மியன்மாரில் இரத்த ஆறு ஓடுகின்றது, சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதுவர் ஐ.நா பாதுகாப்புச் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மியன்மார் நிலை பற்றி ஆராய்வதற்காக 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபையின் இரகசிய கூட்டம் இடம்பெற்ற போது அதில் பங்கேற்று விளக்கம் அளித்த மியன்மாருக்கான ஐ.நா தூதுவர் கிறிஸ்டின் ஸ்கிரேன்னர் பெர்க்னர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மியன்மார் இராணுவத்துக்கு எதிரான மக்கள் புரட்சி கட்டுக்கடங்காமல் செல்கின்றது. ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றது. தினசரி நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடிய ஆபத்தான நிலை உருவாகி உள்ளது. சர்வதேச சமூகம் இனிமேலும் அமைதி காக்க முடியாது. உரிய நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பாற்றும் வழிவகைகள் பற்றி ஆராய வேண்டும் என கிறிஸ்டின் ஸ்கிரேன்னர் பெர்க்னர் உருக்கமானதோர் வேண்டுகோளை பாதுகாப்புச் சபை முன் சமர்ப்பித்துள்ளார்.