கொவிட் 19 க்கு கடிவாளமிடுவோம் வாருங்கள்!

Date:

எமது அயல் தேசம் இந்தியாவில் கொவிட் 19 கோரத் தாண்டவமாடுகிறது. வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. வீதியோரங்களில் நோயாளிகள் படும் அவஸ்த்தை சொல்லி மாளாது. ஒட்சிசன் வசதியின்றி நோய்த் தொற்றாளர்கள் மூச்சுத் திணறுகின்றனர். வைத்தியசாலைக்குள் இடம் கிடைப்பதற்குள் வீதிகளிலும் அம்பியுலன்ஸ்களிலும் மக்கள் உயிர் பிரிகிறது. உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக வரிசையில் காத்திருக்கும் உறவினர்கள் கதறி அழும் காட்சி மனதை உருக்குகிறது.

கொரோனாவின் கோர முகம் பக்கத்து நாட்டை உலுக்குகிறது. அவர்களுக்காக புனித ரமழான் மாதத்தில் இரு கரமேந்திப் பிரார்த்திப்பதுடன் நமது நாட்டையும் வீட்டையும் பாதுகாப்பதும் நமது கடமை.

நம் நாட்டிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது. நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. பல ஊர்கள் முடக்கப்பட்டு வருகின்றன. இது மூன்றாவது அலை. வீரியம் மிக்க வைரஸும்கூட. முதியவர்கள் மட்டுமல்ல, சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர்… என்று எல்லோரையும் வதைக்கிறது இந்த வைரஸ். இம்முறை அபாயம் மிக அதிகம் என்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்தவண்ணமுள்ளனர்.

எனவே, சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது நம் ஒவ்வொருவர் மீதுமான தார்மிகக் கடமை.

மாஸ்க் அணிவதும் கை கழுவுவதும் சமூக இடைவெளி பேணி நடப்பதும் மார்க்கக் கடமை. என்பதை மறக்காதீர்கள். மறுக்காதீர்கள்.

இவை சமூகக் கடமை என்பதையும் உணருங்கள்.

அத்தியவசிய தேவைகளுக்கே அன்றி வெளி இடங்களுக்கு செல்வதையும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதையும் முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சுய தனிமைப்படுதலின்போது பேண வேண்டிய ஒழுங்குகளைக் கண்டிப்பாக கடைபிடியுங்கள்.

நேரடியாக பழகும் நபர்களின் எண்ணிக்கையை முடியுமானளவு மட்டுப்படுத்துங்கள்.

என்னிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவி விடக் கூடாது; நான் நோய்க் காவியாகி விடக்கூடாது என்பதில் மீக்கரிசனை செலுத்துங்கள்.

நீங்கள் நோயெதிர்ப்பு சக்தியுள்ளவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் சந்திப்பவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாகவோ இருதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாகவோ இருக்கலாமல்லவா?

அத்தகையவர்களுக்கு இந்த வைரஸ் உயிராபத்தை ஏற்படுத்தலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

என்னிடமிருந்து கொவிட் 19 வைரஸ் மற்றொருவருக்கு தொற்றி அவர் மரணித்து விட்டால்…? (அப்படி நடக்கக் கூடாது) அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் என்பது நினைவிருக்கட்டும்.
கொரோனா என்று எதுவுமில்லை. இது வெறும் பித்தலாட்டம் என்று கதையளப்பதை கைவிடுங்கள். எம் அண்டை நாட்டில் நடக்கும் அவலத்தை பார்த்த பிறகும் இப்படிச் சொல்வது எவ்வளவு அபத்தம். அது மக்களை பிழையாக வழிநடத்தும் வன்செயல்.

ரமழான் மனிதனின் ஐம்புலன்களையும் அடக்குவதற்கு பயிற்சியளிக்கும் மாதம். அந்தப் பயிற்சியை பெற்றுக் கொண்டிருக்கும் நாம் எமது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம்… சுகாதார ஒழுங்குமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கொவிட் 19 பரவலுக்கும் கடிவாளமிடுவோம். எம்மையும் எமது குடும்பத்தினரையும் எமது சமூகத்தையும் எமது நாட்டையும் பாதுகாப்போம்.

வல்ல இறைவனிடம் முழுமையாக பொறுப்புச் சாட்டுவோம். நடுநிசியில் அவனிடம் பிரார்த்திப்போம். எல்லா நெருக்கடி நிலைமைகளையும் சீராக்க அவனே போதுமானவன்!

நன்றி -ஜெம்ஸித் அஸீஸ்-

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...