புத்தளம் நகர பிதா மர்ஹும் கே.ஏ பாய்ஸ் அவர்களின் மரணச் செய்தி குறித்து சமூகத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்திகள்!

Date:

முன்னால் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னால் கால்நடை பிரதி அமைச்சரும், புத்தளம் அரசியல் தலைமைத்துவத்தில் நீண்ட காலம் நகர பிதாவாகவும், ஏனைய அரசியல் பதவிகளையும் வகித்த அல்ஹாஜ் K.A.Baiz அவர்களின் மரணச்செய்தி ஆழ்ந்த கவலையையும் மன வேதனையையும் எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

நகர பிதா அவர்கள் ஆரம்ப காலம் தொட்டு தனது அரசியல் வாழ்வில் சகல பொது விவகாரங்களிலும் புத்தளம் பெரிய பள்ளிவாயிலோடும், சிவில் தலைமைகளுடனும் நெருக்கமான உறவை பேணி வந்துள்ளார்கள்.

ஊர் என்பதையும் தாண்டி பிரதேசத்தின் பாதுகாப்பு, இருப்பு, இனரீதியான பிணக்குகளை தீர்த்தல், அரசியல் அழுத்தங்களை சுமுகமாக்குதல், நிவாரண பணிகள், சமூகப் போராட்ட முயற்சிகள், கல்வி முன்னெடுப்புக்கள் என்று புத்தளம் பெரியபள்ளிவாயிலுடன் இணைந்து, புத்தளம் ஜம்மிய்யதுல் உலமா சபை, மற்றும் சகோதர சமய தலைமைகள், அரசியல்வாதிகளின் அனுசரணைகளுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இவரது கை ஓங்கி இருந்தமை புத்தளம் பிரதேசத்துக்கு இருந்த ஓர் பலமாக கருதப்பட்டது.

மர்ஹூம் K.A. Baiz வர்கள் புத்தளம் பிரதேச அபிவிருத்திக்கு ஆற்றிய இத்தகு பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூறுகின்றோம். அன்னாரின் சேவைகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு சுவனபதியில் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்க பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயரடையும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள்,குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை வழங்கப் போதுமானவன்.

தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் 

(புத்தளம் முகையதீன் ஜும்ஆ (பெரிய) பள்ளி )

கடந்த தேர்தலில், புத்தளத்திலிருந்து, எனது நண்பர் பாயிஸ் பாராளுமன்றம் வருவார் என நினைத்தேன். வரவில்லை. கொஞ்சம் கவலைப்பட்டேன்.

இன்று அவர் மறைந்தார் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்.

என்னய்யா.., உலகம் இவ்வளவுதானோ..!

(நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்)

 

 

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் துணிகரமான அரசியல் போராளிகளில் ஒருவராக மதிக்கப்பட்ட புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் காலமான செய்தி அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக அன்னாரின் மறைவையிட்டு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மறைந்த எமது ஸ்தாபக பெருந் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அசைக்க முடியாத ஆளுமையினால் தமது பாடசாலைக் காலத்திலேயே பெரிதும் கவரப்பட்டிருந்த கே.ஏ. பாயிஸ், புத்தளம் மண்ணின் மைந்தனாக கட்சிக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றார். நாடு முழுவதிலும் கட்சியை வியாபிக்கச் செய்வதில் தேசிய அமைப்பாளராக இருந்து அவர் அரும் பணியாற்றியிருக்கின்றார்.

 

நீண்ட காலமாக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்திருந்த புத்தளம் மாவட்டத்திற்கு தேசியப் பட்டியல் ஊடாக அன்னாரை நியமித்து முஸ்லிம் காங்கிரஸ் கெளரவப்படுத்தியது.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும்,

அப்போதைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தபோதும் இன,மத,மொழி வேறுபாடுகளற்று குறிப்பாக புத்தளம் மாவட்ட மக்களுக்கும், பொதுவாக நாட்டு மக்களுக்கும் பல்வேறு சேவைகளை அவர் செய்துள்ளார்

ஒரு காலப் பிரிவில் அவர் கட்சியோடு இல்லாதிருந்த நிலைமையிலும்கூட, நாம் அவரது ஈடுபாட்டை மறந்துவிடவில்லை. முஸ்லிம் காங்கிரஸோடு மீண்டும் இணைந்துகொண்ட அன்னார், தனது பணியைத் தொடர்ந்தார். உயர்பீடக் கூட்டங்களிலும் பங்குபற்றி அவ்வப்போது ஆக்கபூர்வமான,ஆணித்தரமான கருத்துக்களைத் தெரிவித்துவந்தார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மஃபிரத்தை அருளி, மேலான ஜன்னதுல் பிர்தெளஸ் சுவனவாழ்வை வழங்குவானாக.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், புத்தளம் வாழ் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தனிப்பட்ட முறையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

(முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்)

 

முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டல் பிதா, இந்த காலத்திற்கு பொருத்தமான , தேவையான ஒரு நல்ல சிந்தனையுள்ள அரசியல் தலைவர் .இவரோடு நான் பயணித்த நாட்கள் நிறைய இருக்கின்றது.என்னுடைய வானொலி காலத்தில் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியிருக்கிறார் , நிகழ்ச்சிகளுக்கு பேசியிருக்கிறார், முஸ்லிம் சேவைக்கு வந்து பேசியிருக்கிறார் . இலங்கை அரச தொலைக்காட்சியிலும் ,நேத்ரா அலைவரிசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்கள் புத்தளம் நகரத்திற்கு உள்வாங்கப்படுகின்ற போது அந்த கடலோர காட்சிகள் காலி முகத்திடலை விட விஞ்சியதாக இருக்கின்றது.இவை அனைத்தையும் செய்து கொடுத்தவர் இவர் தான்.அல்லாஹ் அன்னாருடைய சேவைகள் பொருந்திக் கொண்டு மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக ஆமின்.

( அறிவிப்பாளர் M.Z. அஹ்மத் முனவ்வர் அவர்கள்.)

 

எமது பாடசாலையின் ஸ்தாபகர் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மாற்றத்தை ஏற்படுத்தி இந்த மாவட்டம் முழுவதும் வைத்தியர்களையும் , பொறியியலாளர்களையும் , ஏனைய விஞ்ஞான துறை சார்ந்த பட்டாதரிகளையும் கண்டுகொண்டிருக்கின்ற சூழலில் அதற்கு இந்த தலைவருடைய பங்கு பாரியளவில் காணப்பட்டது.இவர் கல்விக்காக ஆற்றிய பணி என்பது ஸதகதுல் ஜாரியா அவருக்கான நிலையான தர்மமாக நிச்சயமாக அமையும்.அவருடைய மறுமை வாழ்க்கை சிறப்படைய பிரார்த்திக் கொள்கிறேன்.

(சிராஜுதீன் 

President science college principal)

 

முன்னாள் கால்நடை வள பிரதி அமைச்சர், புத்தளம் நகரபிதா, ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி ஸ்தபாகர் அல் ஹாஜ் கே எ பாயிஸ் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்தரமான சுவனபதியை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவானாக… ஆமீன்…

(இம்ரான் மகரூப்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்)

 

புத்தளம் நகர முதல்வர் பாயிஸ் அவர்களின் இழப்பு முஸ்லீம் சமூகத்திற்கு பாரிய இழப்பாகும்.

 

புத்தளம் நகர முதல்வரும் முன்னாள் கால்நடை பிரதி அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் K.A. பாயிஸ் அவர்கள் துணிச்சல் மிக்க மிகவும் தைரியமான ஒரு தலைமைத்துவம்.

 

முஸ்லீம் சமூகம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற போதெல்லாம் அந்தந்த பிரச்சினைகளுக்கு தைரியமாக தலை நிமிர்ந்து தோள் கொடுத்த ஒரு தலைவர்.

 

புத்தளம் மாவட்டத்திலே அம் மாவட்ட முஸ்லீம்கள் இன ரீதியான அடக்குமுறைகளுக்கு உட்படுத்த முனைந்த போதெல்லாம் அம்மாவட்டத்தினதும்,அரசினதும் தேசிய தலைமைகளுக்கு எதிராக புத்தளம் நகரையும்,முஸ்லீம்களையும் பாதுகாப்பதிலே மிகவும் அர்ப்பணிப்பாக செயற்பட்ட ஒருவர்.

 

மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் சேர் அவர்களோடு மற்றும் என்னோடு இணைந்து வடக்கிலே இருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்ட போது அம் முஸ்லீம்களுடைய மீள் குடியேற்றம் அவர்களுடைய வீடுகளை கட்டுதல் போன்ற விடயம் இன ரீதியான முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்து மிக தைரியமாக துணிச்சலோடு செயற்பட்ட ஒருவர்.

 

நான் பல தடவைகள் அப் பிரதேசங்களுக்கு போகின்ற போது இரவு பகலென்று பாராது அப் பிரதேசங்களுக்கு எம்மை ஏற்றிச் சென்று அம் மக்களின் துயர் துடைத்த ஒருவர். அவ்வாறான ஒரு நல்ல தலைமைத்துவத்தை நாம் இழந்து இருக்கின்றோம்.

 

பலஸ்தீன் விவகாரத்திலே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இடம்பெறும் போதெல்லாம் அதற்காக பல்வேறுபட்ட கட்டங்களில் குரல் கொடுத்த ஒருவர். அவரின் நல்ல பணிகளை அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டும். அவரின் கப்பரை சுவர்க்கப் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும். அவருடைய பாவங்களை இறைவன் மன்னிக்க வேண்டும் . அவரை இழந்து தவிக்கின்ற அவரது குடும்பத்தவர்கள்,அவரது ஆதரவாளர்கள், ஊர் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன். கொரோனா சூழ்நிலை காரணமாக அவரது ஜனாஸா நல்லடக்கத்திலே கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

 

(முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் 

கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்)

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...