கொவிட் – 19 இனால் உயிரிழப்பவர்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான எந்த அனுமதியினையும் நான் வழங்கவில்லை” என அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
“எனினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரை இறக்கமத்தில் நல்லடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் பரிந்துரை செய்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டார்.
“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம் ஜனாசாக்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை நேற்று 29.05.2021 அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்”.
இது பற்றி மாவட்ட செயலாளர் கருத்து தெரிவிக்கையில், “கொவிட் – 19 இனால் உயிரிழப்பவர்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான பரிந்துரையினையே சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வழங்கினேன்.
மாறாக அடக்கம் செய்வதற்கான எந்த அனுமதியினையும் வழங்கவில்லை. குறித்த கடிதத்தின் பிரதிகளை கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.
இறக்காமத்தில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்ட செயலாளரின் பரிந்துரைக்கமைய கிண்ணியாவின் மகமாறு பிரதேசத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த 25ஆம் திகதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.