தொகுப்பு:காயல் மகபூப் (தமிழ் நாடு)ஊடகவியலாளர்.
மே 14 ,1948ல் பாலஸ்தீன் களவாடப்பட்டு, பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை; பல லட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றம் என்ற கொடூரம் அரங்கேறி இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பு தேசம் உருவாக்கப் பட்டது.
அதன் ஆசை அடங்கவில்லை . அகன்ற இஸ்ரேல் என்ற கனவில் இப்போது கிழக்கு ஜெருசலத்தில் இருந்தும் யூத ராணுவத்தால் பாலஸ்தீன முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதால் முஸ்லிம்களின் முப்பெரும் புனிதத் தலங்களில் ஒன்றான மஸ்ஜித் அல் அக்ஸா ரணகளம் ஆகியுள்ளது.
இந்த புனித ரமலான் நோன்பின் கடைசி பத்து நாட்களில் அங்கு தொழுகை நடத்திய நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர்., ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
காஸாவின் அடுக்குமாடி குடியிருப்புக்கள் குண்டு வீசி தகர்க்கப்படுகின்றன. மக்கள் உணவு உடை இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்தக் கொடூரங்களை உலகமும் ஐநாவும் வேடிக்கை பார்க்கின்றன. முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதற்கு பதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அஞ்சி மௌனம் சாதிக்கின்றனர்.
கிபி 1095 நவம்பர் 27ல் போப் இரண்டாம் ஏர்பன் மதக் கட்டளையாக பிறப்பித்த சிலுவைப்போர் தொடங்கியது முதல் கடந்த 925 ஆண்டுகளில் பலமுறை ஜெரூஸலம் கொடுமைகளை சந்தித்து வருகிறது. 1875 இல் தியோடர் ஹெசில் உருவாக்கிய ஜியோனிஸ சித்தாந்தம், பிரிட்டன் பிரதமர் சர். ஹென்றி கேம்பல் பானர்மேன் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு 1907இல் தாக்கல் செய்த அறிக்கை, அதனைத் தொடர்ந்து 1917 நவம்பர் 2ல் வெளியிடப்பட்ட பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பால்ஃபரின் பிரகடனம், அமெரிக்க அதிபர் ஈசன் ஹெவர் உருவாக்கிய மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் யூத நாடு கோட்பாடு இவை எல்லாமாகச் சேர்ந்து இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் பாலஸ்தீனத்தை இல்லாமலாக்க யூத பயங்கரவாதத்திற்கு எல்லாவகையிலும் துணை போகின்றன.
மே 14, 1948 கொடூரம், “பேரழிவு” என பொருள்படும் “நக்பா” என வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறது. இந்த நாளை பாலஸ்தீன முஸ்லீம்கள் கண்ணீருடன் நினைவுகூற இஸ்ரேல் தனது சுதந்திர தினமாக கொண்டாடி மகிழ்கிறது.
அந்தக் கருப்பு வரலாற்றை உலக மக்கள் அறிந்து கொள்வதும், முஸ்லிம்கள் தெரிந்து வைப்பதும் அவசியம். யூத பயங்கரவாதத்துக்கு எதிராக ,பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரின் கடமை .
பாலஸ்தீன் – புனித பூமி
இஸ்லாமிய வரலாற்றில் பெருமைக்குரிய ஷாம் தேசம் என்பது இன்றைய சிரியா, பாலஸ்தீன், ஜோர்டான் மற்றும் லெபனான் உள்ளடக்கிய நிலப்பகுதி.
”பாலஸ்தீன்” பல தீர்க்க தரிசிகளின் பாதம்பட்ட ஷாம் தேசத்தின் புனித பகுதி!
‘மக்கமா நகரிலுள்ள மஸ்ஜிதுல் ஹரத்துக்குப் பின் 40 ஆண்டுகளில் உருவான உலகின் இரண்டாவது இறையில்லம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் புகழப்பட்ட மஸ்ஜிதுல் அல் அக்ஸா அமைந்துள்ள பைத்துல் முகத்தஸ் உள்ளடங்கிய, `அல்குத்ஸ்` என அல்குர்ஆன் வர்ணிக்கும் ஜெரூஸலம் உள்ள தேசம்.
இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆண்ட கி.பி 638 முதல் உதுமானிய சாம்ராஜ்யத்தின் இரண்டாம் கலிபா அப்துல் மஜீத் கான் ஆண்ட 1922வரை முஸ்லிம்களின் ஆளுகையில் இருந்த நாடு.
அந்த பாலஸ்தீனில்…….
1948 மே 14 ஒரே நாளில் பதிமூன்றாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, 530 ஊர்கள் அழித்து தரைமட்டமாக்கப்பட்டன. அன்று தொடங்கி ஜூலை முடிய 7.50 லட்சம் பாலஸ்தீன முஸ்லிம்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இஸ்ரேல் என்ற யூத ஆக்கிரமிப்பு நாடு அந்நாளில் உருவாக்கப்பட்டது. பேரழிவு என பொருள்படும் `நக்பா` என்று உலக வரலாற்றில் இந்த கருப்பு அத்தியாயம் குறிப்பிடப்படுகிறது.
இஸ்ரேலை தனது தத்துப்பிள்ளையாக வளர்க்கும் அமெரிக்கா, உலக எதிர்ப்பையும் மீறி ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பின்படி டெல் அவீவில் இருந்த தங்கள் தூதரகத்தை ஜெரூஸலத்திற்கு மாற்றி அதிபர் மகள் இவாங்காவை கொண்டு திறந்து வைத்தது.
`நக்பா` என வர்ணிக்கப்படும் இந்த பாலஸ்தீன பேரழிவை ஜியோனிச பயங்கரவாதிகள் அரங்கேற்றினாலும் அதற்கு அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்யம் முழு ஆதரவளித்தது; ஐக்கிய நாடுகள் சபை அமைதி காத்தது; தூண்டிவிட்ட பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வேடிக்கை பார்த்தன.
மன்னிக்க முடியாத கொடுமை என்னவெனில் பாலஸ்தீனத்தை அடுத்துள்ள முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் இதில் நயவஞ்சகத்தனமாக நடந்து கொண்டது தான். இஸ்ரேல் யூத ஆக்கிரமிப்பு தேசத்தைப் பற்றிச் சொல்கின்ற போது, `அதனை சுற்றியுள்ள அரபு நாடுகளின் மக்கள் ஒரே நேரத்தில் சிறுநீர் கழித்தாலே அந்நாடு அழிந்து விடும்` என்பார்கள்.
அவ்வளவு பெரும் எண்ணிக்கை! பாலஸ்தீனத்தை சுற்றி உள்ள முஸ்லிம் நாடுகளில் மக்கள் தொகை எகிப்து 10கோடி, சிரியா 2கோடி, ஜோர்டான் 80 லட்சம், ஈராக் 4கோடி, ஈரான் 8கோடி, துருக்கி 8கோடி. லெபனான் 61 லட்சம், சவூதி 3கோடியே 30 லட்சம் என சுமார் 37 கோடி. சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகளையும் சேர்த்தால் 55கோடியாகி விடும். உலக முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதி.
இஸ்ரேல் யூத ஆக்கிரமிப்பு நாடு
இஸ்ரேல் யூத ஆக்கிரமிப்பு தேசம் இயற்கையாக உருவான தல்ல; செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடு என்பதால் எல்லாவகையிலும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இஸ்ரேல் பரப்பளவில் வெறும் 20,770 ச.கி.மீ மட்டுமே! அதாவது இந்தியாவின் 29 மாநிலங்களில் 25வது இடத்தில் உள்ள மிஸோரம் மாநிலத்தை விட சிறியது. இதில் 66சதவிகிதம் பாலைவனம். ஒரு பக்கம் கடல் மற்ற 3 பக்கம் அரபு நாடுகள். இஸ்ரேல் யூத ஆக்கிரமிப்பு தேசத்தில் மக்கள் தொகை 87 லட்சம். மக்களில் மிகப் பெரும்பான்மையினர் யூத குடியேறிகள்.
இப்படி வெளியிடங்களில் இருந்து வந்து ஆர்வத்தோடு குடியேறியவர்கள் இன்று அங்குள்ள பாதுகாப்பற்ற சூழலில் அங்கு தங்கி வாழ தயங்குகின்ற காரணத்தால் நிம்மதியாக வாழ இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தேசத்தில் இருந்து யூதர்கள் வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உள்ளே வரும் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
ஒரு நாடு என்ற அந்தஸ்தில் இருப்பதற்குரிய எந்த தகுதியும் இல்லாத ஆக்கிரமிப்பு நாடு இஸ்ரேல். அந்த நாட்டில் இருக்கும் தொழிலாளர்கள் 33 லட்சம் பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கையை வைத்து தொழில் புரட்சியோ, பொருளாதார முன்னேற்றமோ காணமுடியாது. அங்கு தொழிலாளர்களுக்கும் அறிவாளிகளுக்கும் எப்போதுமே பற்றாக்குறை தான். வரி வருவாயை மட்டுமே நம்பி அந்நாடு இருப்பதால் வரி அதிகம். எனவே வெளிநாட்டு அறிவு ஜீவிகளின் தொழில் நுட்பத்தையும் உழைப்பையும் நம்பியே அந்நாடு உள்ளது.
இந்நாட்டிற்கு ஆண்டு தோறும் அமெரிக்கா 2.6 பில்லியன் டாலர் நிதி உதவியாக வழங்கத் தொடங்கி அது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நாட்டின் பொருளாதார வளம் 360 பில்லியன் டாலர் மட்டுமே. இதனால் உலகம் முழுவதும் யூதர்களிடமும், தங்களுக்கு ஆதரவான நாடுகளிலும் நிதியும் ராணுவ தேவைக்கான உதவிகளையும் பெற்று வருகிறது. இதன் வெளிநாட்டு ஏற்றுமதி 10 சதவிகிதம் மட்டுமே.
அப்படியானால், ‘ஆயுத ஏற்றுமதியில் 3233 மில்லியன் டாலர் என்ற அளவில் உலகின் 10வது நாடாக இஸ்ரேல் இருக்கிறதே’ என்ற கேள்வி எழலாம். அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகள் சிலவற்றை இஸ்ரேலில் அமைத்துள்ளன. அந்த நிறுவன ஆயுத தயாரிப்புக்கள் உலகில் சந்தைப்படுத்தப்படுகின்றன என்பதே உண்மை.
இஸ்ரேல் தண்ணீர் தட்டுப்பாடான நாடு. குடிப்பதற்கே வெளிநாடுகளை நம்பியிருக்கிறது.
ஐ.நா அறிவிப்பின் படி ஒரு மனிதன் சராசரியாக 1000 கியூபிக் மீட்டர் நீரை பயன்படுத்த வேண்டும். ஆனால் இஸ்ரேலில் 265 கியூபிக் மீட்டர் நீரை மட்டுமே மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இஸ்ரேலுக்கு எகிப்து, துருக்கி, ஜோர்டான், நாடுகளே தண்ணீர் வழங்குகின்றன.
ராணுவ நடவடிக்கை மூலம் அல்ல, இந்த நாடுகள் தண்ணீர் வினியோகத்தை நிறுத்திவிட்டாலே இஸ்ரேல் அழிந்துவிடும். அண்மையில் இஸ்ரேலில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க அந்நாட்டால் முடியவில்லை. துருக்கியே அதனை அனைத்துக் கொடுத்தது. இஸ்ரேலில் 20 சதவீதம் மட்டுமே விவசாய நிலம். தங்களின் உணவு தேவைக்கு 80 சதவீதம் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இதுமட்டுமின்றி 60 சதவீத எண்ணெய் அரபு நாடுகளிடமிருந்தே இஸ்ரேல் இறக்குமதி செய்கிறது. அந்நாட்டில் இயற்கை வளமே கிடையாது.
தனது எரிசக்தி பயன்பாட்டிற்கு 99 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. ராணுவ பலம் என்று எடுத்துக் கொண்டால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் பெரிய இராணுவத்தை செயல்படுத்த முடியாது, உண்மையில் சிறிய யுத்தத்தைக் கூட இஸ்ரேல் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால், அதற்கு ராணுவ ரீதியாக பக்கபலமாக இருப்பது அமெரிக்கா.
இஸ்ரேல் பிரதமர் புன்யாமின் நெதன்யாகு கடந்த ஆண்டு பேசுகையில், `இஸ்ரேலுக்காக மத்திய தரைக்கடலில் நிமிட்ஸ் என்ற விமானந்தாங்கி போர் கப்பல் நிரந்தமாக நிறுத்தப்பட்டிருக்கிறது; அதே போன்று மத்திய கிழக்கிலும் தரையில் ஒரு போர்க் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது. அது தான் `இஸ்ரேல்` என்றார். ஆனால், 30ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் அலெக்ஸாண்டர் எம்.ஹெக் , ‘அமெரிக்காவின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல் படைத் தளம் இஸ்ரேல் தான். அதில் அமெரிக்க வீரர் ஒருவர் கூட இல்லை; அது அமெரிக்க பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது’ என்றார். அமெரிக்க செயலாளாரின் அன்றைய கருத்தை தான் இஸ்ரேல் பிரதமர் இன்று பிரதிபலிக்கிறார்.
‘இஸ்ரேல் ராணுவத்தாலும் தொழில் நுட்ப ஆற்றலாலும் பலம் பொருந்திய நாடு; அது அமெரிக்காவை ஆட்டிப் படைக்கிறது.’ என்பது வெறும் மாயை. உண்மையில் இஸ்ரேலை தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அமெரிக்கா தான். மத்திய கிழக்கு ஆதிக்கத்துக்காக இஸ்ரேல் தனக்கு தேவை என அமெரிக்கா அதை தூக்கி வளர்க்கிறது. அமெரிக்காவுக்கு தான் தேவை என்பதை பயன்படுத்தி பாலஸ்தீன் நில ஆக்கிரமிப்பு, பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் என இஸ்ரேல் வரம்பு மீறுகிற போதெல்லாம் தன் செல்லப்பிள்ளை என்பதற்காக அது கண்டு கொள்வதில்லை. ஆனால், தேவையில்லை என்கிற போது தன் கள்ளக்காதல் அரபு நாடு ஒன்றை பயன்படுத்தியே இஸ்ரேலை அமெரிக்கா அழித்துவிடும்.
சர்வதேச நாடுகள் ஆதரிக்காவிட்டால் இஸ்ரேல் யூத ஆக்கிரமிப்பு தேசம் ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்பதே யதார்த்தம். ஆக, உலக முஸ்லீம்களை அச்சுறுவதற்காகவும், அரபு நாடுகளை ஆட்டிப்படைப்பதற் காகவுமே அமெரிக்க முதலா ளித்துவ ஏகாதிபத்தியம் இஸ்ரேல் யூத ஆக்கிரமிப்பு தேசத்தை பூதாகரமாக காட்டுகிறது. இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை மிரட்டுவதற்கும், புனிதத் தலமான மஸ்ஜித் அல் அக்ஸாவை சிதைப் பதற்கும், வரலாற்றை மறைப் பதற்கும் முயற்சிக்கிறது. அதன் வெளிப்பாடுதான் பாலஸ் தீனர்கள் மீது தாக்குதல்கள், மஸ்ஜித் குப்பதுஸ் சக்ராவை அல் அக்ஸா என விளம்பரப்படுத்துவது எல்லாம்!
பாதிக்கப்பட்டு வரும் பாலஸ்தீனர்கள் :-
சர்வதேச சமூகங்களிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட சமூகம் பாலஸ்தீன மக்கள் தான். இப்படி ஒரு பாதிப்பை எந்த ஒரு சமூகமும் உலகில் சந்தித்தது இல்லை. வரலாற்றில் பாலஸ்தீன மக்கள் தங்கள் உயிர், உடமைகளை மட்டுமல்ல; தங்கள் தேசத்தின் பெரும் பகுதியையே இழந்து நிற்கின்றனர். ஆனால் யாரையும் நம்பாமல் அல்லாஹ்வுக்காக, புனித தளத்தை காக்கவும், நிலங்களை மீட்கவும் இன்னமும் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று பாலஸ்தீன் வெறும் 6220ச.கி.மீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்ட அளவு. இதில் மேற்கு கரை 5860ச.கி.மீ. அதாவது பிரிக்கப்படாத வேலூர் மாவட்ட அளவு. காஸா வெறும் 360ச.கி.மீ பரப்பே! அதாவது பாண்டிச்சேரியை விட சிறியது. மேற்கு கரைக்கும் காஸாவுக்கும் இடைப்பட்ட தூரம் 40கி.மீட்டர் மட்டுமே! அது இப்போது இஸ்ரேலின் ஆதிக்கத்தில். காஸா இஸ்ரேலுடன் 57கி.மீட்டர் எல்லையை கொண்டுள்ளது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் 26லட்சம், காஸாவில் 17லட்சம், கிழக்கு ஜெரூஸலமில் 2லட்சம் என 45 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 3சதவீதம் மட்டுமே முதியோர், 42சதவீதம் 15 வயதுகளுடையவர்களே! அதனால்தான் இஸ்ரேல் யூத ஆக்கிரமிப்பாளர்கள் பாலஸ்தீனத்தில் இன அழிப்பு, இனப்பெருக்க தடுப்பு என கொடூரங்களை அரங்கேற்றுகின்றனர்.
அவர்கள் இந்தியாவுக்கு கற்றுக் கொடுத்ததுதான் காஷ்மீர் இன அழிப்பு. பாலஸ்தீன் இந்த அளவு சிதைக்கப்பட்டதற்கு காரணம் ஜியோனிச பயங்கரவாதம், அமெரிக்க ஐரோப்பிய சூழ்ச்சி மட்டுமல்ல முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் நயவஞ்சகமும் தான்.
ஜியோனிஸ சித்தாந்தம்
1875களில் ஜியோனிஸ சித்தாந்தத்தை உருவாக்கிய தியோடர் ஹெஸில் யூதர்களுக்கு ஒரு தேசம்; அதற்கு நிலம் வாங்க ஒரு வங்கி என்ற திட்டத்தை 1869ல் அறிமுகம் செய்தார். இதற்கான முதலாவது மாநாடு 1897 ஆக்ஸ்ட் 29,30,31 தேதிகளில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தான் பாலஸ்தீனத்தில் யூதர்களை குடியமர்த்தவும் அதற்காக தனிநாடு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
1901ல் துருக்கி சென்ற தியோடர் ஹெஸில், உதுமானிய கலிபா இரண்டாம் அப்துல் ஹமீத் கானிடம், `பாலஸ்தீனத்தில் யூதர்களை குடியமர்த்தவும் அதற்கு சன்மானமாக 150 மில்லியன் பவுன்களை தருவதாகவும் கோரினார். “முஸ்லிம் சமூகம் தனது ரத்தத்தை தண்ணீராக தியாகம் செய்த பாலஸ்தீன் புனித பூமியின் ஒரு பிடி மண்ணைக் கூட தரமாட்டேன்; கிலாபத் வீழ்த்தப்பட்டால் மட்டுமே அது நடக்கும், நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது; நான் தியோடர் ஹெஸிலை சந்திக்கவும் மாட்டேன்` என சொல்லி மறுத்து அனுப்பி விட்டார் கலிபா அப்துல் ஹமீத் கான். அவரை சந்திக்காமலேயே திரும்பினார் ஹெஸில்.
முதல் உலகப் போரில் ஜெர்மன் பக்கம் சேர்ந்து துருக்கியை தலைமையிடமாகக் கொண்ட உதுமானியப் பேரரசு யுத்தத்தில் ஈடுபட்டது. இந்த அணி தோல்வியை சந்தித்ததால் உதுமானிய சாம்ராஜ்யத்தை சிதைத்து பங்கு போடுவதில் பிரிட்டனும் பிரான்ஸும் தீவிரம் காட்டின. உதுமானிய பேரரசின் ஆளுகையில் இருந்த ஷாம் தேசத்தின் பாலஸ்தீன் மற்றும் ஜோர்டானை பிரிட்டனும், சிரியா மற்றும் லெபனானை பிரான்ஸும் கைப்பற்றின.
உலக மகாயுத்தத்தில் உதுமானிய பேரரசுக்கு எதிராக தங்களை ஆதரித்து செயல்பட்ட தங்கள் அதி தீவிர விசுவாசிகளுக்கு அந்த நாடுகளின் ஆட்சி அதிகாரங்களை வழங்கின.
பிரிட்டனின் சூழ்ச்சி
சர்.ஹென்றி கேம்பல் பானர்மென் பிரிட்டன் பிரதமராக இருந்த போது ஐரோப்பிய கூட்டமைப்பின் 7 நாடுகளிடம் 1907ல் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், மத்திய கிழக்கில் உள்ள மக்கள் வளங்களையும், உலக வர்த்தக வழித்தடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களின் மதம், நம்பிக்கை, கலாச்சாரம், மொழி, வரலாறு, விருப்பம் என அனைத்துமே ஒன்றாகவே உள்ளது.
எந்த ஒரு இயற்கை தடுப்பும் அவர்களை தனிமைபடுத்தாது. இவர்கள் ஒன்றிணைந்து விட்டால் ஐரோப்பிய உலகம் அவர்கள் கைக்கு சென்றுவிடும். ஐரோப்பாவிற்கு அவர்கள் ஆபத்தானவர்கள் எனவே இதனை தடுப்பதற்கு ஒரு அந்நிய சக்தியை அவர்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தியே ஆகவேண்டும், என குறிப்பிட்டு 4 ஆலோசனைகளையும் தெரிவித்திருந்தார்.
1.அரேபியர்களை தனிமைப்படுத்தவேண்டும், அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும். 2. அவர்களின்அரசியல்அதிகாரங்களை பிரிட்டன், பிரான்ஸ் கட்டுப்படுத்த வேண்டும். 3. அவர்கள் ஒன்று படாமல் இருப்பதற்கு மோதல்கள், சதிதிட்டங்கள், அரசியல், மத, வரலாறு ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்த வேண்டும். 4.பாலஸ்தீனத்தில் யூத தேசத்தை உருவாக்கி அதன் மூலம் ஐரோப்பிய நலன்களை, சுயவிருப்பங்களை, ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்பனவே அந்த ஆலோசனைகள்.
அதனை பின்பற்றிதான் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் எ.ஜே.பால்ஃபர் ஒரு பிரகடனத்தை 1917 நவம்பர் 2ல் வெளியிட்டார். “பாலஸ்தீனத்தில் யூதர்கள் தங்களுக்கு என்று ஒரு தனிநாடு அமைத்துக் கொள்ள பிரிட்டன் முழு ஆதரவு தரும்”என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரிட்டன் படை பாலஸ்தீனத்தை நோக்கி புறப்பட்டது. 1917 டிசம்பர் 11 அன்று ஜாபா கேட் வழியாக ஜெரூஸலத்தில் நுழைந்த பிரிட்டன் ஜெனரல் எட்மண்ட் ஆலன்பீ இன்றுடன் சிலுவையுத்தம் முடிவுக்கு வருகிறது என குறிப்பிட்டார்.
1095 நவம்பர் 27ல் போப் இரண்டாம் ஏர்பன் மதக் கட்டளையாக பிரகடனம் செய்த சிலுவைப் போர் கி.பி 1097ல் பாதிரியார் பீட்டர் தலைமையில் தொடங்கி 1291ல் பிரான்ஸ் மன்னன் ஒன்பதாம் லூயி தலைமையில் நடைபெற்ற 9ம் சிலுவைப் போருடன் முடிவடைந்திருந்தது. இந்த சிலுவை யுத்தங்கள் ஜெருஸலமை மையமாகக் கொண்டே நடைபெற்றன.
முதல் யுத்தத்தில் மட்டும் தோல்வியடைந்த முஸ்லிம்கள் மீதி 8 யுத்தங்களிலும் வெற்றி பெற்றனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தனிநாடு என்ற பிரிட்டனின் திட்டத்துக்கு சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பு 1922ல் ஒப்புதல் வழங்கியது. ஐரோப்பிய நாடுகளில் இருந்த யூதர்கள் பாலஸ்தீனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே குடியமர்த்தப்பட்டார்கள்.
1922ல் பாலஸ்தீனத்தில் 83ஆயிரமாக இருந்த யூத மக்கள் தொகை இன்று 87லட்சம்! அதாவது 90சதவீத யூதர்கள் ஐரோப்பாவில் இருந்து பாலஸ்தீன் வந்தவர்கள்.
நக்பா கண்ணீர் வரலாறு
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவின் ஆதிக்கம் ஆட்டம் கண்டது. பிரிட்டன், பிரான்ஸ் வலிமை இழந்தன. லெபனான், சிரியா, ஜோர்டான், உள்ளிட்ட நாடுகளுக்கு அவை சுதந்திரம் வழங்கின. அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் வலிமை மிக்க வல்லரசுகளாயின. பாலஸ்தீன் விவகாரத்தை ஐக்கியநாடுகள் சபை அதிகாரத்துக்கு கொண்டு சென்ற அமெரிக்கா, அதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகள் ஆயுதங்களை பயன்படுத்த தடை ஏற்படுத்தியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை பிரித்து அரபு நாடு, யூத நாடு, ஜெரூஸலம் தனி என 1947நவம்பர் 29ல் அறிவித்தது. இதன்படி 70சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்கு 43சதவீத இடமும், 30சதவீதம் உள்ள யூதர்களுக்கு 56சதவீத இடமும் என குறிப்பிட்டிருந்தது; இதனை அரபு நாடுகள் ஏற்கவில்லை.
இதனிடையே தனது ராணுவத்தை பாலஸ்தீனத்திலிருந்து 1948 மே 15 அன்று முற்றிலுமாக விலக்கிக் கொள்ளும் என பிரிட்டன் அறிவித்தது. பிரிட்டனின் இத்திட்டம் முற்கூட்டியே ரகசியமாக யூதர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. ஜியோனிஸ பயங்கர வாதிகள் அனைத்து வகையான முன்னேற்பாடுகளுடன் தயாராக இருந்தனர்.
நிராயுத பாணிகளான பாலஸ்தீன முஸ்லிம்கள் என்ன நடக்கிறது என அவதானித்து சுதாரிப்பதற்குள் ஒரு நாள் முன்னதாகவே பிரிட்டன் தனது ராணுவத்தை முற்றிலுமாக விலக்கிக் கொண்டது. ஆம் 1948 மே 14 இஸ்ரேல் என்ற யூத நாடு அன்று உதயமாகிவிட்டதாக ஜியோனிஸ சக்திகள் அறிவித்தனர்.
வரலாற்றில் கரைபடிந்த கண்ணீர் அத்தியாயமான பேரழிவு நக்பா அன்று நிகழ்ந்தது. இஸ்ரேல் யூத ஆக்கிரமிப்பு தேசத்தின் முதல் பிரதமரான டேவிட் பென்குரியான் ஜியோனிஸ சபையில், `சர்வதேச நாடுகள் கூட்டமைப்பு ஏற்படுத்திய இஸ்ரேலை உருவாக்கி விட்டோம், அதை நிலை நிறுத்தும் பொறுப்பு நம்முடையது என குறிப்பிட்டு, நம் எதிர்கால திட்டம் என்ன என்பதை பற்றி 14நிமிடம் உரையாற்றினார். அதை வாய்ஸ் ஆப் இஸ்ரேல் நேரிடையாக ஒலிபரப்பியது.
அன்று இரவே இஸ்ரேலை அமெரிக்கா அங்கீகரித்தது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்தவர் ட்ரூமன். அதற்கான காரணம் 1938களில் மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டு பத்தே ஆண்டுகளில் அபரிதமான வளர்ச்சி கண்டது தான். முதலாளித்துவ நாடான அமெரிக்க இதனை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க இஸ்ரேல் என்ற ஒரு நாடு தேவை என கருதி அதற்கு முழு ஆதரவையும் கொடுத்தது.
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ சித்தாந்தத்தை கொண்ட பாத் கட்சியினராகவே இருந்தனர். கம்யூனிஸம் வீழ்த்தப்பட்டால் மட்டுமே உலகில் அமெரிக்க முதலாளித்துவம் வலிமை பெறும் என்பதை உணர்ந்த அமெரிக்க அதிபர் ஈஸன் ஹெவர் , ‘மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் இஸ்ரேல் யூதநாடு இருக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டை உருவாக்கினார். அதைத்தான் அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் இன்று வரை பின்பற்றுகின்றனர்.
கம்யூனிஸத்தை வீழ்த்துவது; மத்திய கிழக்கு நாடுகளை கட்டுப்படுத்துவது என்ற திட்டத்தை இஸ்ரேல் மூலம் அமெரிக்கா செயல்படுத்துகிறது. அதற்காக பொருளாதார, ராணுவ மற்றும் தொழில் நுட்ப உதவிகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா தாராளமாக வழங்கி வருகிறது. அமெரிக்கா எதை செய்தாலும் அதை சரி என்று சொல்வதே ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு.
முஸ்லிம் நாடுகளின் துரோகம்
ஜியோனிச பயங்கரவாதம், அமெரிக்க ஐரோப்பிய முதலாளித்துவ செயல்பாடுகள் இப்படியென்றால் பாலஸ்தீன விஷயத்தில் முஸ்லிம் நாடுகள் ஆட்சியாளர்களின் நயவஞ் சகத்தனம் தான் மன்னிக்க முடியாதவை.
1948 மே14 பாலஸ்தீன பேரழிவு நக்பாவின் போது எகிப்தை ஆண்டு கொண்டிருந்தவர் பாரூக் மன்னர். ஈராக்கை ஆட்சி செய்தது மன்னர் பைஸல். ஜோர்டானை ஆண்டவர் மன்னர் அப்துல்லா. முதல் உலகமகா யுத்ததில் உதுமானிய கிலாபாவுக் கெதிராகவும், பிரிட்டன் பிரான்ஸுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதற்காக இந்த நாடுகள் இவர்களுக்கு `போர் ஆதாய பிச்சை பங்காக` (போர் கனிமா) அளிக்கப்பட்டன.
இதிலும் ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும், இஸ்ரேல் முதல் பிரதமர் டேவிட் பென்குரியானும், துருக்கியின் இஸ்தான்புல் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த நெருங்கிய நண்பர்கள். இத்தகைய முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் பாலஸ்தீன விஷயத்தில் நயவஞ்சகமாக நடந்து கொள்ளாமல் என்ன செய்வார்கள்?
நக்பா பேரழிவுக்குப் பின் 1948 மே 15 அன்று இஸ்ரேல் அரபு யுத்தம் தொடங்கியது. 1949 பிப்ரவரி 24ல் எகிப்து இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தது. பாலஸ்தீனத்தின் காஸா எகிப்து வசமானது. இஸ்ரேலுடன் ஜோர்டான் செய்த ஒப்பந்தத்தால் மேற்கு கரை ஜோர்டான் வசமானது. சிரியாவும், லெபனானும் இதே போல் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்தன. கிழக்கு ஜெரூஸலத்தை இஸ்ரேல் வைத்துக் கொண்டது. பாலஸ்தீனத்தில் மிச்ச மீதமிருந்த முஸ்லிம்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாயினர்.
எகிப்து, ஜோர்டான், சிரியா, உள்ளிட்ட நாடுகளில் அகதிகள் முகாம்களில் இருந்த லட்சக் கணக்கான பாலஸ்தீனியர்களில் சிலர் சிறு சிறு போராளி குழுக்களாக இயங்கினர். 1949 – 1952 காலகட்டங்களில் அவர்களை ஒருங்கிணைத்து `ஃபீரி ஆஃபிஸர்ஸ் இயக்கத்தை` எகிப்தின் அன்வர் சாதாத் நடத்தினார். இப்படி பயிற்சி பெற்றவர்களை நக்ரஸி பாஷா என்பவர் எகிப்தின் பிரதமராக இருந்த போது பாலஸ்தீனத்திற்கு அனுப்பி வைத்தார். அவர் அப்படி அனுப்பி வைத்ததற்கு இரண்டு காரணங்கள்.
முதல் காரணம் பயிற்சி பெற்ற இந்த போராளிகளை எகிப்துலேயே தொடர்ந்து வைத்திருந்தால் மன்னர் பாரூக் ஆட்சிக்கு ஆபத்து. ஏனெனில் இவர்கள் இஹ்வானுல் முஸ்லிமீன் சிந்தனை கொண்டவர்கள்.
இரண்டாவது காரணம் உலக முஸ்லிம்களின் அனுதாபத்தை பெற!
அப்படிச் சென்றவர்களில் அன்வர் சாதாத், கமால் அப்துல் நாஸர், அப்துல் ஹக்கீம் அமீர் போன்றோர் முக்கியமானவர்கள். முன் இருவரும் பிற்காலத்தில் எகிப்தின் அதிபர்களானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனம் சென்ற ஃபிரீ ஆபீஸர்ஸ் இயக்க போராளிகளுக்கு கனரக ஆயுதங்களோ, விமானப்படை பாதுகாப்போ கொடுக்கப்படவில்லை என்பதோடு, குடிக்க நீரும் சாப்பிட உணவும் கூட கிடைக்கவில்லை. இவர்களை அழிக்க செக்கோஸ்லோவேகியா நாடு இஸ்ரேலுக்கு ஆயுத வினியோகம் செய்தது.
அம்போ என விடப்பட்ட ஃபிரீ ஆபீஸர்ஸ் இயக்க போராளிகள் பெரும் அழிவை சந்தித்தனர். இது எகிப்து மன்னர் பாரூகின் திட்டமிட்ட நயவஞ்சகம்.
இஸ்ரேலுடன் எகிப்து ஒப்பந்தம்
இந்த பரூக் மன்னரை கமால் அப்துல் நாஸர் கவிழ்த்துவிட்டு 1954 பிப்ரவரி 25 அன்று எகிப்தின் அதிபரானார். இவர் தான் மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாயை பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து 1956ல் தேச உடமையாக்கினார். உடனே பிரிட்டன் இஸ்ரேலுடன் சேர்ந்து எகிப்தின் மீது படை எடுத்தது. ஆனால், அமெரிக்கா எச்சரித்ததால் பிரிட்டன் பின் வாங்கியது. இது அமெரிக்க திட்டம் தான்.
உலக முஸ்லிம்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பால்ஸ்தீன் ஆதரவை கையிலெடுத்த நாஸர் 1960ல் ஜியோனிஸ அமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு வழி ஏற்படுத்தி, `இஸ்ரேலுடன் சமாதானமாக இருப்போம், ஒருவர் நலனை ஒருவர் பேணுவோம்` என்றார். 1967ல் இஸ்ரேல், பாலஸ்தீன் எப்படி அமைய வேண்டும் என்பதை ஐ நா ஏற்பாட்டில் வரையறுத்தார். அவருக்கு பின் எகிப்து அதிபரான அன்வர் சாதாத் 1979ல் ஜியோனிஸ அமைப்பிடம் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் காவலாளி என்ற அந்தஸ்தில் நிலைக்கவும், உலக முஸ்லிம்களின் ஆதரவைப் பெறவும் இஸ்ரேலை எதிர்ப்பதாக காட்டினார். முதல் உலகப் போரில் பிரிட்டனுக்காக உதுமானிய கலிபாவை எதிர்த்து யுத்தம் செய்த ஷரீப் ஹுசைனின் மகன் இவர்.
உதுமானிய பேரரசில் சவூதி அரேபியா இருந்த போது மக்கா, மதினா உள்ளடக்கிய ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக இருந்தவர். போருக்குப்பின் இந்த மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை பிரிட்டனிடம் கேட்டார். ஆனால், இதே போன்று சவூது குடும்பமும் சவூதி அரேபியாவில் பிரிட்டனுக்கு ஆதரவாக உதுமானிய கலிபாவை எதிர்த்து போரிட்டதால் இந்த பகுதியை சவூது குடும்பத்துக்கு கொடுத்த பிரிட்டன், ஷரீப் ஹுசைனின் இரு புதல்வர்களான அப்துல்லாவுக்கு ஜோர்டானையும், இன்னொருவரான பைஸலுக்கு ஈராக்கையும் கொடுத்தது. இந்த பைஸல் 1917 பால்பர் பிரகடனத்தை அங்கீகரித்து யூதநாடு உருவாக ஒத்துழைப்பதாக ஜியோனிச அமைப்பின் தலைவர் ஸைம்வைஸ்மேனுடன் 1919லேயே ஒப்பந்தம் செய்தவர்.
ஜோர்டான் ராணுவத்தின் ஜெனரலாக மன்னர் அப்துல்லா வைத்திருந்தது ஜான் கலப் என்ற ஆங்கிலேயரை தான். அவருக்கு பிரிட்டன் கொடுத்த கட்டளை எக்காரணம் கொண்டும் இஸ்ரேல் எல்லைப் பக்கமே செல்லக் கூடாது என்பது தான். ஆக, ஜோர்டான் அரச குடும்பம் இஸ்ரேலுக்கு சாதகமாகவே நடந்து கொண்டது.
யாசர் அரபாத்தின் ஃபத்தாஹ்
அரபு நாடு அரசுகளின் இந்த நயவஞ் சகத்தனத்தால் இனி தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மாணிப்பது என எண்ணிய பாலஸ்தீனர்கள் போராளிக் குழுக்களாக உருவெடுத்தனர்.
1952ல் பத்தாஹ் இயக்கத்தை யாசர் அரபாத் தோற்றுவித்தார்.
அதே போன்று பல குழுக்கள் உருவாகின. பல குழுக்களாக பிரிந்து இருந்தால் பயனில்லை என்ற முடிவில் 1964ல் அஹமது அல் சுக்ரி தலைமையில் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஒன்றிணந்தனர். 1967 ஜூன் மாதம் இஸ்ரேல் தொடங்கிய 6நாள் யுத்தத்தில் கிழக்கில் காஸா, ஜோர்டானின் மேற்கு கரை, சிரியாவின் கோலன் குன்று, எகிப்தின் சினாய் மற்றுமின்றி ஜெரூஸலத்தையும் முற்றிலுமாக தன் வசப்படுத்திக் கொண்டது இஸ்ரேல்.
இப்போரின் போதும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேறினர்கள். இப்போரை அடுத்து PLO வை பயங்கரவாத அமைப்பு என இஸ்ரேல் அறிவித்தது. இக்காலக் கட்டத்தில் தான், அதாவது 1969 பிப்ரவரி 3ல் யாசர் அரபாத் PLO தலைவரானார். அவரை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்தும் அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் யூத ஆக்கிரமைப்பை அப்புறப்படுத்தி முழு பாலஸ்தீனத்தையும் மீட்க வேண்டும் என்ற லட்சியத்துடன் போராளிகளாக செயல்பட்ட PLO நாளடைவில் தங்களை அரசியல் குழுவாக அறிமுகப்படுத்தி, தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டனர். பின்னர், ஜியோனிச சக்திகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இஸ்ரேலை அங்கீகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஹமாஸ் உருவாக்கம்
இஸ்ரேலை அங்கீகரித்ததால் 1980களில் அஸ்ஷைகு அஹமது யாசீன், ஹர்கத்துல் முகாவதுல் இஸ்லாமியா என்ற ஹமாஸ் இயக்கத்தை உருவாக்கினார். இஸ்லாமிய சகோதரத்துவ சிந்தனை கொண்டவர்கள் இதில் இணைந்தனர். போராளிக் குழுவாக செயல்பட்ட இவர்களுக்கு, ஈரான் இராணுவ, பொருளாதார உதவியும், பயிற்சியும் வழங்குகிறது. இஸ்ரேலை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஈரானை அமெரிக்கா பயன்படுத்துவது என்பது மறைக்கப்பட்ட ரகசியம். ஈரான் இப்படி உதவி செய்வதன் மூலம் மத்திய கிழக்கில் பாரசீக ஆதிக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. காஸா பகுதியில் ஹமாஸ் தனிப்பெரும் செல்வாக்கு பெற்று தேர்தலிலும் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் ஹமாஸை வீழ்த்துவதற்கு PLO வையே இஸ்ரேல் பயன்படுத்தியது.
இரு தரப்புக்கும் ஆயுத மோதல் ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஹமாஸும் இன்று பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் போல் 1967ல் நாஸர் வரையறுத்த இரு தேச கோட்பாட்டை ஒப்புக் கொள்கிறது. அதனை ஹமாஸின் துணை வெளியுறவு அமைச்சர் காஜியா அஹமதும் பத்திரிக்கையாளர் நேர்காணலின் போது உறுதிப்படுத்தினார். ஆக, 1948எல்லை என்பதை எல்லோரும் மறந்துவிட்டனர்.
நாஸரின் 1967 இரு தேச எல்லை வரையறையை இஸ்ரேல் ஏற்பதில்லை. அமெரிக்கா தங்களுக்கு எல்லை வரையறை செய்யவில்லை என கூறி பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது. மிச்ச மீதி இருக்கின்ற பாலஸ்தீனர்களையும் விரட்டி விட்டு ஒரே தேசம், அது முற்றிலும் யூத தேசம் என இஸ்ரேல் பிரகடனபடுத்தி விடும். அப்போது கூட ஐநா சபை மௌனம் சாதிக்கும். முஸ்லிம் நாடுகளின் சுயநல ஆட்சியாளர்கள் வேடிக்கைப் பார்ப்பார்கள் வழக்கம் போல்! அமெரிக்கா சமாதான பேச்சு வார்த்தை என்று 72 வருடத்தை கடத்தி விட்டது. இந்த சொல்லை வைத்தே அடங்க மறுக்கும் போராளிக் குழுக்களை அடங்கச் செய்கிறது. ஆயுதம் ஏந்தி போராடும் ஹமாஸை நசுக்கச் செய்கிறது.
நக்பா என்கிற பாலஸ்தீன பேரழிவு நடைபெற்ற 70 வது ஆண்டில் கூட பாலஸ்தீன முஸ்லிம்கள் எந்த ஒரு போராளிக்குழுவின் தூண்டுதல் இல்லாமல் தன்னெழுச்சியாக திரண்டெழுந்தார்கள். 2018 மே 14ல் 50ஆயிரம் பேர் அணிவகுத்த புதிய இண்டிஃபதா காஸாவின் இஸ்ரேல் எல்லையில் நடைபெற்றது. மே மாதம் முழுவதும் பலநாட்கள் துப்பாக்கி சூடு, நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு, ஆயிரக் கணக்கானோர் படுகாயம் என காட்சிகள் அரங்கேறின.
2021லும் பாலஸ்தீன முஸ்லிம்களின் சோகம் தொடர்கிறது. ஆனால், வீரம் ஒரு துளியளவும் குறையவில்லை. இஸ்ரேல் இராணுவத்தின் எந்திர துப்பாக்கிகளை கற்களை கொண்டு மாத்திரமே அவர்கள் எதிர்கொள்கிறார்கள். ஈமானில் உறுதியுள்ள அவர்கள், அக்கற்கள் அபாபீல் பறவைகளின் அலகுகளிலிருந்து புறப்பட்ட கற்கள் யானைப் படையை வீழ்த்தியதைப் போல் யூதப் படையையும் ஒரு நாள் வீழ்த்தும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். உலக முஸ்லிம்களே! இன்றைய பாலஸ்தீனத்துக்கு நாமே சாட்சி!
சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்க , ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு அடிமைகளாகி விட்டார்கள்.அமெரிக்கா உத்தரவுக்கு கட்டுப்பட்டு லிபியா, அஜர்பைஜான் போன்ற நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பிய துருக்கி அதிபர் இன்று வெறும் வார்த்தைகளால் கண்டனம் மட்டுமே தெரிவிக்கிறார்.
இஸ்ரேல், யூத ஆக்கிரமிப்பு துடைத்தெறிப்பட்டு பாலஸ்தீன் விடுதலை பெற வேண்டும் என்பதே உலக முஸ்லிம் உம்மத்துக்களின் லட்சியம். இஸ்லாத்தை தாங்கி நிற்கக் கூடிய, முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய சரியான ஒரு அரசு உருவாகி பாலஸ்தீனத்தை விடுவித்து அதை உலக முஸ்லிம்களின் கரங்களில் ஒப்படைக்க கூடிய காலம் வரவேண்டும். அல்லாஹ்வின் பேரருளால் அது வந்தே தீரும். அந்த நாளுக்காக காத்திருப்போம்; அது வரை பாலஸ்தீனர்களின் கவலைகளை நம் இதயத்தில் சுமந்திருப்போம். அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் மனமுருகி பிரார்த்திப்போம்.