அரசின் இந்த திடீர் நன்னடத்தையை பார்த்து, “உலக மகா நடிப்புடா” என நாட்டு மக்கள் மயங்கி வாயடைத்து நிற்கிறார்கள்- மனோ கணேசன்! 

Date:

மக்கள் ஏற்கனவே வாழ்க்கை செலவு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது யார்? ஆளுகின்ற பொதுஜன பெரமுன (SLPP) ஆளும் கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் எம் பி. அரசின் இந்த திடீர் “நன்னடத்தையை” பார்த்து, “உலக மகா நடிப்புடா” என நாடு முழுக்க மக்கள் மயங்கி வாயடைத்து நிற்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

 

இதுபற்றி மனோ தனது சமூக ஊடகங்களில் கூறியுள்ள கருத்தை தேசிய ஊடகங்களுக்கு மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,

 

பிழை நடந்தால், இப்படி பொறுப்பேற்று ராஜினாமா செய்வது நல்லதே. அது நாகரீக அரசியலே. ஆனால், இந்த அரசின் வரலாறு இப்படி இல்லையே.

 

ஆகவே திடீரென அரசு இவ்வளவு நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது, “நீங்கள் ஒன்றும் அவ்வளவு நல்ல அரசாங்கம் கிடையாதே” என மக்கள் சந்தேகத்துடன் அங்கலாய்கிறார்கள்.

 

மக்கள் நெருக்கடியில் இருக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் (கம்மன்பில) ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது, ஆளும் பொதுஜன பெரமுன (SLPP) என்ற ஆளும் கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம்.

 

கொவிட்19 தொற்றை கட்டுப்படுத்த உரிய வேளையில் தடுப்பூசிகளை வாங்க இந்த அரசு தவறி விட்டது. மிகவும் நட்பு நாடு என்று இவர்களே கூறிக்கொள்ளும் சீன நாடு கூட தங்கள் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை, வங்காளதேசத்துக்கு 10 டொலர் விலையிலும், இலங்கைக்கு 15 டொலர் விலையிலும் தருகிறது. தடுப்பூசியை தேடி மக்கள் அல்லோல் கல்லோல் படுகிறார்கள். இவை அனைத்துக்கும் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய இங்கே ஆளில்லை.

 

நடுக்கடலில் தீப்பிடித்த இரசாயன பொருள் கொண்ட கப்பலை, கொழும்பு துறைமுகத்தை நோக்கி வரச்சொல்லி, கடல் வளத்தையும், மீனவர் வாழ்வாதாரத்தையும் அழித்தவர் யார் தெரியவில்லை. “அவரை கண்டால் கூட்டி வாருங்க” என, பாணந்துறை முதல், புத்தளம், மன்னார் வரை மேற்கு கரை முழுக்க மீனவ மக்கள் பொங்கி நின்று கேள்வி எழுப்புகிறார்கள். “இதற்கு நான்தான் பொறுப்பு” என பொறுப்பேற்று ராஜினாமா செய்ய இங்கே ஆளில்லை.

 

இந்நிலையில் திடீரென அரசு இவ்வளவு நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது, எமக்கு சந்தேகம் வருகிறது. இதற்குள் உள்ள உள்குத்து என்ன என்று கேட்க தோன்றுகிறது. தமிழ் சினிமா சிரிப்பு நடிகர்களின் “நீ ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாதே?” என்ற பிரபல சிரிப்பு சந்தேக வசனம் ஞாபகத்தில் வருகிறது.

 

உண்மையில், அமைச்சரவை தீர்மானத்தின் படியே விலை தீர்மானிக்கப்படுகிறது. அமைச்சரவையில் வாழ்க்கை செலவு உப குழு இருக்கிறது. அதில்தான் விலைவாசி முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரவை அமைச்சராக இருந்த எனக்கு இதுபற்றி நன்கு தெரியும். அமைச்சரவை பத்திரங்களை யார் முன் வைத்தாலும், முடிவு எடுக்கபட்டால் அதுபற்றி முழு அமைச்சரவையும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...