வரலாற்றுச் சிறப்புமிக்க காயல்பட்டினம் நகரின் பெயரை உதயமார்த்தாண்ட பட்டினம் என மாற்றக் கோரும் காயல்பட்டினம் நகர பா.ஜ.க. வின் முயற்சியை எதிர்த்து அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டம் – 15.06.2021. செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு – காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பீ.எச்.எம். முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஐ. அப்துல் காதர் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னீர்செல்வம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் காயல் எஸ்.இ. அமானுல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர்ரஹ்மான், காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் செயலாளர் முத்து கிருஷ்ணன் என்ற கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாளை பஷீர், எம்.எஸ். முஹம்மத் சாலிஹ், (மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு), அப்துல் மஜீத் (தமுமுக), இ.எம். சாமி (நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்), திருத்துவ ராஜ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), அஹமது சாஹிப் (வழக்குரைஞர்), மீரான் (நாம் தமிழர் கட்சி), சாளை சலீம், சாமு ஷிஹாபுத்தீன் (காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு), இளந்தளிர் முத்து (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஷாஜஹான், ஏ.எஸ். ஜமால் முஹம்மத் (இந்திய தேசிய காங்கிரஸ்), ஷாஜஹான் (கோமான் ஜமாஅத்) உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
உதயமார்த்தாண்டம் என்பது காட்டு மகுதூம் பள்ளி முதற்கொண்டு, முந்தைய கொம்புத்துறை, வீரபாண்டியன்பட்டினம், கபாடபுரம் உள்ளிட்ட திருச்செந்தூர் வரையிலான பகுதிகளோடு தொடர்புடைய பெயர். தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தி, நகர மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம் என்பது விளக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் தீர்மானத்தை முன்மொழிய அனைவரும் அதை ஆதரித்து வழிமொழிந்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் எம்.ஏ. முஹம்மத் ஹசன் நன்றி கூறினார்.
திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நுகர்வோர் பாதுகாப்பு பேரவை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு, ஐக்கிய சமாதானப் பேரவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஏற்பாட்டுப் பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட துணைச் செயலாளர் தங்கத்தம்பி காதர் சாஹிப், நகர செயலாளர் ஏ.எல்.எஸ். அபூ ஸாலிஹ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் – காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகம் செய்திருந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:-
நம் இந்திய திருநாட்டின் வரலாற்று அடையாளங்களுள் ஒன்று காயல்பட்டினம். தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டே நகராட்சிகளுள் ஒன்றான காயல்பட்டினம் 12 நூற்றாண்டு வரலாற்றுப் பெருமை கொண்டது.
கி.பி. 1288இல் வெனிஸ் நாட்டின் மார்க்கோபோலோ, கி.பி. 1348இல் மொரோக்கோ நாட்டின் இப்னு பதூதா ஆகியோர் இந்நகருக்கு வருகை தந்தும், வாஸ்கோடகாமா – ரொடைரா நூலிலும், டாக்டர் கால்டுவெல் பாதிரியார் – தி ஹிஸ்டரி ஆஃப் தின்னவேலி நூலிலும், சர். எலியட் – தி ஹிஸ்டரி ஆஃப் இந்தியா நூலிலும், பண்டித ஜவஹர்லால் நேரு – டிஸ்கவரி ஆஃப் இந்தியாவிலும், சுவாமி சுத்தானந்த பாரதி – தமிழுணர்ச்சியிலும், ரா.பி. சேதுப்பிள்ளை – ஊரும் பேரும் நூலிலும், டி.கே. சிதம்பரநாத முதலியார் – இதய ஒலியிலும் இந்நகரின் வரலாற்றுப் பெருமை குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கி.பி. 875இல் முஹம்மது கல்ஜி தலைமையிலும், கி.பி. 1280இல் சுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் தலைமையிலும் எகிப்து நாட்டிலிருந்து இந்நகருக்கு வந்தவர்கள் இப்பகுதியில் பரவி வாழ – அவர்களுக்கு இடங்களை ஒதுக்கி கி.பி. 1553இல் திருமலை நாயக்கர் மன்னரும், பிந்தைய காலத்தில் சுந்தர பாண்டிய தேவர் மன்னரும் பட்டயங்களை வழங்கியுள்ளனர்.
இந்நகர் – சென்னை மாகாண ஆளுநர் G.O. M.S. No. 122 LFஇன் படி, 27.01.1886.இல் இங்கு ஊராட்சி அமைக்கப்பட்டு, பின்னர் பேரூராட்சி ஆகி, தற்போது நகராட்சியாக மிளிர்கிறது.
இந்நகரில் அரசு நில அளவைகள் செய்து, பகுதிகளைப் பிரித்து, பெயர்களை வைத்து அடையாளப்படுத்தி, அதன்படி ஆண்டாண்டு காலமாக அப்பகுதிகள் அழைக்கப்பட்டு வருகின்றன. வருவாய் மற்றும் நகராட்சி, தேர்தல் ஆணைய ஆவணங்களிலும் இது தெளிவாக உள்ளது.
எனவே காயல்பட்டினம் என்ற இந்த நகரின் பெயரோ, கடையக்குடி, கற்புடையார் பள்ளி வட்டம் போன்ற பகுதிகளின் பெயர்களோ காலங்காலமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே இந்நகர மக்களின் உறுதியும், தெளிவும் ஆகும்.
இதற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்கள் – இந்நகரின் வரலாற்றுப் பெருமையைச் சீர்குலைக்க நினைப்பவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் இது போன்ற எந்த ஒரு சிறு முயற்சிக்கும் – இந்நகர் நலனில் அக்கறையுள்ள – சமூக நல்லிணக்கம், பொது அமைதியில் ஆர்வமுள்ள எவரும் ஆதரவளிக்க மாட்டார்கள்.
எனவே இது போன்ற கோரிக்கைகள் வருமேயானால் அவற்றை அரசு உதாசீனப்படுத்துவதோடு, அப்படிப்பட்டவர்களை பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பவர்கள் என்று கருதி – காவல்துறை மூலம் கண்காணிப்பு செய்யவும், ஆவணங்களிலும் இதே பெயர்கள் நிலைத்திருக்க உறுதியுடன் செயல்படுமாறு – வருவாய்த் துறை, பத்திரப் பதிவுத் துறை, தேர்தல் ஆணையம், மீன்வளத் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசுத் துறைகளை நகரின் அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.