ரவுல் காஸ்ட்ரோவின் அறிவிப்பு மூலம் 6 தசாப்தங்களாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.
கியூபா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த ரவுல் காஸ்ட்ரோ, பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை 60 ஆண்டுகளாக எதிர்த்து நின்ற காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.
கியூபா புரட்சி:
1959-ம் ஆண்டில் கியூபாவை ஆட்சி செய்துவந்த சர்வாதிகாரி பல்கேன்சியோ பாடிஸ்டாவை ஓட வைத்தது கியூபா புரட்சி. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபரானார். அன்று முதல் 50 ஆண்டுகளுக்குக் கியூபாவின் அசைத்துப் பார்க்க முடியாத தலைவராக இருந்தார் ஃபிடல்.
அமெரிக்கா ஏற்படுத்திய பொருளாதாரத் தடைகள் உள்பட பல்வேறு தடைகளை வெற்றிகரமாக முறியடித்தவர் ஃபிடல். ஃபிடல்மீது அமெரிக்கா கொலை முயற்சிகள்கூட மேற்கொண்டது. இருந்தும் இரும்பு மனிதனாகக் கியூபாவைக் காத்து நின்றார் ஃபிடல்.
அதிபரான ரவுல்:
2006-ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அவரின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 2008-ம் ஆண்டு முறைப்படி கியூபாவின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ரவுல் காஸ்ட்ரோ. 2011-ம் ஆண்டு முதல் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார் அவர்.
ரவுல் காஸ்ட்ரோ ஆட்சி!
1950-களின் தொடக்கத்தில் ஃபிடஸ் காஸ்ட்ரோ வழி நடத்திய போராட்டங்களில், அவருக்கும் மிகவும் உறுதுணையாக இருந்தவர் ரவுல் காஸ்ட்ரோ. 1959-ல் கியூபாவில் சர்வாதிகாரத்துக்கு எதிராக தன் நண்பன் சே குவேராவோடு இணைந்து ஃபிடல் காஸ்ட்ரோவின் நடத்திய புரட்சிப் போராட்டத்தில் தளபதியாகச் செயல்பட்டவர் ரவுல் காஸ்ட்ரோ.
அதிபரானவுடன் தன் மூத்த சகோதரரைப் போலவே அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வந்தார் ரவுல் காஸ்ட்ரோ. 2014-ம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசிய ரவுல், இருநாடுகளுக்குமிடையே நட்புறவை ஏற்படுத்தினார். ரவுலின் இந்தச் செயல் கியூபா அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கியூபாமீது அமெரிக்கா விதித்திருந்த பல்வேறு பொருளாதாரத் தடைகளை விலக்கினார் ஒபாமா. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற ட்ரம்ப், மீண்டும் கியூபா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
2018 வரை கியூபாவின் அதிபராக இருந்தவர், நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். கியூபாவின் புதிய சட்ட விதிப்படி ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்பதால் 2018-ல் அதிபர் பதவியிலிருந்து விலகினார். இருந்தும், கியூபா நாட்டின் ஒரே ஆட்சி அதிகாரமிக்க கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து செயல்பட்டார்.
இந்த நிலையில், நேற்று (18.4.2021) நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார் அவர். 89 வயதாகும் ரவுல் காஸ்ட்ரோ பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகையில்,
அடுத்த தலைவர்?
ரவுல் காஸ்ட்ரோவின் இந்த அறிவிப்பு மூலம் 6 தசாப்தங்களாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. கட்சியின் அடுத்த தலைவராக, தற்போது கியூபா நாட்டின் அதிபராக இருக்கும் மிக்கேல் டயஸ் கேனல் (Miguel Díaz-Canel) தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன சிக்கல்?
கடந்த ஆண்டில் மட்டும் கியூபா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 11 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கொரோனா நோய்த் தொற்று, நிதிச்சீர்த்திருத்தங்கள், ட்ரம்ப் நிர்வாகம் விதித்த பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டவை இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.