மியன்மாரில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ராணுவம் பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றியது. அன்று முதல் அங்கு இராணுவத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராணுவம் அவர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான பின்னணியில் இன்று அதிகாலை வேளையில் தாய்லாந்து டனான மியான்மாரின் கிழக்குப்புற எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ காவல் அரண் ஒன்றை போராட்டக் குழு ஒன்று தாக்கி அழித்துள்ளது.
தற்போது அந்த இராணுவ காவல் நிலையம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என கெரன் எனப்படும் சிறுபான்மை இனக் குழுவை சேர்ந்த ஆயுதக் குழு ஒன்று அறிவித்துள்ளதுஇதனிடையே ஆசியான் நாடுகள் விடுத்த கோரிக்கையை செவிசாய்க்க தயார் என்று இராணுவம் அறிவித்துள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி பிணக்குகளைத் தீர்த்து நாட்டில் மீண்டும் ஜனநாயகத்துக்கு வழி விடுமாறு ஆசியான் அமைப்பு மியன்மார் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்க்க தாங்கள் தயார் என ராணுவம் அறிவித்துள்ள நிலையிலேயே இன்று அதிகாலை எல்லைப் பகுதியில் இராணுவ காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.