யாழ்மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமைக்கு ரொரண்டோ பிரம்டன் மேயர்கள் தங்கள் கண்டங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழர்கள் தொடர்ந்தும் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுவதை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ள ரொரண்டோ நகரமேயர் ஜோன் டொரி இலங்கை அரசாங்கம் யாழ் நகரமேயரை கைதுசெய்ததை கண்டிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியுடன் இணைந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
யாழ் நகர மேயரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற வேண்டுகோள்களை தானும் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களும் இந்த வேண்டுகோளில் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் தமிழ் சமூகத்துடன் ஒன்றிணையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ் நகர மேயர் கைதுசெய்யப்பட்டுள்ளமை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பழிவாங்கல் நடவடிக்கை போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் இது பிழையான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்,தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதற்காக அவர்கள் மனித உரிமை பேரவை தீர்மானத்துடன் ஒத்துழைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

