பலகட்ட அழுத்தங்களுக்கு பிறகு அமெரிக்க அரசு இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு தேவையான உற்பத்தி பொருட்களை கொடுப்பதாக கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வேளையில் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியாவின் புனாவில் அமைந்துள்ள சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை சீரம் நிறுவனம் அதிகப்படுத்தும் என எதிர்பாக்கப்படுகிறது.
முன்னதாக அமெரிக்க அரசின் மருத்துவ துறை முதன்மை அதிகாரியாக உள்ள அந்தோணி பாசி, செய்தி நிறுவனங்களுக்கு அளித்த அறிக்கையில், “இந்த வாரம் நாங்கள் இந்தியாவுக்கு எந்தெந்த வகையில் உதவிகள் தேவை என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் உதவி குறித்தும், மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிப்பது குறித்தும், சிகிச்சையளிப்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிப்பது குறித்தான ஆலோசனை நடைபெற்றது.
அந்த ஆலோசனையின் அடிப்படையில் தடுப்பூசி உற்பத்தி பொருட்கள் இந்தியாவுக்கு கொடுத்து உதவுவது, கொரோனா மருந்துகள், முன்கள பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முக்கியமான கொரோனா பரிசோதனை கிட்கள் போன்றவை இந்தியாவுக்கு தடையில்லாமல் கிடைப்பதற்கு வழி வகுப்பது, முக்கியமாக ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகாரிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது,
தொடர்ந்து 2022 ஆண்டுக்குள் 1 பில்லியன் அளவிலான மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க பெற செய்வது, இறுதியாக அமெரிக்காவில் உள்ள மருத்துவ துறையில் சிறந்த வல்லுநர்களை கொண்டு இந்திய சுகாதார அமைச்சர்களுடன் மற்றும் வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்வது போன்ற மிக முக்கிய முடிவுகள் எடுக்கபட்டன.
அதனை தொடர்ந்தே இந்தியாவுக்கு தற்போதைய மிக முக்கிய தேவையாக இருப்பது தடுப்பூசி தான் என்பதால் முதற்கட்டமாக தடுப்பூசி தயாரிப்பதற்கு தேவையான உற்பத்தி பொருட்களை அனுப்பவுள்ளோம். தற்போது மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் கொரோனா பேரிடர் காலத்தில் போராடி வரும் இந்தியாவின் மருத்துவத்துறை ஹீரோகளுக்கு பெரும் உதவியாக இது இருக்கும்” என்றார்.
முன்னதாக இந்தியா உதவி கேட்டபோது, அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை என அமெரிக்க அரசு மறுத்தது குறிப்பிடதக்கது. எனினும் உள்நாட்டிலே எழுந்த எதிர்ப்பு மற்றும் அழுத்தம் காரணமாக, இந்தியாவுக்கு உதவுவது என முடிவெடுத்திருக்கிறது அதிபட் பைடன் தலைமையிலான அரசு.
அமெரிக்க அதிபர் பைடன், “கொரோனா உச்சத்தில் அமெரிக்காவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்த போது, இந்திய அரசு நமக்கு வேண்டிய உதவிகளை செய்தது. அதே போல தக்க சமயத்தில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா உறுதியுடன் உள்ளது” என ட்வீட் செய்திருக்கிறார்.