2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இன்று (20) பாராளுமன்ற குழு அறை 08 இல் ஒன்றுகூடிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
மண்ணெண்ணெய் மானியத்தை பூர்த்தி செய்தல், கச்சா எண்ணெய்க்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி (பிஏஎல்) திருத்தம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதிப் பிரச்சினைகள் குறித்து நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் மூன்றாவது விவாதம் இதுவாகும்.
உலக சந்தையில் எரிபொருள் விலை 2019-2020 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2021 இல் இதுவரை பெருமளவில் அதிகரித்துள்ளதைக் கவனத்தில் கொண்டு தறபோதைய சூழ்நிலைக்கு மத்தியில் மக்கள் நிவாரணத்தைப் பேணுவது குறித்து அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மின்சார சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இதுவரை 2019 ஆம் ஆண்டிற்கான கடன் தொகையையே மீளச் செலுத்தி வருவதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது
கடந்த ஆண்டு நிதி அமைச்சு தலையீடு செய்து எரிபொருள் விலையை உறுதிப்படுத்தியதன் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூ .50 பில்லியன் செலுத்தப்பட்டுள்ள போதிலும், மேலும் 79 பில்லியன் ரூபாய் கடன் தொகை செலுத்தப்பட வேண்டி உள்ளது என்பது தெரியவந்தது. அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தினசரி இழப்பு கணிசமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது