சுகாதார அமைச்சு கொவிட் – 19 PCR மற்றும் ரபிட் அன்டிஜன் (Rapid Antigen) பரிசோதனைகளை மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதுதொடர்பான வழிமுறைகளை விதித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன குறித்த தனியார் மருத்துவமனைகளின் ஆய்வுகூட பொறுப்பதிகாரிகளுக்கு 4 அம்ச வழிமுறைகளை இன்று எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். அதற்கமைய,
01. சிகிச்சைக்காக குறித்துரைக்கப்பட்ட விசேட மருத்துவ நிபுணரினால் அல்லது வைத்திய அதிகாரியினால் அதன் தேவை பரிந்துரைக்கப்பட்டிருப்பின் மாத்திரமே பரிசோதனை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
02. மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் பெறுபேறு கிடைக்கும் வரை குறித்த நிறுவனத்தில் / வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பதற்கு நோயாளியை அறிவுறுத்த வேண்டும்.
03. நோயாளிக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பின் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவுக்கும் குறித்த பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிக்கும் நோயாளிக்கும் அறிவித்தல் மருத்துவமனை அதிகாரிகளின் பொறுப்பாகும்.
04. தொற்றாளரை பொறுப்புவாய்ந்த மருத்துவரின் பரிந்துரைக்கமைய அங்கீகரிக்கப்பட்ட கொவிட் 19 சிகிச்சை நிலையங்களில் அனுமதிப்பதற்கு மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏதேனும் தனியார் மருத்துவமனையில் இவ்விதிமுறைகள் மீறப்படுமாயின் கொவிட் – 19 PCR மற்றும் ரபிட் அன்டிஜன் (Rapid Antigen) பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி இரத்துச்செய்யப்படும் என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.