சிங்கராஜ வனப் பிரதேசத்தை ஊடறுத்து நீர்த்தேக்கம் ஒன்று நிறுவும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என யுனெஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பிரதேசம் உலக இயற்கை மரபுரிமைப் பிரதேசமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஒரு இடமாகும். எனவே இங்கு உத்தேச நீர்த்தேக்க நிர்மாணத் திட்டத்தை அனுமதிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
சிங்கராஜ வனத்துக்குள் மீகஸ்கெத்த பிரதேசத்தில் ஜின் கங்கைக்கு குறுக்காக நீர்த்தேக்கம் ஒன்றை நிர்மானிப்பதற்கான முன்மொழிவை நீர்ப்பாசனத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. இலங்கையின் தென்கிழக்குப் பகுதிக்கு குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக நீரை திசை திருப்பும் நோக்கில் இந்த அணையை நிர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பற்றி நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தன்னோடு கலந்துரையாடியதாகவும், உலக மரபுரிமைப் பிரதேசத்துக்குள் இவ்வாறான ஒரு திட்டத்தை அமுல் செய்ய முடியாது என தான் அவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கைக்கான யுனெஸ்கோ செயலாளர் நாயகம் கலாநிதி. புன்சிநிலமே மீகஸ்வத்த தெரிவித்துள்ளார்.