மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே போகிறது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் மறுபுறம் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இது மிக மோசமான நிலைமை. முழு ஊரடங்கு நிச்சயம் தேவை நிலை ஏற்பட்டுள்ளது.
6,99,858 – மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்றைய (23.4.2021) கணக்குப்படி கொரோனா சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இது. வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்குப் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது மகாராஷ்டிரா. இந்த எண்ணிக்கை மே 2-ம் தேதியில் 10,94,996 ஆக அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது மகாராஷ்டிர அரசு.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு மணி நேரத்துக்கு 2,859 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், மூன்று நிமிடத்துக்கு ஒரு கொரோனா நோயாளி உயிரிழப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. நாளொன்றுக்கு 65,000-துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் மகாராஷ்டிராவில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை நமக்கு காட்டுகின்றன.
இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு மற்ற மாநிலங்களில் நூற்றுக்கணக்கில் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்தபோதே, மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இரண்டாம் அலை காரணமாகச் செய்வதறியாது தவித்து வருகிறது மகாராஷ்டிரா அரசு. மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டைவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, இன்று (23.4.2021) காலை மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருக்கும் சோகச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
கொரோனா பரவல் கைமீறிப் போனதை அடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மகாராஷ்டிராவில் தீவிர காட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
புதிய கட்டுப்பாடுகள்!
அரசு அலுவலங்களில் 15% பேர் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. திருமண நிகழ்ச்சிகளில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்றும், இரண்டு மணி நேரத்தில் திருமண நிகழ்ச்சிகளை முடித்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீறினால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மகாராஷ்டிர அரசு தெரிவித்திருக்கிறது.
மாவட்டங்கள், நகரங்களுக்கிடையே பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே மாவட்டங்கள், நகரங்களுக்கிடையே பயணம் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேவையின்றி வாகனங்களில் பயணம் செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும் புறநகர் மெட்ரோ, மின்சார ரயில்களில் அரசு ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே பயணம் செய்யலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று (22.4.2021) இரவு 8 மணி முதல் மே 1-ம் தேதி காலை 7 மணி வரை அமலிலிருக்கும் என்று உத்தரவிட்டிருக்கிறார் உத்தவ் தாக்ரே.
அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன?
கட்டுப்பாடுகளைத் தவிர அரசு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிர அமைச்சர் ராஜேந்திர சிங்னே (Rajendra Shingne) “மரத்வாடா (Marathwada) பகுதியில் 50-60 இடங்களில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். படுக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் செய்து வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
மகாராஷ்டிராவிலுள்ள மருத்துவர்கள் சிலர் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடுகள் மட்டுமே போதாது என்கிறார்கள். “இரண்டாம் அலை எதிர்பார்த்ததைவிட வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்கள் நெரிசலானவை என்பதால் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. முதலில் வந்த கொரோனா தொற்று வகையைக் காட்டிலும், இப்போதிருக்கும் புதிய வகை கொரோனா தொற்றில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இப்போது புதிய கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையும். ஆனால், பெருமளவில் குறையாது. அப்படிப் பெருமளவில் குறைய வேண்டுமென்றால் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். பால், காய்கறிகள், மருத்துவ சேவைகள் உள்ளிட்டவற்றைத் தவிர பொதுப் போக்குவரத்து உள்பட மற்ற அனைத்தையும் முடக்க வேண்டும்.
மகாராஷ்டிர அமைச்சரவையில் இருக்கும் சிலரே முழு ஊரடங்கு தேவை என்பதை முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. முழு ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போவதால் பொது முடக்கம் அவசியமாகிறது. மேலும், அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மட்டும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உதவாது. மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.