இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஆஸ்பத்திரிகளில் இருந்து தமக்கு ஆக்சிஜன் வழங்குமாறு அவசர தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் இதுபோன்ற தகவல்கள் பல பிரதான ஆஸ்பத்திரிகளில் இருந்து வந்து கொண்டிருப்பதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஏற்பட்ட கொரோணா தொற்றாளர்களுக்கான ஆக்சிஜன் பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படாமல் இருப்பது பெரும் கவலைக்குரியதாக உள்ளது. நாளுக்கு நாள் இந்த நிலைமை மோசம் அடைகின்றதே தவிர எந்தவிதமான சிறிய முன்னேற்றமும் காணப்படாமல் இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும்.
புது டில்லியில் மட்டும் சனிக்கிழமையன்று ஒரு பிரதான ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் உட்பட 12 நோயாளர்கள் மரணமடைந்துள்ளனர். காரணம் தேவையான அளவு ஆக்சிஜன் இன்மையாகும்
இது தவிர எல்லா ஆஸ்பத்திரிகளிலும் வெளியே நோயாளர்களோடு அவர்களது உறவினர்கள் பல மணிநேரம் படுக்கை ஒன்று கிடைக்காதா? டாக்டர் ஒருவரின் சேவை கிடைக்காதா? ஒரு தாதியாவதுவந்து எனது உறவினரை பார்க்க மாட்டாரா என்ற கவலைகளுடன் மக்கள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை காணப்படுவதாக வெளிநாட்டு செய்தியாளர்கள் அங்கிருந்து தகவல் அனுப்பிய வண்ணம் உள்ளனர். டெல்லியில் பல பிரதான ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பிரச்சினை தீவிரமடைந்து வருகின்றது. ஆஸ்பத்திரிகளின் பிரதான கொள்கலன் முடிவுற்றால் அதனை மீண்டும் நிரப்புவதற்கு வேறு எந்த வழியும் இல்லை என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது மிகவும் பயங்கரமான ஒரு நிலைமை என்று புதுடில்லி மருத்துவமனை டாக்டர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். சிறிய ஆஸ்பத்திரிகளில் நிலைமை இதைவிட மோசமானதாகும். காரணம் பல சிறிய ஆஸ்பத்திரிகளில் தேவையான ஆக்சிஜன் கொள்கலன் தாங்கிகள் இல்லை அவர்கள் முழுக்க முழுக்க பெரிய சிலிண்டர்களில் நம்பி இருக்கின்றனர். எனவே அவற்றில் உள்ள ஆக்சிஜன் துரிதமாக தீர்ந்து வரும் நிலையில் அந்த ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை பெரும் கவலைக்குரியதாக மாறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் நேற்று மட்டும் 20 ஆயிரம் புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் .
407 மரணங்களும் சம்பவித்துள்ளன. தொடர்ந்து பல தினங்களாக தினசரி நான்கு லட்சத்தை தாண்டி வரும் கொரோணாதொற்றாளர்கள் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது பெரும் கவலைக்குரியதாகும்.