இஸ்ரேலிய பிரதம மந்திரி நெதன்யாகு வுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நேற்று நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவரால் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் இஸ்ரேலிய ஜனாதிபதி ரூவேன் லிவ்லின்
தற்போது அந்த வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லெபிட்டுக்கு வழங்கியுள்ளார்.
இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் தேர்தல் இடம்பெற்றது. இரண்டு வருடங்களுக்குள் இடம்பெற்ற நான்காவது தேர்தல் இதுவாகும்.
ஸ்திரமான ஆட்சி ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலில் எந்த ஒரு கட்சிக்கும் போதியளவு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே கூட்டணி கட்சிகளை ஒன்று சேர்த்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் தனிக் கட்சி என்ற வகையில் ஆகக்கூடுதலான ஆசனத்தை பெற்ற பிரதம மந்திரி நெதன்யாஹு பின் வலதுசாரி கட்சிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நேற்று நள்ளிரவு க்குள் அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
நெதன்யாகு வால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அதனை செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே இரண்டாவது நிலையில் இருந்த
எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லெபிட்டிடம்
ஆட்சி அமைக்கும் பொறுப்பு இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலையிலேயே உள்ளார். ஒருவேளை அவராலும் அது முடியாமல் போனால் கடந்த இரண்டு வருடங்களில் ஐந்தாவது தடவையாக மீண்டும் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை இஸ்ரேலில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.
