அல் குத்ஸ் ஜெரூஸலம் தினத்தை அனுஷ்டிக்கும் உலக முஸ்லிம்கள் இஸ்ரேலின் அடாவடித்தனத்தை கண்டுகொள்ளாமல் அதனோடு உறவை ஏற்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் அரபுலக ஆட்சியாளர்கள் ஜெரூஸலம் நகரை கிறிஸ்தவர்களும், யூதர்களும், முஸ்லிம்களும் சகிப்புத்தன்மையுடனும், சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழக் கூடிய நகராக மாற்றியவர் கலீபா உமர்

Date:

முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுத முதலாவது திசையான மஸ்ஜிதுல் அக்ஸா இஸ்லாமிய உலகில் மக்காவில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய புனிதப் பள்ளிவாசலாகும். ஜெரூஸலம் நகரில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல் அல் குத்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.

ஜெரூஸலம் நகரம் 1967ம் ஆண்டு இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மூலம் அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் இஸ்ரேல் இந்தப் புனிதப் பிரதேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக இடித்து சிதைவுறச் செய்து வருகின்றது. அந்தப் பகுதியில் வாழும் பலஸ்தீன மக்கள் மீதும் அது பல குற்றங்களைப் புரிந்து வருகின்றது.

ஆனால் இந்தப் பிரதேசத்தில் அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளால் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள கொத்தடிமை ஆட்சியாளர்கள் இவற்றைக் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். சவூதி மற்றும் வளைகுடா ஷேக்மார் இப்போது அல் அக்ஸாவை கைவிட்டுள்ளதோடு மறந்தும் விட்டனர். இவற்றை எல்லாம் மறந்து விட்டு தான் அவர்கள் இஸ்ரேலுடன் தமது உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர முண்டியடித்து நிற்கின்றனர். இது அவர்களின் விழுமிய வங்குரோத்து நிலையையே எடுத்துக் காட்டுகின்றது.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் புனித றமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை சர்வதேச குத்ஸ் தினமாக அல்லது பலஸ்தீன மீற்பு தினமான அனுஷ்டித்து வருகின்றனர்.
ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தந்தை காலஞ்சென்ற ஆயத்துல்லாஹ் கொமேனி 1980ம் ஆண்டு புனித றமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ‘அல் அக்ஸா’ தினமாகப் பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து வருடந்தோறும் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் இந்த அல் அக்ஸா தினம் வாஷிங்டனில் இருந்து மேற்கே லண்டன் முதல் மத்திய கிழக்கு, ஈரான், பாகிஸ்தான், இந்தியா, மலேஷியா மற்றும் தூர கிழக்கின் இந்தோனிஷியா வரை விரிவான முறையில் நினைவு கூறப்பட்டு வருகின்றது.

பல மேலைத்தேச நகரங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் இணைந்து அமைதியான பேரணிகளில் பங்கேற்று ஜெரூஸலம் நகரை யூத ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்குமாறும், யூத ஆக்கிரமிப்புக்கும் அட்டூழியத்துக்கும் அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவை நிறுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.

சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடப்பதில்லை. காரணம் இந்த நாடுகள் பெரும்பாலும் வெற்கம் கெட்ட யூதக் கைக் கூலிகளாலேயே ஆளப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு எதிரான அமைதியான ஆர்ப்பாட்டங்களைக் கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்களை முழங்கி வருகின்றனர். இந்த தினத்தை அல் குத்ஸ் தினம் என்றும் அல்லது ஜெரூஸலம் தினம் என்றும் அவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இலங்கையில் இந்த தினம் ஒருபோதும் கண்டு கொள்ளப்படுவதில்லை. இந்த கொந்தளிப்பான விடயத்தை வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகையின் போது பிரசங்கம் புரியும் போதகர்கள் கூட மறந்து விடுகின்றனர். இந்த நாட்டு முஸ்லிம்கள் உலகளாவிய முஸ்லிம் விடயங்களில் எந்தளவு அறிவற்றவர்களாகவும், பலஸ்தீனத்தின் இன்றைய நிலை, சியோனிஸத்தின் அன்றாட காட்டு மிராண்டித் தனம் என்பனவற்றை புரிந்து கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர் என்பதற்கு இந்த நிலை தெளிவான உதாரணமாகும்.
முஸ்லிம்களின் புனிதப் பிரதேசமான அல்அக்ஸா பள்ளிவாசல் பகுதி மற்றும் அதனோடு இணைந்த புனிதப் பகுதிகளில் யூதர்கள் அன்றாடம் நடத்தி வரும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள நிலையில் ஜெரூஸலம் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமானவையாக மாறி வருகின்றன. மஸ்ஜிதுல் அக்ஸா இஸ்லாத்தின் இரு பெரும் புனிதப்பிரதேசங்களான மக்கா மற்றும் மதீனா என்பனவற்றுக்கு அடுத்த படியாக மூன்றாவது முக்கிய புனிதத்தலமாக அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள திசையை நோக்கியே முஸ்லிம்கள் தொழுதும் வந்துள்ளனர்.

ஏக தெய்வ கொள்கையை கொண்ட முப்பெரும் மார்க்கங்களான யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் குலத் தலைவராகக் கருதப்படும் நபி இப்றாஹிம் தொழுத இடமே அல் அக்ஸாவாகும். இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகத்துக்கான தெய்வீக இரவுப் பயணத்தை மேற்கொண்டபோது இங்கு தரித்து நின்று, அவருக்கு முன் மரணம் அடைந்த இறைதூதர்கள் அனைவரும் மீள உயிர்ப்பிக்கப்பட்டு, இங்கு வரவழைக்கப்பட்டு நபி முஹம்மத் (ஸல்) தலைமையில் தொழுகை நடத்தப்பட்டதாக இஸ்லாம் கூறுகின்றது. இங்குள்ள அல் ஷக்ரா பள்ளிவாசல் மற்றும் சொர்க்கத்தை நோக்கிய கற்பாரைக் கோபுரம் அல்லது டோம் ஒப் த ரொக் பிரதேசங்கள் விண்ணுலக பயணத்தின் போது நபி அவர்கள் தொழுகை நடத்திய அவர்களின் பாதம் பட்ட பிரதேசங்களாகவும் உள்ளன. இவற்றின் காரணமாக இஸ்லாமிய ஆன்மிக விழுமியங்களோடும் வரலாறோடும் மிகவும் தொடர்புடைய பிரதேசங்களாக இந்தப் பிரதேசமும் அவை அமைந்துள்ள ஜெரூஸலம் நகரும் அமைந்துள்ளன.
காஸாவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சியோனிஸ எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியிலேயே உலகளாவிய ரீதியில் குத்ஸ் தின பேரணிகளும் இடம்பெறுகின்றன. காஸா ஆர்ப்பாட்டங்களின் போது இன்று வரை இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக நூற்றுக் கணக்கான அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். மறைந்திருந்து தாக்கும் இஸ்ரேலின் குறிபார்த்து சுடும் படைப்பிரிவினரே இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஜெரூஸலம்
இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா உமர் இப்னு அப்துல் கத்தாப் (றழி) அவர்களின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் படைகள் அபூ உபய்யாதின் தலைமையின் கீழ் யெர்முக் யுத்தத்தின் போது டமஸ்கஸ் நகரைக் கைப்பற்றிவிட்டு ஜெரூஸலத்தை முற்றுகையிட்டன. அப்போது ஜெரூஸலம் நகர கோத்திரத் தலைவராக இருந்த சொப்ரோனியஸ் கலீபா உமருடன் மட்டுமே தான் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும், உமர் ஜெரூஸலம் வருவதற்கு முன் வேறு எவரும் ஜெரூஸலம் நகருக்குள் பிரவேசிக்கக் கூடாது என்றும் அறிவித்தார். இதனைக் கேள்வியுற்றதும் தான் ஜெரூஸலம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கலீபா உமர் அறிவித்தார்.
அன்றைய நிலையில் கலீபா உமர் நினைத்திருந்தால் பெரும் குதிரைப் பட்டாளத்துடன் வருகை தந்திருக்கலாம். அந்தளவுக்கு முஸ்லிம்களின் கரங்கள் ஓங்கி இருந்தன. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. சேவகன் ஒருவனின் துணையோடு மட்டும் மிக எளிமையான முறையில் ஜெரூஸலம் நோக்கி வந்தார்.

இருவரும் ஒரே ஒட்டகத்தில் மாறி மாறி அமர்ந்து பயணம் செய்யும் ஏற்பாட்டில் பயணத்தை தொடர்ந்தனர். ஜெரூஸலம் நகரை வந்தடையும் போது ஒட்டகத்தில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டிய முறை சேவகனுடையதாக இருந்தது. கலீபாவை மக்கள் காண வேண்டும் அவரை மக்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக தான் கீழே இறங்கி கலீபாவை ஒட்டகத்தில் அமர்ந்து பயணம் செய்யுமாறு சேவகன் கேட்டுக் கொண்டான். அனால் கலீபா அதை ஏற்கவில்லை. முறைப்படி சேவகன் ஒட்டகத்தில் அமர்ந்திருக்க அதன் கயிற்றைப் பிடித்து நடந்தவாறே கலீபா ஜெரூஸலம் நகருக்குள் பிரவேசித்தார். அங்கு குழுமியிருந்த கோத்திரத் தலைவன் சொப்ரோனியஸ் உற்பட பலரும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்த பின்னரும் கலீபா உமர் தனது பாதணிகளை கையில் ஏந்தியவாறு மக்கள் ஆச்சரியமாகப் பார்த்து நிற்க கால் நடையாகவே தனது பயணத்தை தொடர்ந்தார்.
இதைக் கண்ணுற்ற முஸ்லிம்களும் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்து இறை மறை வசனங்களை ஓதினர். கலீபாவோ அக்கு வேறாக ஆணி வேறாக காணப்பட்ட தான் அணிந்திருந்த பிரயாண ஆடை உடனேயே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவப் படையை நோக்கி நடந்தார். ஜெரூஸலத்தின் மதில்களுக்கு மேல் நின்று இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிறிஸ்தவ மக்கள் ஆச்சரியத்தின் உச்சத்தில் நின்றனர். பெரும் படையைக் கட்டுப்படுத்தும் ஒரு சேனாதிபதியின் வியக்கத்தக்க எளிமையை அவர்களால் நம்ப முடியாமல் இருந்தது. இவர்தானா அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் தளபதி என்ற ஆச்சரிய உணர்வு அவர்களுக்குள் மேலோங்கி காணப்பட்டது.

முன்னொருபோதும் இடம்பெற்றிராத இந்தக் காட்சியைக் கண்ணுற்ற அபூஉபைதா என்பவர் அதைப் பொருத்துக் கொள்ள முடியாமல் உமரிடம் சென்று “இன்று நீங்கள் மக்கள் முன்னிலையில் மிகச் சிறந்த காரியம் ஆற்றினீர்கள். மிகச் சிறப்பாகன நடந்து கொண்டீர்கள்…” என்றார். உமர் அவரது மார்பில் தட்டி அவரைக் கண்டிக்கும் தொனியில் “இதை உம்மைத் தவிர வேறு யாராவது சொல்லி இருக்க வேண்டும் அபு உபைதா நாங்கள் அவமானப்படுத்தப்பட்ட மக்கள். அல்லாஹ்தான் இஸ்லாத்தைக் கொண்டு எங்களை கௌரவித்தான். நாங்கள் பலவீனமானவர்கள் இறைவன் தான் எங்களுக்கு உறுதியைத் தந்தான்” என்று கூறினார்.
கலீபாவின் நடத்தை மற்றும் பேச்சு என்பனவற்றால் பெரிதும் கவரப்பட்டு தன்னிலையை இழந்த கோத்திரத் தலைவர் தனது மக்களை நோக்கி உலகில் இந்த மக்கள் முன்னால் எவரும் ஈடாக முடியாது. இவர்களிடம் சரணடைவதே மேல் என்று கூறினார். பின்னர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வரலாற்றுப் புகழ் பெற்ற ‘உமாரியா உடன்படிக்கையும்’ செய்து கொள்ளப்பட்டது. ஜெரூஸலத்தில் உள்ள புனித ஆலயம் ஒன்றில் (ஊhரசஉh ழக வாந ர்ழடல ளுநிரடஉhநச – கல்லறை ஆலயம்) இந்த உடன்படிக்கை பிரதி இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவத்துக்கு முன்னர் ஜெரூஸலம் நகரில் வாழாத யூதர்கள் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கும் ஜெரூஸலத்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என கிறிஸ்தவர்கள் கோரிக்கை முன்வைத்தனர். கலீபா அதை ஏற்றுக் கொண்டார். மேலும் தன் பங்கிற்கு ஜெரூஸலத்தில் வாழும் சகல விசுவாசங்களையும் கொண்ட மக்களுக்கு உரிய பாதகாப்பு வழங்கப்படும் என்று உமர் உறுதி அளித்தார். அவர்களது சமய நம்பிக்கைகள் மற்றும் சமய ரீதியான புனிதத் தலங்கள் என்பனவற்றுக்கான பாதகாப்புக்களை கலீபா உமர் உறுதி செய்தார். மேலும் அவற்றில் எதுவுமே சிதைக்கப்படவோ அல்லது அழிக்கப்படவோ கூடாது எனவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின் கி.பி. 637ல் ஜெரூஸலம் நகரின் திறவுகோல் சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டு அதன் கதவுகள் திறக்கப்பட்டு நுழைவாயில் ஊடாக கலீபா உமர் பிரவேசித்தார். ஒரு நடை பாதை ஊடாக பிரவேசித்த கலீபா உமர் அங்குள்ள கல்லறை ஆலயம் நோக்கிச் சென்றார். அவர் உள்ளே சென்றதும் அங்கு அவரை தொழுமாறு கோத்திரத் தலைவர் கேட்டுக் கொண்டார். ஆனால் கலீபா உமர் அதை ஏற்கவில்லை. தான் அங்கே தொழுதால் ஏனையவர்களும் அதைப் பின்பற்றி அங்கு தொழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் என்ற அதன் தனித்துவம் இல்லாமல் போய்விடும் என்று கருதியே உமர் அங்கு தொழவில்லை. மாறாக அந்த ஆலயத்தின் தென் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அவர் தொழுதார். இதுதான் இப்போது ஜெரூஸலத்தின் உமர் பள்ளிவாசல் அமைந்துள்ள இடம்.

தனது இந்த உன்னதமான செய்கையின் மூலம் கலீபா உமர் சகிப்புத்தன்மை என்றால் என்ன? வெற்றியின் பலம் என்ன? அதனால் உணர்த்தக் கூடிய பெருந்தன்மை என்ன? என்பதை எல்லாம் உலகுக்கு உணர்த்தினார். அது தான் இஸ்லாத்தின் மகிமையாகவும் இருந்தது. அது கலீபா உமரின் நடத்தையில், சொல்லில், செயலில், அவரின் ஆன்மாவில், அவரின் விழுமியங்களில் பிரதிபலித்தது. இவ்வளவுக்கும் உமர் என்ற மனிதர் வீரத்துக்கும் திடகாத்திரத்துக்கும் துணிச்சலுக்கும் புகழ்பூத்த ஒருவர் என்பதையும் நாம் இங்கு மறந்து விடக் கூடாது. அதன் பின்னர் கலீபா உமர் தன்னை மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினார். அதற்கான பயண வழியை அவர் அறிந்திருக்கவில்லை. கோத்திரத் தலைவர் கலீபாவை அங்கு அழைத்துச் சென்றார்.

அங்கு நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டிருந்தனர். அந்த வளாகம் குப்பை கூழங்கள் நிறைந்த ஒரு பகுதியாகக் காணப்பட்டது. அதைக் கண்டதும் கலீபா உமர் தனது சட்டைக் கைகளை உயர்த்தி விட்டவாறு தாமே அந்த இடத்தை அவசர அவசரமாக துப்புரவு செய்யத் தொடங்கினார். அதைப் பார்த்து அங்கு நின்ற அவரின் இராணுவ ஜெனரல்கள் மற்றும் படை வீரர்கள் உற்பட ஏனைய எல்லா முஸ்லிம்களும் அந்த சுத்திகரிப்பு பணியில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து கலீபா உமர் அங்கு தொழுதார். முஹம்மத் நபி அவர்கள் விண்ணுலக யாத்திரையின் போது அங்கு தொழுகை நடத்தியதற்கு பின்னால் இடம்பெற்ற முதலாவது தொழுகையாக அது அமைந்தது.

பள்ளிவாசல் புனர் நிர்மானம் செய்யப்பட வேண்டும் என உமர் உடனடியாக உத்தரவு பிறப்பித்தார். அங்குள்ள தென்முனைப் பகுதியில் உள்ள உன்னத சரணாலயப் பகுதியில் 3000 பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தக் கூடிய வசதி கொண்ட பாரிய மரக்குற்றிகளால் ஆன மஸ்ஜித் அல் மர்வானி நிர்மாணிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த புனித பிரதேசத்தில் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுது வந்தனர். இவ்வாறு தான் மிகவும் அமைதியான முறையில் ஜெரூஸலம் வெற்றி கொள்ளப்பட்டது. கிறிஸ்தவர்களால் அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலின் மிகவும் புனிதமான நிலை மீள ஸ்தாபிக்கப்பட்டது.

முஸ்லிம்களின் வெற்றிக்குப் பின் அங்கிருந்து வெளியேற முயன்றவர்கள் தமது சொத்து சுகங்களோடு அங்கிருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல் அங்கு தொடர்ந்தும் வாழ விரும்பியவர்களுக்கான சகல பாதுகாப்புக்கும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் சமய உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு 400 வருடங்களாக யூதர்களுக்கு கிறிஸ்தவர்கள் விதித்திருந்த தடையையும் கலீபா உமர் நீக்கினார். யூதர்கள் ஜெரூஸலம் திரும்பி வர உமர் அனுமதி அளித்தார். கிறிஸ்தவர்களின் இடையூரின்றி யூதர்கள் தமது புனித பிரதேசங்களில் வழிபாடுகளில் ஈடுபடவும் அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வாறு தான் ஜெரூஸலம் நகரை யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என சகலரும் இணைந்து சகிப்புத் தன்மையோடும் சமாதானத்தோடும் நல்லிணக்கத்தோடும் வாழக் கூடிய ஒரு நகரமாக கலீபா உமர் மாற்றி அமைத்தார்.

ஜெரூஸலம் நகருக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டிருந்த யூதர்களுக்கு அந்த நகருக்குள் மீண்டும் பிரவேசிக்கும் அனுமதியையும் உரிமையையும் வழங்கியவர்கள் முஸ்லிம்களே ஆவர். ஜெரூஸலம் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்த காலம் முழுவதும் கி.பி 637 முதல் 1917 வரை இரண்டே இரண்டு குறுகிய காலப்பகுதிகளைத் தவிர ஏனைய எல்லா காலங்களிலும் ஜெரூஸலம் நகரம் புனித நகரம் என்ற அதன் உரிமையைத் தெடர்ந்து பேணி வந்துள்ளது.

முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் அங்கு படுகொலைகள் இடம்பெறவில்லை. யாருடைய சொத்துக்களும் அழிக்கப்படவில்லை. தீ வைத்து எரிக்கப்படவும் இல்லை. சூறையாடப்படவும் இல்லை. புனிதப் பிரதேசங்கள் எதுவும் தரைமட்டமாக்கப்படவில்லை. ஆனால் இன்று இவை எல்லாமே யூதர்களின் கொடூரப் பிடியின் கீழ் இடம்பெறுகின்றன. கிறிஸ்தவர்களின் புனிதப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பாக அவர்களிடையே சில சிறிய பிணக்குகள் மட்டும் தான் அன்று காணப்பட்டன. ஆனால் முஸ்லிம்கள் பொதுவாக வன்முறைகளில் இருந்தும் மோதல்கள் மற்றும் முரண்பாடுகளில் இருந்தும் விலகியே நின்றார்கள்.

பின்னர் 1099ல் ஜெரூஸலம் நகரம் கிறிஸ்தவ சிலுவைப் போர் ஆக்கிரமிப்பாளர்களிடம் வீழ்ந்த போது அங்கு எல்லாவிதமான காட்டுமிராண்டித் தனங்களும் அரங்கேற்றப்பட்டன. வயது, பால் வித்தியாசங்கள் இன்றி நோயாளிகள் ஆரோக்கியமானவர்கள் என்ற பாரபட்சம் இன்றி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பெரும்பாலான மக்கள் ஜெரூஸலம் பள்ளிவாசலுக்குள் அடைக்கலம் புகுந்தனர். சுமார் ஒரு லட்சத்தக்கும் அதிகமான மக்கள் தொகையால் அந்தப் பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அதை அந்த மக்களின் தலைகளைக் கொய்து கொன்று குவிப்பதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக சிலுவைப் படையின் ஆளுனர் பயன்படுத்திக் கொண்டார்.

சுல்தான் சலாஹ{த்தீனின் படைகள் ஜெரூஸலத்தை மீண்டும் கைப்பற்றும் வரைக்கும் சுமார் 91 வருடங்கள் சிலுவை யுத்தக் காரர்களின் கொடூரப் பிடிக்குள் ஜெரூஸலம் சிக்கி இருந்தது. இந்த நிகழ்வுதான் இன்றும் உலக முஸ்லிம்கள் மத்தியில் ஜெரூஸலம் நகரம் எவ்வளவு காலம் கொடியவர்களின் பிடியில் இருந்தாலும் சரி அது என்றாவது ஒருநாள் மீண்டும் மீற்கப்படும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

முஸ்லிம்களது கடமையும் பொறுப்புக்களும்:

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “என்னுடைய மக்களில் இருந்து ஒரு பிரிவினர் வருவர் அவர்கள் எப்போதும் உண்மையின் பாதையிலும் நேர்மை மற்றும் ஒழுக்கத்தின் பாதயிலுமே இருப்பர். அவர்கள் தங்களது எதிரிகளை வெற்றி கொள்வர். துன்பங்கள் நேர்ந்தாலும் அவர்கள் துரோகம் இழைக்க மாட்டார்கள். இறைவனின் உதவி கிடைத்து இயல்பு நிலை திரும்பும் வரை அவர்கள் பொறுமையோடு இருப்பார்கள்” அப்போது அவரின் தோழர்கள் கேட்டார்கள் ‘நபியே அவர்கள் எங்கு வாழுகின்றார்கள்?’ என்று. ‘அவர்கள் ஜெரூஸலத்தின் குத்ஸ் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழுகின்றார்கள்’ என்று நபி பதில் அளித்தார்.
அந்த வகையில் அல் அக்ஸா பள்ளிவாசலை காப்பாற்றுவதற்காக இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மக்களாக இன்று பலஸ்தீனர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் இன்று தம்மிடம் இருந்த எல்லாவற்றையும் தியாகம் செய்;துள்ளனர். தமது உயிர் உடைமை என எல்லாவற்றையும் இறைவனுக்காக இழந்துள்ளனர். அவர்கள் இறைவனை சந்திக்கின்ற போது தமது கடமைகளை நிறைவு செய்தவர்களாக காணப்படுவர்.

ஆனால் உலகின் ஏனைய பாகங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் அல் அக்ஸாவுக்காக செய்துள்ள பங்களிப்பு என்ன? என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி. அல் அக்ஸாவைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. அந்தக் கடமைக்காக ஏனைய முஸ்லிம் சகோதர சகோதரிகள் முழுமையான துன்பங்களை அனுபவிக்கின்ற போது நாம் மட்டும் அவற்றை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியுமா? இதற்காக மறுமை நாளில் நாம் அல்லாஹ்விடம் கூறப் போகும் பதில் என்ன?

பலஸ்தீன சகோதர சகோதரிகளுடன் எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த முஸ்லிம்கள் பல வழிகளைக் கையாளலாம். சியோனிஸ ஆக்கிரமிப்பில் இருந்தும் அதன் துயரங்களில் இருந்தும் விடுபட அந்த மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு நாமும் ஆதரவு தெரிவிக்கலாம். அந்த அடக்குமுறையைக் கண்டித்து அதற்கு எதிரான பிரசாரங்களில் நாமும் பங்கேற்கலாம். அந்த மக்களுக்கு தார்மிக அடிப்படையிலும் நிதி ரீதியாகவும் வழங்கக் கூடிய எல்லா ஆதரவுகளையும் நாமும் வழங்கலாம்.

நாம் நீட்டும் நேசக்கரம் அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால் அது தொடர்ச்சியானதான இருக்க வேண்டும். எமது தொடர்ச்சியான ஆதரவும் பிரார்த்தனைகளும் அவர்களையும் மறுமையில் எம்மையும் பாதுகாக்கும். எனவே அநியாயத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடும் அந்த மக்களுக்காக நாம் தொடர்ச்சியாகப் பிரார்த்தனை புரிவோம். முடியுமானவரைக்கும் அவர்களுக்கான உதவிகளையும் செய்வோம்.


லண்டன் நகரில் கடந்த காலங்களில் இடம்பெற்ற குத்ஸ் தின ஆர்ப்பாட்டம்

நியூயோhக் நகரில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களோடு யூதர்களும் கிறிஸ்தவர்களும் பங்கேற்றனர்


பாரிய அளவிலான மக்கள் ஆர்ப்பாட்டம்

லத்தீப் பாரூக்

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...