு அமைய வைபவ நடைமுறைகள் வேறுபட்டிருந்தாலும் பாரம்பரியமான நிகழ்ச்சிகளான போர்த்தேங்காய் அடித்தல், சேவல் சண்டை, கிளித்தட்டு, சடுகுடு போன்ற விளையாட்டுகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் சிறப்பு அம்சங்களாகும்.
இத்துடன் ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, ராபான் அடித்தல், சொக்கட்டான் போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளும் இடம்பெறுவதுண்டு.
அத்துடன் மாட்டு வண்டிச் சவாரி, துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், தலையணை சண்டை வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தையொட்டி நடைபெறுவது வழக்கம்.
குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒன்றிணைந்து பட்டாசு வெடிகளுடன் புதுவருடத்தை வரவேற்று குதூகலமாகக் கொண்டாடும் நிலைமையானது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியதாகும். புதுவருடத்தின் சுபநேரம் பார்த்து தங்கள் தொழிற்கருமங்களை ஆரம்பிப்பதும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் நல்ல நாள் பார்த்து தங்கள் உறவினர்களினதும் நண்பர்களினதும் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதும், பெரியோர்களைச் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொள்வதும் சிறப்பான பாரம்பரிய நிகழ்வுகளாகும்.
வரவிருக்கும் புதிய பிலவ வருடம் முழுவதும் நன்றாக அமைய வேண்டும் என்பதனை இறைவனிடம் பிரார்த்தனையாக முன் வையுங்கள். உங்களது குடும்ப உறுப்பினர்களும், உலக மக்களும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
உணவிற்கும், ஆரோக்கியத்திற்கும் குறைவின்றி இந்த ஆண்டு இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்ளுங்கள். நவதானியங்கள் வைப்பதும், அரிசி, பருப்பு போன்றவற்றை வைப்பதும் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான்.
தானியங்களுக்கும், உணவிற்கும் பஞ்சம் ஏற்படக்கூடாது என்பது தான் அடிப்படை தத்துவம். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் மங்களத்தையும் கொடுக்க வேண்டும். கொரோனன தாக்கத்திலிருந்து வி;டுபட்டு மக்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி பிரவாகிக்க வேண்டும். உலக மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ மலரும் புத்தாண்டு சிறப்பாக அமையட்டும்.
உலக மக்களின் நலன் கருதி இவ்வாண்டு தமிழ் வருட பிறப்பை சிறப்பாக வரவேற்போம். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தர்ஷி