இலங்கையில் அண்மையில் தடை செய்யப்பட்ட 11 அமைப்புக்களினதும் அங்கத்தவர்களில் எவரேனும் பள்ளிவாசல் நிர்வாக சபைகளில் அங்கத்துவம் வகிப்பவர்களாக இருப்பின் அவர்களை தமது அங்கத்துவத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு வக்பு சபை சகல பள்ளிவாசல் நிர்வாகங்களையும் வேண்டியுள்ளது.
வக்பு சபையின் பணிப்புரையின் பேரில் வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரபினால் சகல பள்ளிவாசல்களினதும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், முகாமைத்துவ சபையுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் இன்று (16) விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில், 2021.04.13 ஆம் திகதிய 2223/3 இலக்க அதிவிஷேட வர்த்தமானி மூலம் 11 நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் ஏதேனும் பள்ளிவாசலொன்றின் தர்மகர்த்தாவோ (டிரஸ்டி) பொறுப்பாளரோ அல்லது எவ்வகையிலேனும் முகாமைத்துவத்துவத்துடன் தொடர்புடைய எவருமோ, தடை செய்யப்பட்டுள்ள இந்த ஏதேனும் அமைப்பின் அங்கத்தவர்களாகவோ அந்த அமைப்புடன் அல்லது அதனது பகுதிகளுடன் தொடர்புபட்டவர்களாகவோ இருந்தால், அவர்களை உடனடியாக தமது நிலைகளில் இருந்து இராஜினாமாச் செய்யுமாறும் தாங்கள் நியமக்கப்பட்டதற்கான எந்த ஆவணத்தையும் திருப்பி ஒப்படைத்து விடுமாறும் குறித்த தர்மகர்த்தாக்களை, பொறுப்பாளர்களை, முகாமைத்துவத்துடன் தொடர்புடையவர்களை வக்பு சபை கண்டிப்பாகப் பணிக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.