நாட்டில் மேலும் 48 கொவிட் மரணங்கள் பதிவானதையடுத்து இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1656 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த 48 மரணங்களும் மே மாதம் 11 ஆம் திகதி முதல், ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சம்பவித்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 23 பெண்களதும் 25 ஆண்களதும் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை, மஸ்கெலியா, முதுங்கொடை, கொழும்பு-13, கொலன்னாவ, களுத்துறை வடக்கு, மத்துகமை, கிரிகெட்டிய, கண்டி, நாவான, இராஜகிரிய, கொழும்பு-10, திஹாரிய, அத்தனகல்ல, வெலிஓயா, ராகமை,யட்டவத்த, ஜல்தர, நுவரெலியா, கல்பாத்த, துன்மோதர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்களே இவ்வாறு பதிவாகியுள்ளன.
அத்துடன் பஸ்யாலை, கல்கமுவ, மொகொடவேவ, கல்னேவ, ஹொருவில், அவிசாவளை, புப்புரஸ்ஸ, தோரயாய, மெல்சிரிபுர, அவ்லேகம, குருநாகல், இந்துல்கொடகந்த, நாரம்மல, பொல்கஹவல, பண்டாரகொஸ்வத்த, பதுளை, ஹங்குரன்கெத்த, பயாகல, பேருவளை மற்றும் கிரிமெட்டியாவ ஆகிய பகுதிகளை சேர்ந்தோரின் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்த அறிக்கையின் பிரகாரம். 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஒருவரும், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் 50 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 09 பேரும், 60 முதல் 69 வயதுக்கு உட்பட்ட 16 பேரும், 70 – 79 வயதுக்கு உட்பட்ட 07 பேரும், 80 முதல் 89 வயதுக்கு உட்பட்ட 12 பேரும், 90 முதல் 99 வயதுக்கு உட்பட்ட 02 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 18 பேர் வீட்டில் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் 29 பேர் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.
இந்த மரணங்கள் கொவிட் தொற்றுடன் தீவிர கொவிட்-19 நியூமோனியா, இதயம் செயலிழந்தமை, கொவிட்-19 நுரையீரல் தொற்று, இதய நோய், நுரையீரல் அழற்சி, உயர் குருதியழுத்தம், சுவாசத்தொகுதி செயலிழத்தமை, கட்டுப்பாடற்ற நீரிழிவு, சுவாசக் கோளாறு, குருதி விசமானமை மற்றும் பல உறுப்புகள் செயலிழந்தமை ஆகியவற்றால் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.