எரிபொருள் விலை உயர்வை கண்டித்து முடக்கப்பட்ட பகுதியில் நான் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக சமூகவலைத்தளங்களில் உலாவிய செய்தி தொடர்பாக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது விளக்கத்தை வழங்குவது எனது கடமை .
பெருந்தொற்றாலும் (covid -19) பயணத்தடையாலும் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் எமது மக்கள் தள்ளப்பட்டிருக்கும் வேளை திடீர் எரிபொருள் விலை உயர்வு அனைவரையும் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது
இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் இதற்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க எண்ணியுள்ளதாகவும் அதில் என்னை பங்குகொள்ளுமாறும் கிண்ணியா மீனவ சங்க தலைவர் பாயிஸ் என்னிடம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி நாம் இருவரும் கலந்தாலோசித்து , பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளதால் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை வெளியில் செய்ய முடியாது. அத்துடன் எதிர்ப்பில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையையும் மட்டுப்படுத்தவேண்டும் என முடிவு செய்து இதை எனது அலுவலக காணிக்குள் 5-6 பேரை மட்டும் கொண்டு ஊடகங்களுக்கு முன் மட்டும் எதிர்ப்பை காட்டும்படியும் வெளியே செல்லவதில்லை எனவும் முடிவெடுத்தோம்.
நாம் திட்டமிட்டபடி 5 எதிர்ப்பு பதாகைகளை சுகாதார வழிமுறைகளுடன் சமூக இடைவெளியை பேணி சிறு எண்ணிக்கையான மீனவர்களுடன் அதை ஏந்தி ஊடகங்களுக்கு முன் காட்டிய பின் அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற சொல்லிய பின் நான் தனியே நின்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட் ட பின் நான் உட்பட அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டோம்.
அதன்பின் இரவு வேளையில் எனது அலுவலகத்துக்கு பின்னால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் என்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.
விசாரித்து பார்த்ததில் பதாகை ஏந்திய ஐவருக்கு மேலதிகமாக அங்கு தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்த மீனவர்களும் தேடப்படுவதாக அறியக்கிடைத்து.
எமக்கெதிராக இந்த வழக்கை பதிவு செய்து எம்மை கைது செய்ய பல முனை அழுத்தம் விடுக்கப்பட்ட வேளை (எங்கிருந்து யார் மூலமாக அழுத்தம் விடுக்கப்பட்டது என்பதும் எனக்கு தெரியும்) சட்டதரணிகளின் ஆலோசனையின் பிரகாரம் நீதிமன்றத்தில் சரணடைந்து பிணையில் வெளியே வந்துள்ளோம்.
சிலர் சமூக வலைத்தளங்களில் எமக்கு சேறு பூசும்விதமாக நாம் தலைமறைவானதாக குறிப்பிட்ட செய்தியில் எந்தவித உண்மையுமில்லை.அத்துடன் இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் அனைத்து விடயங்களையும் நாம் கவனித்து வருகிறோம்
இதற்கு முன் நானும் மீனவ சங்க தலைவர் பாயிசும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் சென்று பல உதவிகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி புரிந்துள்ளோம் அப்போது இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் அங்கிருந்துள்ளனர். இதேபோல இன்னும் பலர் சுகாதார வழிமுறைகள் பின்பற்றி கொடுக்கின்றனர்
அதே வழிமுறையை பின்பற்றி தான் மக்கள் நன்மை கருதி நாமும் செயல் பட்டொம்
நாம் ஒன்றும் சுகாதார வழிமுறைகளை மீறி திருமண நிகழ்வோ கலியாட்டங்களோ நிகழ்த்தவில்லை மக்களின் பிரச்சினைகளுக்காவே குரல் கொடுத்தோம்.
கடந்த காலங்களில் சலுகைகளுக்கும் பணத்துக்கும் சோரம் போகாமல் அரசின் குறைகளை சட்டத்துக்கு உட்பட்டு உரிய நேரத்தில் சுட்டிக்காட்டியபோது பல அசச்சுறுத்தகளை நான் சந்தித்துள்ளேன்.அவ்வாறிருந்தும் இருபதுக்கு வாக்களிக்காத ஒரே ஒரு கிழக்கு மாகாண முஸ்லிம் உறுப்பினராக மக்களுக்கான எனது குரல் உயிர் அசச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஒலித்தது.ஆகவே இவ்வாறான காட்டிக் கொடுத்தல் மூலம் எனது பயணத்தை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது.மக்களுக்கான எமது போராட்டம் தொடரும்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை விரைவில் ஒரு ஊடக சந்திப்பில் கூறுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.