உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், மாதம் முழுவதும் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு ஆகியவற்றில் ஒன்றான இந்த நோன்பை, சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் அரபி மாதங்களில் ஒன்பதாவது மாதமான ‘ரமலான்’ மாதத்தில், இஸ்லாமியர்கள் அனைவரும் சூரியோதயத்திற்கு முன்பாக உணவருந்தி, சூரியன் மறையும்வரை நோன்பிருந்து கடைபிடிப்பார்கள்.
உண்மையில் ‘ரமல்’ என்றால், சுட்டெரிக்கும் என்பது பொருளாகும். மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் சுட்டெரித்து, இறைவனிடம் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, சூரிய ஒளி போல பிரகாசித்து நிற்க வழிகாட்டும் மாதம் தான் ரமலான் மாதம்.
நோன்பின் அடிப்படை உணவைத் தவிர்த்திருப்பதுதான் என்றாலும், தீய பழக்கங்கள் அனைத்தையும் விலக்குதல், திருக்குரான் ஓதுதல், தொழுகை மூலமாக ஆன்மபலம் பெறுதல், தனது ஆஸ்தியில் ஒரு பகுதியை (2.5%) இல்லாதவர்களுக்கு தானமளித்தல் என இந்த மாதம் முழுவதும் உடல், மனம், ஆன்மா என அனைத்திற்கும் பயிற்சியளித்து, எதிர்காலத்தில் அறம் பிறழாத மனிதனாக வாழ வழிவகுப்பதே இந்த நோன்பின் நோக்கமாகும்.
அதிலும் இந்த நோன்பின்போது, காலையில் உட்கொள்ளும் ‘சுஹூர்’ உணவையும், மாலையில் நோன்பை முடிக்கும் ‘இஃப்தார்’ உணவையும் அருகில் உள்ளவர்களுடன் பகிர்ந்துண்பது, ஒன்றுகூடி இறைவனை வணங்கும் கூட்டுத் தொழுகை, இஷா எனும் இரவுத் தொழுகைக்குப் பின் செய்யும் ‘தராவீஹ்’ என்ற கூட்டு சிறப்புப் பிரார்த்தனை ஆகிய அனைத்தும் மனிதர்களை ஒன்றுசேர்க்கும் நிகழ்வுகளாகவே விளங்குகின்றன.
ஆனால், இவ்வளவு வருடங்களாக இயல்புமாறாமல் செய்து வந்த இந்த பிரார்த்தனை வழிமுறைகள், சென்ற ஆண்டு கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டது.
“தனித்திருங்கள்..
சமூக இடைவெளி காத்திடுங்கள்.
பயணங்களைத் தவிர்த்திடுங்கள்…”
என அறிவுறுத்தப்பட்டு, உலகெங்கும் மசூதிகள் மூடப்பட்டன. விமான சேவைகள் முடக்கப்பட்டன.
தொடரும் இந்த ஆண்டிலும் கோவிட் தடுப்பூசி வந்தபிறகும், அதே விதிமுறைகள், அதே தடைகள் என்று தொடர்கையில், “மனதையும் வாழ்வையும் தூய்மைப்படுத்தி மனிதனை இறைவனுடன் இணைக்கும் நோன்பிற்குமா இத்தனை வேதனைகள்..?” என்ற கேள்வி எழுகிறது.. இந்தக் கேள்விக்கும், நம் அனைவரது வாழ்விற்கும் அர்த்தம் சேர்க்கும் பதிலொன்றைத் தருகிறார், ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலமைச்சரும், துபாயின் ஆட்சியாளரும், இன்றைய துபாய் நகரத்தை கட்டமைத்தவருமான ஷேக் ரஷீத் அல் மக்தூம் அவர்கள்.
“சாத்தியமற்றது என்ற வார்த்தை அரபுமொழியில் அறவே கிடையாது.” என்று கூறும் இவர், “எனது தந்தை ஒட்டகத்தின் மீது பயணித்தார். நான் பென்ஸ் காரில் பயணிக்கிறேன். எனது மகனோ லேண்ட் ரோவரில் பயணிக்கிறான். ஆனால் எனது பேரனை அதைவிட பெரிய காரில் ஏற்றாமல், அவனை மீண்டும் இறைவன் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ய வைப்பான். ஏனெனில் கடினமான வாழ்க்கை வலிமையான மனிதர்களை உருவாக்குகிறது. வலிமையான மனிதர்கள், கடினமான நேரங்களை சுலபமாக்கி அனைவரும் வாழ உதவுகிறார்கள். போராட்டம் இல்லாத சுலப வாழ்க்கை வாழ்பவர்களால் வாழ்க்கை மீண்டும் கடினமானதாக மாறிவிடுகிறது. ஆனால், இயற்கையோ எளியவர்களை விரும்புவதில்லை. அது மனிதனை மீண்டும் வலிமையானவனாய் மாற்ற வாழ்வைக் கடினமாக்குகிறது. ஏனென்றால், அடுத்தவருக்கு உதவும் வலியவர்களைத்தான் இறைவனுக்கும் பிடிக்கிறது!” என்று சொல்கிறார்.
அவரது பதில், இந்த ரமலானுக்கு மட்டுமல்லாமல், கோவிட்கால துன்பங்களின் நமது அனைத்து கேள்விகளுக்குமே பொருந்துகிறது அல்லவா?
எனவே, இந்த ரமலான் மாதக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மனிதர்களை இன்னும் வலிமையுள்ளவர்களாய் மாற்றத்தான் என்பதை உணர்த்தி ஒவ்வொருவரையும் நோன்பு மேற்கொள்ள எல்லோரையும் அன்புடன் அழைக்கிறது இஸ்லாம்!