இஸ்லாம் வறுமை ஒழிப்பின் அடிப்படையாக உழைப்பை ஆதரிக்கின்றது.

Date:

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு newsnow தமிழ் வழங்கும் விசேட கட்டுரை.

உலகில் கடின உழைப்பே உயர்வுக்கு வழியாகும்.உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கானல்நீராகவே இருக்கின்றது.சிறந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் ஒருவனால் எப்போதும் வெற்றி பெற முடியாது.உழைப்பில்லாமல் எந்த ஒரு சிறந்த நிகழ்வுகளையும் ஒருவரது வாழ்வில் நடைபெறாது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

“தோமஸ் அல்வா எடிசன் தனக்கு கிடைக்கும் இரண்டு, மூன்று ஓய்வு மணித்தியாலத்தில் தனது ஆய்வகத்திலேயே உறங்கினார்.இந்த கடின உழைப்பினாலேயே ஒரு சிறந்த அறிவியலாளராக உலகிற்கு புதிய கண்டுபிடிப்புகளை கொடுக்க முடிந்தது.

 

தேசத் தலைவர்கள் பலரின் வாழ்க்கையில் 17மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.அதனால் தான் தேசத்தின் சுதந்திரத்தின் பங்களிப்பில் அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள் .

 

தற்போதைய கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர் என அனைத்துலக கிரிக்கெட் ரசிகர்களாலும் போற்றப்படுகின்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் அண்மையில் சர்வதேச ஒருநாள் போட்டியின் தரவரிசையில் முதலாவது இடத்தை சுவீகரித்துக் கொண்டார்.கடந்தகாலங்களில் பல கிரிக்கெட் ஜாம்பவான்களினால் விமர்சிக்கப்பட்ட இவர் விமானங்களை தகர்த்தெறிந்து முன்னேறியுள்ளார்.இதற்கு அவருடைய கடின உழைப்பும் தொழில் பக்தியுமே தான் காரணம் என்று கூறலாம்.எனவே உழைப்பினால் மலர்கிறது வாழ்வு,வாழ்வினால் வளர்கிறது உழைப்பு .உழைப்பை மகிமைப்படுத்துவதுவதில் ஒவ்வொரு உழைப்பாளியின் பங்களிப்பு அளப்பரியது.

 

உழைப்பின் அவசியம் குறித்து உலகில் உள்ள அனைத்து மதங்களும் வலியுறுத்துகிறது.அந்தவகையில் உழைப்பு குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாட்டை பார்ப்போம்,

உழைப்பு குறித்து இஸ்லாம் பல இடங்களில் குறிப்பிடுகிறது.அந்தவகையில் உழைப்புதான் ஒரு மனிதனை உயர்த்தும் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள். உழைக்காமல் பிறரின் உழைப்பில் தங்கள் காலத்தை கழித்துவிடலாம் என்று எண்ணுபவர்களை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதேபோல் உழைக்காமல் இறைவன் கொடுப்பான் என்று பள்ளிவாசலில் முடங்கி கிடப்பதிலும் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை இஸ்லாம் அழுத்திச் சொல்கிறது. உடலில் வலு இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

 

நபிகள் நாயகம் அவர்களிடம் ஓர் இளைஞன் வந்து யாசகம் கேட்டான். அவனைப் பார்த்த நபியவர்கள் ‘உன்னுடைய வீட்டில் ஏதேனும் இருக்கிறதா?’ எனக் கேட்டார்கள். ‘ஒரே ஒரு போர்வைதான் உள்ளது’ என்று அந்த இளைஞன் கூறினான். அந்த போர்வையை கொண்டு வரச் செய்த நபியவர்கள், அந்த போர்வையை ஏலம் விட்டார்கள். அந்த பணத்தைக் கொண்டு கோடரி ஒன்றை வாங்கி அந்த இளைஞனிடம் கொடுத்துவிட்டு ‘காட்டிற்கு சென்று விறகு வெட்டிப் பிழைத்துக்கொள். யாசகம் கேட்பதைவிட அதுதான் சிறந்தது’ என்று கூறி அந்த இளைஞனை அனுப்பி வைத்தார்கள்.

 

பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் வந்தான் அந்த இளைஞன், ‘தற்போது நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். தங்களுக்கு நன்றி கூறவே வந்தேன்’ என்று நன்றி சொல்லி விடைபெற்று சென்றான்.

 

பொருள் வேண்டுவோருக்கு பொருளைக் கொடுப்பதைவிட பொருள் ஈட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் நபிகள் நாயகம் அவர்களின் மூலம் மனித சமூகத்திற்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் நற்செய்தியாகும்.

‘ஒருவர் தன் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது’ என நபியவர்கள் தன் தோழர்களிடம் குறிப்பிடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் உழைப்பின் மூலமே தனது வாழ்வையும் அவர்கள் அமைத்துக்கொண்டார்கள்.

மிகப்பெரிய மார்க்க அறிஞராக, மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபராக நபியவர்கள் இருந்த போதிலும் தொடக்க காலத்தில் ஆடு மேய்ப்பது, பின்னர் வியாபாரம் செய்வதுமாகத்தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் மட்டுமல்ல இறை வனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களும் உழைத்துதான் தங்களது காலத்தை கடினத்தோடு கழித்திருக்கிறார்கள்.

தனது செய்தியை மக்களிடம் எடுத்துரைப்பதற்காக அனுப்பப்பட்ட தூதர்களையே உழைத்து தான் வாழ வேண்டும் எனக் கட்டளை பிறப்பித்திருக்கிற இறைவன், மனிதர்கள் உழைக்காமல் உண்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வான்.

இறைவனிடம் கையேந்தினால் அவன் தருவான், அவன் தங்களது கஷ்டங்களை போக்குவான் என்ற நம்பிக்கையில் உழைக்கச் செல்லாமல் பள்ளிவாசலில் இறை வணங்குதலை மட்டுமே சிலர் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களை நோக்கி தனது சாட்டையை உயர்த்தி கலீபா உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘உழைக்காமல், வருமானத்தைத் தேடி வெளியே செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக்கூடாது. அல்லாஹ்வே எனக்கு உணவை வழங்கு என பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது. வானம் தங்கத்தையோ, வெள்ளியையோ மழையில் பொழிவதில்லை எனவே உழைப்பின் அருமையை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு, அதற்கு ஏற்ப இறைவனை வணங்கி உழைத்து வாழ்வது அவசியமாகும்.

இன்று முழு உலகையுமே கொவிட் தொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்த காலகட்டத்தில் உலகம் எதிர்நோக்கும் மிகப்பெரும் நெருக்கடிகளில் ஒன்றாக வறுமைப் பிரச்சினை மாறியிருக்கின்றது. பொருளியலாளர்கள் வறுமையை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக அடையாளப்படுத்துகின்றனர். ஏனெனில், வறுமை என்பது ஒரு தனிமனிதன் அவனது வருமானம் மூலமாக தன்னுடையதும், தனது குடும்பத்தினுடையதும் பொருளாதார ரீதியான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையாகும். இதனால்தான் பொருளியலாளர்கள் வறுமைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆய்வு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் அதற்கான பல தீர்வுகளை முன்வைப்பதில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.

அதேபோல, சமூகவியலாளர்கள் வறுமையை ஒரு சமூகப் பிரச்சினையாக நோக்குகின்றனர். ஏனெனில், வறுமைப் பிரச்சினையானது ஒரு சமூகத்தின் வளர்ச்சியிலும், அதனது முன்னேற்றத்திலும் மிகப் பெரும் தடைக்கல்லாகக் காணப்படுகின்றது. வறுமைப் பிரச்சினையானது சமூகத்திற்கிடையில் பொறாமை, வெறுப்பு, பகைமை போன்ற பல மோசமான உள நோய்களையும் ஏற்படுத்துகின்றது. சிலபோது வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் முழுச் சமூகத்தின் மீதும் ஆத்திரம் கொண்டவர்களாகவும், சரி பிழை, நன்மை தீமைகளை பிரித்துப் பார்க்காது அதன் சட்டங்கள், பண்பாடுகளுக்கு எதிராகக் கிளம்பக் கூடியவர்களாகவும் அவர்களை வறுமை மாற்றி விடுகின்றது. இதனால்தான் சமூகவியலாளர்கள் வறுமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

இவை அனைத்திற்கும் மேலாக, வறுமை என்பது ஒரு மானிடப் பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. இது மனிதன் என்ற வகையில் அவன் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினை. உலகில் மனிதனை அல்லாஹ் தனது பிரதிநிதியாகப் படைத்து, அவனை கண்ணியப்படுத்தி, அவனுக்கு வானங்கள், பூமியிலுள்ள அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்துள்ளான்.

“(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன் எனக் கூறிய சமயத்தில்….” (அல்பகரா-30)

“(அவ்வாறே) வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அவன் தன்னுடைய அருளினால் உங்களுக்காக வசப்படுத்தியிருக்கின்றான்” (அல் ஜாஸியா-13)

 

இவ்வாறு அல்லாஹ் மனிதனுக்கு இப்பிரபஞ்சத்தை வசப்படுத்திக் கொடுத்திருந்தாலும் மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதவனாய் இருக்கின்றான். தனது தேவைகளைப் போதுமான அளவு அடையாதிருக்கின்றான். அந்தவகையில், இஸ்லாம் வறுமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும், அதன் கோரப்பிடியிலிருந்து மனிதனை விடுவிப்பதிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றது. வெறும் கோட்பாட்டு ரீதியாக அன்றி நடைமுறை ரீதியாக வறுமைப் பிரச்சினையை தீர்ப்பதில் இஸ்லாம் வெற்றி கண்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

 

தொகுப்பு :அப்ரா அன்ஸார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...