`யார் செத்தால் என்ன, ஜோதிடமே முக்கியம்!’ – பா.ஜ.க அரசுகள் மக்களை பணயமாக்கியது எப்படி?

Date:

இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்?

பொது சுகாதாரத்தை விட ஜோதிடர்களை திருப்திப்படுத்த மத்திய அரசாங்கமும், மாநிலஅரசாங்கமும் முடிவெடுத்ததால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுசரிக்கப்படுகிற கும்பமேளா ஹரித்வாரில் இம்முறை 11 ஆண்டுகள் முடிந்ததுமே நடத்தப்பட்டது.

கும்பமேளாக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. ஹரித்வார் கும்பமேளா கடைசியாக நடந்தது 2010-ம் ஆண்டில். எனவே,`தற்போதைய’ இந்தக் கும்பமேளாவை நடத்த வேண்டிய ஆண்டு 2021அல்ல, 2022.

ஆனால், இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்?

அதுவும், பெருந்தொற்று குறித்த ஆய்வுகள், எப்போதுமே முதலாம் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலைத் தொற்றுகள் மோசமாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டிய பிறகும் ஏன் நடத்தப்பட்டது? காரணத்தை நான் சொல்கிறேன்.

ஜோதிடக் கணிப்புகளின்படி, `சூரியன் மேஷ ராசிக்கும்’, `குரு (வியாழன்) கும்ப ராசிக்கும்’ இந்த ஆண்டில் இந்தக் காலகட்டத்தில் இடம்பெயர்கிறார்களாம். நாட்காட்டிக்கும், சோதிட கணிப்புக்கும் இருக்கும் இடைவெளியை சரிக்கட்ட ஓராண்டு முன்கூட்டியே நடத்தப்பட்டதாம்.

83 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நிகழுமாம். இந்தக் கணக்கின் சூட்சுமங்களை விளக்கும் திறன் எனக்கில்லை. உங்களுக்கு தலைவலி வர வேண்டாம் என்றால், அந்த வேலையில் நீங்களும் இறங்காதீர்கள். எனவே, இந்திய அரசாங்கமும், உத்தரகண்ட் மாநில அரசாங்கமும் கும்பமேளாவை நடத்தாமல் இருந்திருக்கலாம்.

பல கோடி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கோவிட் சூப்பர் தொற்று நிகழ்ச்சியை மிகச் சாதாரணமாகத் தவிர்த்திருக்க முடியும். இது 11-வது ஆண்டுதான். ஹரித்வாரில் கும்பமேளா நடந்து இன்னும் 12 ஆண்டுகள் முடியவில்லை எனச் சொல்லி, மிகச் சாதாரணமாக இந்த ஆண்டில் நடப்பதைத் தடுத்திருக்கலாம்.

வாய்ப்பிருந்தால் 2022-ம் ஆண்டில், இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நடத்தும் புறச்சூழ்நிலையை உருவாக்குவதற்காக, இந்த முழு ஆண்டையும்கூட பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அந்த இரண்டு அரசாங்கங்களும் அப்படிச் செய்யாமல், இன்னும் கொடூரமான காரியங்களைச் செய்தன.

அகில பாரதிய அக்காதா பரிஷத்திடம் ஆலோசனை நடத்தி, 2022-ம் ஆண்டு நடக்க வேண்டிய நிகழ்வை ஓராண்டு முன்கூட்டியே நகர்த்தி 2021-ம் ஆண்டில் நடத்தின. இந்தப் பெருந்தொற்றின் ஆபத்துகள் அனைத்தையும் அறிந்திருந்தும்கூட, சில மாபெரும் ஜோதிடக் கிறுக்குகள் விருப்பப்பட்டதால், இந்தக் காரியத்தை அந்த இரண்டு அரசாங்கங்களும் செய்தன.

ஒரு கிரிமினல் அத்துமீறலுக்குப் (பாபர் மசூதி இடிப்பைக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்) பரிசாக ஒரு கட்டுமானத் திட்டத்தை (ராமர் கோவில் கட்டுமானத்தைக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்) உச்சநீதிமன்றமே வழங்குவதற்கு வழிவகுத்த ஓர் அரசியல் சட்டப் பிரிவு இருக்கிறதல்லவா?

அவர்களுக்கு மிகவும் பிடித்த `ஆச்சாரம்/நம்பிக்கை’ என்ற அதே அரசியல் சட்டப்பிரிவுதான், தற்போதும் இந்திய அரசாங்கத்தையும், உத்தரகண்ட் மாநில அரசாங்கத்தையும், மிகப் பிரம்மாண்டமான அளவில், மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான காரியத்தைச் செய்வதற்குத் தூண்டியது.

பெருந்தொற்று வரலாறு கொண்ட கும்பமேளா

பெருந்தொற்று பரவல் நடக்கும் இடம் என வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வு கும்பமேளா. இருந்தும், இந்திய அரசாங்கம் சில சமயங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, கும்பமேளா போன்ற நிகழ்வால் ஏற்படும் பொது சுகாதாரப் பிரச்னைகளைத் திறமையாகவும், அக்கறையுடனும் கையாண்டிருக்கின்றன.

அப்படி 2013-ம் ஆண்டின் அலகாபாத் மகா கும்பமேளா எந்தவிதமான மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாமல் நடந்து முடிந்ததாக, ஹார்வர்டு பொது சுகாதாரப் பள்ளி நடத்திய பெருந்தொற்றுகள் குறித்த ஆழமான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆனால், அப்போது படுவேகமாகப் பரவிய பெருந்தொற்றுப் பிரச்சனை எதுவும் இல்லை. 2020-ம் ஆண்டில் இருந்து கோவிட் காட்டுத்தீயென பரவி வருகிறது. இந்நேரத்தில், கும்பமேளா நீராடலைப் போன்ற ஒரு நிகழ்வு, கொரோனா சுனாமியையே உருவாக்கும் திறன் பெற்றது என்பதையும், இரண்டாம் அலையின் மையப்புள்ளியாக இருக்கும் என்பதையும் ஊகிப்பதற்கு முனைவர் பட்டம் வேண்டுமா என்ன?

இந்தியாவில் அனைவருமே, இன்னும் சொல்லப்போனால், உலகில் எல்லோருமே இப்போது ஆபத்தை எதிர்கொள்கிறோம். ஏன்? தில்லியிலும், டேராடூனிலும் உள்ள சில அறிவிலிகள் எடுத்த முட்டாள் தனமான முடிவுகளால்!

`மிச்சமிருக்கும் கும்ப உற்சவத்தை அடையாள உற்சவமாக நடத்துங்கள், எனத் தாமதமாகவும், அரை மனதோடும்’ என நரேந்திர மோடியைக் கேட்கத்தூண்டிய நிலைமை உட்பட, இன்று நாம் எதிர்கொள்ளும் எதுவும் எதிர்பாராத நிகழ்வுகள் அல்ல.

சின்மை தும்பேயின் சமீபத்திய நூலான, “பெருந்தொற்றுகளின் காலம்: அவை எப்படி இந்தியாவையும் உலகத்தையும் வடிவமைத்தன (The Age of Pandemics: How They Shaped India and the World)”, பெருந்தொற்றுகளையும், கும்பமேளாக்களையும் பற்றிய குறிப்பிட்ட விவாதத்தை உள்ளடக்கி இருக்கிறது.

மேலும், 1986-ம் ஆண்டில் வெளிவந்த டேவிட் ஆர்னால்டின், `காலராவும், பிரிட்டிஷ் இந்தியாவில் காலனியமும்’ என்ற கட்டுரையும், காமா மெக்லீனின் `புனித யாத்திரைகளும் அதிகாரமும்: அலகாபாத்தில் கும்பமேளா, 1765-1954’ என்ற 2008-ல் வெளியான நூலும் மிகவும் பயனுள்ளது.

கும்பமேளா மற்றும் தொற்றுகள் குறித்த வரலாறு பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்திடம் உள்ள காலரா குறித்த மோனோகிராஃபில் கும்பமேளாவைப் பற்றிய தனி அத்தியாயமே இருக்கிறது.

1895-ம் ஆண்டு இந்திய மருத்துவ கெஸட்டில், ஹரித்வார் காலரா தொற்றுகள் குறித்த இயற்கை வரலாறு என்ற கட்டுரையும், `கும்பமேளா பற்றிய விரிவான ஆய்வு: தொற்றுநோய்ப் பரவலுக்கான ஆபத்துகளைக் கண்டறிவது – 2015’ என்ற சமீபத்திய ஆய்வுத்தாளும் கூட இருக்கின்றன.

எனவே, இவ்வளவு பெரிய ஆபத்தான வழியில் செல்வதற்கு, பிரதம மந்திரி மற்றும் அவருடைய ஆலோசகர்களின் அறியாமைதான் காரணமா? அல்லது ஆபத்துகளை அறிந்திருந்தும் எடுக்கப்பட்ட அப்பட்டமான அரசியல் முடிவா?

அரசாங்கத்துக்கு இந்த ஆபத்துகள் எல்லாம் நன்றாகவே தெரியும். உத்தரகண்ட் மாநில அரசாங்கம் கடந்த ஓராண்டாக, கும்பமேளாவை நடத்துவது குறித்தும், நடத்தப்படும் விதம் குறித்துப் பேசியது, பொது சுகாதார ஆபத்துகள் பற்றிய அதன் புரிதலை நன்கு வெளிப்படுத்துகிறது.

2020 ஜூலையில் அப்போதைய முதல்வர், திரிவேந்திர சிங் ராவத் (பா.ஜ.க), அகில பாரதிய அக்காதா பரிஷத்திடம் வழக்கம்போல கும்பமேளா நடைபெறும் என்று வாக்குறுதி அளித்தார். (எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்லும் நிலையில் அவர் அப்போது கிடையாது. எனவே அப்படிப்பட்ட உறுதிமொழிகளை அள்ளிவீசும் நிலையிலும் அவர் அன்றைக்கு இருக்கவில்லை!). எனினும் அப்போதைய கொரோனா சூழலைப் பொறுத்து அது நடத்தப்படும். பாரம்பரியமான முறைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம்” என பி.டி.ஐ செய்தி நிறுவனம் அவரைச் சுட்டிக்காட்டியது.

செப்டம்பர் 2020-ம் ஆண்டில் திரிவேந்திர சிங் ராவத் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றார். டிசம்பர் 2020-ம் ஆண்டில், அக்காதா பரிஷத்தின் `துறவிகள்’, அரசாங்கம் மேற்கொள்ளும் கும்பமேளா ஏற்பாடுகள் தங்களுக்கு `அதிருப்தி’ தருவதாகச் சொன்னார்கள்.

வரக்கூடிய பேரிடரை உணர்ந்திருந்ததால் அதை நடத்த முனைப்புக் காட்டாமல் கூட உத்தரகண்ட் மாநில அரசாங்கம் இருந்திருக்கக்கூடும்; கடைசி நேரத்தில் `போதிய தயாரிப்புகள் இல்லை’ என்ற காரணத்தைப் பயன்படுத்தி நடத்தாமல் இருக்கும் எண்ணத்தில்கூட இருந்திருக்கலாம். எனினும், பரிஷத் `எங்கள் வழியில் நாங்கள் நடத்துவோம்’ என மிரட்டியது.

2021 மார்ச் 9-ல், திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்தார். அடுத்ததாகப் பதவிக்கு வந்த தீரத் சிங் ராவத், `அதெல்லாம் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது, புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாடும் இருக்காது, கங்கை அன்னை அருளால், இந்தத் தொற்று நோயை வென்றுவிடுவோம்’ என்றார்.

திரிவேந்திர சிங் ராவத் பதவியை விட்டு விலகிய பிறகு, கும்பமேளாவிற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்பப்பெறப்பட்டது தொடர்பாக அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

நன்றி விகடன் 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...