கொரோனா தொற்று நோய் ஓர் இறை சோதனை! 

Date:

முஹம்மத் பகீஹுத்தீன்

 

கொரோனா கோவிட் 19ன் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. உலகளவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நோய் தொற்றாமல் பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல் பொறிமுறையை சுகாதார அதிகார சபைகள் பரிந்துரைத்துள்ளன.

 

இந்நிலையில் கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நடிவடிக்கைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது குடிமக்களின் கண்டிப்பான பொறுப்பாகும்.

 

இஸ்லாமிய சட்டப்பரப்பில் இதற்கான வழிகாட்டல்கள் யாது என்பதையே இந்த ஆக்கம் தெளிவு படுத்த முனைகிறது.

 

இன்று உலக மக்களை கதிகலங்க வைத்துள்ள கொரோனா தொற்று நோய், இறை நியதிகளில் ஒன்றாகும். அல்லாஹ் தனது அறிவுக்கும் நாட்டத்திற்கும் ஏற்ப, அவன் விதித்துள்ள நியதிகளின் அடிப்படையில் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்துள்ளான். அவை யாவும் மனித நலன்களுக்காகவே அமையும். அவற்றுள் சில துன்பம் போன்று காணப்பட்டாலும் மனித சுபீட்சத்திற்காகவே அது அமையும். எனவே அதனை ஒரு சோதனையாக பார்ப்பதே அறிவார்ந்த விடயமாகும். இறை சோதனைகளை மனத்திருப்தியோடு ஏற்று பொறுமையுடன் வாழ்வதே அடியார்களின் பண்பாகும்.

கொரோனா ஒரு கொடிய நோய் போன்றே இறை நியதிகளின் படி அது உள்ளங்களுக்கு ஒரு மருந்தாகும். ஏன் எதற்காக இந்த சோதனை என்று நோக்கும் போது வழி பிறழ்வுக்குட்பட்டவனை இறை பாதைக்கு திருப்பும் கருவியாக இந்த தொற்று நோய் அமையலாம். அப்போது கறைபடிந்த உள்ளங்களுக்கு அது காயகல்பமாகவே அமையும்.

கொரோனா தொற்று நோய் ஒரு சோதனை. அது மனித குலத்திற்கு ஒரு தீங்கு அன்று. அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு போதும் தீங்கு வருவதில்லை. மனிதன் பார்வைக்கு தீங்கு போல் காணப்படும் யாவையும் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டதே.

உண்மையில் அதில் பொதிந்துள்ளவைகள் மறைவான இறையருளாகவே நாம் விசுவாசிக்க வேண்டும். மனித அறிவு அந்த சோதனைக்கு பின்னால் உள்ள ரகசியத்தை அதிகமான சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்வதில்லை. சில சமயம் அதனை புரிந்து கொள்ள நீண்ட காலமெடுக்கலாம். சில போது புரியாமலே மரணித்து விடுகின்றோம். இது தான் யதார்த்தம்.

 

ஒரு முஃமின் என்ற வகையில் அல்லாஹ் எம்மீது விதித்தவையன்றி வேறு எதுவும் எங்களை பீடிக்காது என்ற அசையாத நம்பிக்கை எமக்குள் வேரூண்டி இருக்க வேண்டும்.

 

கொரோனா வேகமாக பரவும் ஒரு தொற்று நோய் என்பதால் அதற்கான பாதுகாப்பு, அதற்குரிய சிகிச்சை, அதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் யாவும் மனிதன் என்ற வகையில் கடைப்பிடிக்க வேண்டிய இறை நியதிகள் என்பதே எமது ஈமானாகும்.

 

இதனை ஒரு விதிவசமாக பார்த்து அதற்குரிய காப்பு நடவடிக்கை எடுக்காமல் விடுவது மார்க்கப்படி ஒரு குற்றமாகவே அமையும். இறை சோதனைகளின் போது பொறுமையுடன் பௌதிக விதிகளுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இஸ்லாம் வழிகாற்றுகின்றது. அதனுடன் சேர்த்து நிவாரணத்திற்காக பிராத்தனைகளில் ஈடுபடுவதும் வாஜிபாகும்.

 

அல்குர்ஆன் இருட்டில் இருந்த மனிதனை வெளிச்சத்திற்கு கொண்டு வ்ந்தது, மறைவான நம்பிக்கையின் போது கூட பகுத்தறிவுக்கு வேலை கொடுக்குமாறே பணிக்கிறது.

 

பொதுவான வழிகாட்டல்கள்

 

* நாம் இலங்கையர் என்ற வகையில் நமது அரசு அறிமுகப்படுத்தும் வழிகாட்டல்களை நாம் பின்பற்றுவது கண்டிப்பான கடமையாகும். தேசத்தின் மீது நேசம் வைத்துள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் இது ஒரு பொறுப்பான கடமையாகும்.

 

• அரசாங்கம் மக்கள் நலன்களுக்காக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளின் போதும் மிகுந்த பொறுமையுடனும் தியாக சிந்தையுடன் அதன் வெற்றிக்காக ஒத்துழைப்பது தார்மீக பொறுப்பாகும்.

 

• சமூக வளைத்தளங்களில் உலா வரும் வதந்திகளையும் ஆதாரமற்ற செய்திகளையும் பரப்புவதை முற்றாக தவிர்ந்து கொள்ளுவதுடன் மக்கள் மத்தியில் அமைதி, நம்பிக்கை ஊட்டும் செய்திகளை வழங்குவதையே ஆர்வமாக கொள்ளுதல் வேண்டும்.

 

• சகல விடயங்களும் இறை நியதிகளின் படியே நடைபெறுகின்றன. தொற்று நோய்கள் பரவும் சமயத்தில் தற்காப்பு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகைகள எடுத்தல், சிகிச்சை செய்தல் யாவும் இறை நியதிகளில் உள்ளதாகும். கொனோர வைரஸ் பீடிக்கப்பட்ட ஒருவர் பொறுமை காத்து பதட்டமின்றி இறைவன் கூலியை எதிர்பார்த்து வாழம் போது அவர் மரணித்தால் கூட தியாகி என்ற உயர்ந்த வெகுமதியையே அல்லாஹ் அவனுக்கு வழங்குவான் என்பதே எமது ஈமானாகும்.

 

கூட்டுத் தொழுகையும் ஜும்மா தொழுகையும்

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது பாதிக்பப்ட்டிருக்காலாம் என்ற சந்தேகம் உள்ள ஒருவர் ஜமாஅத் தொழுகைக்கோ அல்லது ஜும்மா தொழுகைக்கோ பள்ளிவாசலுக்கு செல்லக் கூடாது. அடுத்த வருக்கு ஒரு தீங்கு ஏற்படும் செயலை தெரிந்து கொண்டே செய்வது பாவமான காரியமாகும். வெள்ளைப்பூண்டு, வெங்காயம் சாப்பிட்ட ஒருவர் பள்ளிவாசலுக்கு வருவதையே நபிகாளார் தடுத்துள்ளார்கள். அடுத்த மனிதனுக்கு துர்நாற்றம் தீங்காக அமையும் என்று கருதியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. (புகாரி)

 

தொற்று நோய் பரவியுள்ள ஒரு ஊரில் வசிப்பவர் மரணத்திற்கு பயந்து வெளியேறுவதை இறைதூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட ஊருக்கு போகவும் கூடாது. பாதிக்கப்பட்ட ஊர்லிருந்து வெளியேறவும் கூடாது என்பதே இஸ்லாம் காட்டும் வழிகாட்டலாகும். இது தொற்றும் நோய்கள் பரவாமல் தடுக்கும் வழிமுறையாகவே இஸ்லாம் போதிக்கிறது. தப்பியோடும் நோக்கம் இன்றி விடுமுறை அல்லது வேறு காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறுவது அந்த நாட்டின் சட்டத்துக்கு முரண் இல்லையாயின் அது தவறல்ல.

 

தொற்று நோய் பரவும் என்பதற்காக ஜும்மா மற்றும் ஜமாஅத் தொழுகைகளை தற்காலிகமாக இடைநிறுத்தல் கூடுமா? என பலரும் கேட்கின்ற ஒரு கேள்வியாகும். இஸ்லாமிய சட்டப்பரப்பின் பிரதான இலக்குகளில் ஒன்று உயிரைப் பாதுகாப்பதாகும். எனவே உயிருக்கு ஆபத்தை கொண்டு வரும் கொரோனா கட்டுப்பாடுக்கு கொண்டு வரும் வரை ஐவேளை தொழுகைகளையும் ஜம்மா தொழுகைகளையும் இடை நிறுத்தி வைப்பது ஆகுமானதே. ஹஜ்ஜும் உம்ராவும் இந்த வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதும் ஆகுமானதே.

 

ஒரு ஊரில் கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது அந்த ஊர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்படலாம் என்ற எடுகோளில் மேற் கூறிய தடை சட்டங்கள் அமுலுக்கு வருகின்றன. பள்ளிவாசல்களை மூடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்ற தீர்க்கமான முடிவுகள் இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இதற்கு அவசியமில்லை. ஜும்மா மற்றும் ஜமாஅத் தொழுகைகளை மக்கள் நலன் கருதி இடைநிறுத்த எடுத்த முடிவு தவறாக இருந்தாலும் அது இறை மன்னிப்பின் வட்டத்தில் உள்ளதாகும். பள்ளிவாசல்களை மூடாமல் தொற்று நோய் பரவும் வாய்ப்புக்கு இடமளிக்கும் முடிவுக்கு வந்தால் அதனால் ஏற்படுமும் இழப்பை ஈடு செய்ய முடியாது. பள்ளிவாசல்களை மூடுவதற்கு இந்த பயம் ஒன்றே போதும் என்பதே ஸுன்னா காட்டும் வழிமுறையாகும்.

 

இப்து அப்பாஸ் (ரழி) அவர்கள் மழை காரணமாக ஜும்மா தொழுகையை இடைநிறுத்திய வரலாற்றை இமாம் புகாரி (ரஹ்) தனது கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்கள். சேறும் சகதியுமுள்ள நிலத்தில் ஆடைகள் நனைந்து அழுக்காகலாம் அல்லது நடந்து செல்வது கஷ்டம் என்பதற்காகவே இந்த தடையுத்தரவை பிரப்பித்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பாங்கு சொல்லும் போது வீட்டில் தொழுது கொள்ளுங்கள் என கூறுமாறும் கட்டளையிட்டார்கள். மக்கள் இதனை குறையாகவே பார்த்தனர். இது உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கேட்டு விட்டு என்னை விடச் சிறந்தவரான இறைத் தூதர் (ஸல்) அவர்களே இப்படித்தான் நடந்து கொண்டுள்ளார்கள் என மக்களுக்கு விடைபகர்ந்தார்கள். கொரோனா வைரஸ் நிச்சியமாக மழைக்கு பயப்படுவது போன்ற ஒரு விடயமல்ல என்பது தெளிவானதே.

 

இங்கு ஒரு உண்மையை நாம் புரிந்து கௌ;ள வேண்டும் மார்க்கத்தை பாதுகாப்பதை விட உயிரைப் பாதுகாப்பது முதன்மையான அடிப்படையாகும். ரமழானில் நோயளிக்கு சலுகை வழங்கப்பட்டிருப்பதன் அடிப்படையும் இதற்கு நல்ல உதாரணம். நோன்பு பிடிப்பதை விட உடம்பை கவனிப்பது உயிரைப் பாதுகாப்பதாக அமையும்.

 

சட்டவல்லுனர்கள் இந்த அடிப்படைகளை ஆதராமாக வைத்தே உயிருக்கோ, பொருளுக்கோ, குடும்பத்தினருக்கோ அபாயம் வரும் என்று பயந்தால் கூட்டுத் தொழுகை மற்றும் ஜும்மா தொழுகையை விடுவதற்கு சலுகை வழங்கியுள்ளனர். அதற்கு பதிலாக ளுஹர் தொழுவது கடமையாகும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நம்பகமான மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் நிஜமாக அச்சம் கொள்ளும் அளவிற்கு கொரோனா தொற்றுநோய் பரவியுள்ள எந்த நாட்டிலும், வெள்ளிக்கிழமை ஜம்மா தொழுகை மற்றும் ஐவேளை ஜமாஅத் தொழுகைளள் நடைபெறுவதை, தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை நிறுத்துமாறு முஸ்லீம் அறிஞர்களின் சர்வதே ஒன்றியம் பத்வா வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

அவ்வாறே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளும் ஆகுமான வழிமுறையாகும். உமர் (ரழி) அவர்கள் பிளேக் எனும் தொற்று நோய் பரவியிருந்து ஷாம் தேசத்திற்கு பயணிக்காமல் தவிர்ந்து கொண்டதும் அங்குள்ளவர்கள் வெளியேறாமல் தடுத்ததும் மிகவும் பிரபல்யமான சம்பவமாகும். இத்தகைய தடுப்புக்காப்பு இஸ்லாம் கற்றுத் தரும் தொற்றும் நோய்கள் பரவுவதை தடுக்கும் வழிமுறையாகும்.

கொரானா காரணமாக மரணித்தவரை குளிப்பாட்டுதல் மரணித்தவருக்கான நான்கு கடமைகளில் முதலாவது இறந்த உடலை குளிப்பாட்டுவதாகும். இது ஒரு சமூகக் கடமையாகும். குளிப்பாட்டுபவருக்கு நோய் தொற்றும் என்ற பயம் இருப்பின் முறைப்படி குளிப்பாட்டுவதற்கு பதிலாக பிரேதத்தில் தண்ணீரை உற்றுவதுடன் போதுமாக்கிக் கொள்ளலாம். அது கஷ்டம் என்றிருந்தால் தயம்மும் செய்யலாம். இப்படி செய்வதாலும் நோய் தொற்றும் என்ற அச்சம் இருந்தால் குளிப்பாட்டுவதை தவிர்த்து கபனிட்டு தொழுவிக்க வேண்டியது தான். நிர்ப்பந்தங்களின் போது முடியாமானதை செய்வதே மார்க்கமாகும். அல்லாஹ் அடியார்களிடமிருந்து இலகுவான, எளிமையான, வசதியான வழிமுறைகளை பின்பற்றுவதையே விரும்புகின்றான்.

யாஅல்லா எம்மை கொடிய தொற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பாயாக!

யா அல்லாஹ் எங்கள் சொந்த நாட்டில் எங்களை பாதுகாப்பாக வாழவைப்பாயா!

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...