இறந்தவர்களைத் தகனம் செய்ய இடமின்றி தவிக்கும் தலைநகரம்!

Date:

மு.ஐயம்பெருமாள்

டெல்லியில் கொரோனா தாக்கத்தால் இறந்தவர்களின் உடல்கள் மயானங்களில் 24 மணி நேரமும் அணையா விளக்காக எரிந்து கொண்டிருக்கிறது. உடல்களை எரிப்பதற்காக உறவினர்கள் காத்துக்கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 

நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனாவின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கிறது. முதல் கொரோனா அலையின்போது பெரிய அளவில் பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்புகள் அதிகமாக இல்லை. ஆனால், இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கின்றன. டெல்லியில் கொரோனாவால் தினமும் 300-க்கும் அதிகமானோர் இறந்துகொண்டிருக்கின்றனர். அவர்களை எரிப்பதற்குக்கூட இடமில்லாமல் உறவினர்கள் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து மயானங்களிலும் உடல்களை எரிப்பதற்காகப் புதிதாகத் தகனமேடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

 

போர்க்கால அடிப்படையில் மயானங்களைக் கட்ட வேண்டிய நெருக்கடிக்கு டெல்லி அரசு தள்ளப்பட்டு இருக்கிறது. சாரா கலா கான் சுடுகாட்டில் தற்போது ஒரே நேரத்தில் 20 உடல்களை எரிக்கும் வகையில் தகனமேடைகள் புதிதாகக் கட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால், எரிப்பதற்காகக் கொண்டு வரப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், உடல்களுடன் உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

எனவே புதிதாக மேலும் 50 தற்காலிக தகன மேடைகள் கட்டப்பட்டு வருகின்றன. தகன மேடை பிரச்னைக்கு தீர்வு கண்டாலும், உடல்களை எரிப்பதற்கு போதிய அளவு விறகுகள் இல்லை. டெல்லி நிர்வாகம் கொடுக்கும் விறகுகள் போதுமானதாக இல்லை. கடந்த 10 நாள்களில் இந்த மயானத்துக்குக் கொண்டு வரப்படும் உடல்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது.

இதே போன்று டெல்லி பச்சீம் விகார் மயானத்திலும் உடல்களை எரிக்க போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. இதனால் 24 மணி நேரத்தில் புதிதாக 50 தகனமேடைகள் கட்டிமுடிக்கப்பட்டு, உடல்கள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கின்றன. டெல்லி நிகம் போத் கட் மயானத்தில் முன்பு தினமும் 20 உடல்கள் எரிக்கப்பட்டன. கொரோனா பரவ ஆரம்பித்த பிறகு தினமும் 50-க்கும் மேற்பட்ட உடல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கீதா காலனி சுடுகாட்டில் போதிய அளவு விறகு இல்லாமல் உறவினர்கள் விறகுக்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மயானத்தின் பொறுப்பாளர் அருண் சர்மா கூறுகையில், “இரண்டு மாதத்துக்குத் தேவையான விறகுகளை வைத்திருந்தோம். ஆனால், அவை 10 நாள்களில் தீர்ந்துவிட்டன” என்றார். விறகு குறைந்தவுடன் சுடுகாட்டின் கேட்டை பூட்டிவிடுகின்றனர். உறவினர்கள் தங்களது அன்புக்குரியவரின் உடலுடன் நடுத்தெருவில் வரிசையில் காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான சேவை நிறுவனத்தை நடத்தி வரும் வினிதா இது குறித்து கூறுகையில், “என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு நிலையை நான் பார்த்ததில்லை. பொதுமக்கள் இறந்துபோன தங்களின் உறவினர் உடலை எரிக்க ஒவ்வொரு சுடுகாடாக அலைந்துகொண்டிருக்கின்றனர். அனைத்து மயானங்களிலும் இதுபோன்ற ஒரு நிலைதான் இருந்து வருகிறது. இறந்தவர்கள் உடலை எந்த சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றாலும் விரட்டிவிடும் சூழ்நிலை இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேற்கு டெல்லி அசோக் நகரை சேர்ந்த அமன் அரோரா, தன் தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அனைத்து மருத்துவமனைகளிலும், அவருக்குக் கொரோனா இல்லை என்ற சான்று இருக்கிறதா என்று கேட்டு உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அமன் தந்தை இறந்துவிட்டார். இதில் கொடுமை என்னவென்றால், திங்கள் கிழமை இறந்தவரை எரிக்க வியாழக்கிழமைதான் மயானத்தில் அனுமதி கிடைத்தது.

டெல்லியில் உள்ள தமிழர்களின் நிலையும் மிகவும் மோசமாக இருக்கிறது. இரண்டாவது கொரோனா அலையில் டெல்லி தமிழ்ச்சங்கம் இரண்டு முக்கிய நிர்வாகிகளை கொரோனாவுக்கு பலிகொடுத்துள்ளது.

டெல்லி கரோல் பாக் பகுதியில் வசிக்கும் டெல்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், அகில இந்திய தமிழ்ச்சங்க செயலாளருமான முகுந்தனிடம் இது குறித்து பேசினோம். “டெல்லியில் தமிழர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. ஆக்சிஜன் இல்லாமல் தமிழர்கள் அதிகமானோர் இறந்துவிட்டனர்.

 

இறந்தவர்களை எரிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. டெல்லி தமிழ்ச்சங்கத்தின் இணை செயலாளர்கள் ஆறுமுகம் மற்றும் இளங்கோ ஆகியோர் கொரோனாவால் இறந்துவிட்டனர். அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வசதிகூட கிடைப்பதில்லை. மே 3-ம் தேதி காலை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மேலாளராக இருக்கும் தெய்வசிகாமணியின் மனைவி செல்வராணி கொரோனாவால் இறந்துவிட்டார். அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க மருத்துவமனையில் இடவசதி இல்லாத காரணத்தால் இறந்துவிட்டார்” என்று கவலையுடன் தெரிவித்தார். முகுந்தன் அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

டெல்லி சீமாபுரியில் வசிக்கும் நிதிஷ் குமார் கொரோனாவால் இறந்துபோன தன் தாயின் உடலை இரண்டு நாள்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகும் சுடுகாட்டில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஏற்பாடு செய்த தற்காலிக தகன மேடையில் தன் தாயை எரித்துவிட்டு வந்தார் நிதிஷ் குமார்.

இப்படி எத்தனையோ பேர் தங்களது உறவினரின் உடல்களை எரிப்பதற்காக டெல்லி முழுக்க ஆம்புலன்ஸ்களில் சுற்றிக்கொண்டிருக்கும் அவலநிலை டெல்லியில் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நன்றி விகடன்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...