விஷப் பாத்திரமான ‘பெரும்பான்மை’ நல்லதொரு நோய் நிவாரணி

Date:

• நல்ல மனிதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் கெட்டவராகலாம்
• அரசாங்கத்தை இயக்கும் ரிமோட் மக்கள் கைவசம் இருக்க வேண்டும்
• மக்களுக்கு தேவையான அதிகாரங்களை சட்டமாக்க முடியுமாக இருக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் ஏதென்ஸ் நகரின் குடிமக்கள் அனைவரும் அணிதிரண்டு புகழ்பூத்த தத்துவஞானி சாக்ரடீஸ் சம்பந்தமான விவாதத்தின் முடிவில் பெரும்பான்மையினரின் அபிப்பிராயப்படி சாக்ரடீஸை தூக்கிலிட வேண்டும் என்றே முடிவு செய்தனர். அதற்கேற்ப சாக்ரடீஸுக்கு ஒரு கோப்பை விஷம் கொடுத்து கொல்ல வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அன்று சாக்ரடீஸுக்கு விஷக் கோப்பையாக இருந்த பெரும்பான்மை என்பது இன்றைய நவீன உலகின் குடிமக்களுக்கு அதுவொரு சிறந்த காயகல்பமாகும்.

இப்படிச் சொல்வதற்கான காரணம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் அரச மேனியில் படர்ந்துள்ள காயங்களை குணப்படுத்துவதற்கும் மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை பயன்படுத்லாம் என்பதனாலாகும். இது ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான வெகுஜன வாக்கெடுப்பு அல்ல. மாறாக இது குடிமக்களின் நலன்களை பேணுவதற்கான மக்கள் கருத்துக் கணிப்பாகும். மக்கள் சமர்ப்பிக்கும் பிரேரணை மூலமாகவே கருத்துக் கணிப்புக்கான வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்படும்.

பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் பிரதான குறைபாடுகள் இரண்டு உள்ளன.

ஒன்று, சர்வாதிகாரத்தை நோக்கி சாய்வதற்குரிய சாத்தியப்பாடு அதில் உள்ளமை. சர்வாதிகாரி ஹிட்லர் கூட பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையை பயன்படுத்தியே தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டார்.

இரண்டாவது குறைபாடு ஆட்சியாளர்கள் ஊழல் பேர்வழியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளமையாகும். இலட்சியத் தலைவரான நெல்சன் மண்டேலா பதவி விலகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஊழல் எதிர்ப்பு நாடுகளின் வரிசையில் தென்னாப்பிரிக்கா 34 வது இடத்திலிருந்து 70 வது இடத்திற்கு இறங்கியது. மலேசியாவை ஊழல் அற்ற தேசமாக மாற்றுவதற்கு உழைத்த அதன் ஸ்தாபகர் மஹாதீர் முஹம்மத் தனது 93 வயதில் மீண்டும் ஆட்சி பீடம் ஏற வேண்டிய தேவை வந்தது. இதற்குப் பிறகு ஊழலுக்கிரையான ஆட்சியாளர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள் என்ற மன நிம்மதியோது அவருக்கு மரணத்தை தழுவ முடியுமா? உலகெங்கிலும் இத்தகைய உதாரணங்களுக்கு பஞ்சமில்லை. இலங்கை அரசாங்கம் இந்த இரண்டு குறைபாடுகளாலும் பீடிக்கப்பட்டுள்ளது. அதனால் அது நோய்வாய்ப்பட்டுள்ளது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டிய தேவையில்லை.

நிலைமை இப்படி இருந்தும் நாட்டின் அடிப்படை சட்டமூலமான அரசியலமைப்பை திருத்துவதற்கு மக்கள் கருத்துக் கணிப்பை பயன்படுத்த வேண்டும் என்ற எந்தத் தேவையும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு இல்லை. பொது மக்களுக்கும் இது பற்றிய எந்த பிரக்ஞையும் கிடையாது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக்கும் எந்தவொரு அரசியலமைப்பு திருத்திற்திற்கான (ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர) வெகுஜன வாக்கெடுப்பும் நடைபெறவில்லை. பாராளுமன்றத்திற்குரிய காலக்கெடுவை 6 ஆண்டுகளாக நீட்டிக்க ஜே. ஆர், ஜயவர்தன அவர்கள் 4 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கான மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை 1982 டிசம்பர் 22 அன்று அறிமுகப்படுத்தினார். அந்த வாக்கெடுப்பும் கூட மிகுந்த வன்முறையும் ஊழல் நிறைந்ததுமாக அமைந்தது. இந்தவகையில் இலங்கையின் எந்தவொரு அரசியலமைப்பிற்கும் சட்டபூர்வதன்மை உள்ளது என்று அறுதியிட்டுக் கூற முடியாதுள்ளது.

நீண்ட நெடுங்காலமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் பாராளுமன்றத்தில் தமக்குத் தேவையான பெரும்பான்மையை எப்படியாவது உருவாக்கிக் கொள்வதுதான் வரலாறாகும். அத்தகைய பெரும்பான்மை உருவாக்கத்திற்கு பின்னணியில் விசேட சிறப்பு சலுகைகள் அல்லது பண முடிச்சுக்கள் அல்லது அழுத்துங்கள் மற்றும் பலாத்காரங்கள் பிரயோகித்திருப்பதை தெரியாது என்று சொல்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். இத்தகைய உருவாக்கப்பட்ட பொரும்பான்மை கூட நாட்டின் தலைவிதியை பாதிக்கும் தீர்மானங்களை எடுப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமல்லவா?

மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறை அர்த்தமுள்ளதா?

அரசியலமைப்பு மாற்றத்திற்காக சுதந்திரமான மற்றும் நியாயமான மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றால் நிச்சியமாக அதனால் பல நன்மைகள் விளையும்.

முதலாவது பொது மக்களுக்கு நாட்டின் அடிப்படைச் சட்டமூலமான அரசியலமைப்பு குறித்து அறிவும் தெளிவும் புரிதலும் பரிந்துணர்வும் ஏற்படும். தற்போது அவர்களுக்கு அரசியலமைப்பு குறித்த அறிவோ, புரிதலோ, புரிந்துணர்வோ இல்லை.

இரண்டாவது அரசியலமைப்பை பொது மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் எழுதும் வாய்ப்பு ஏற்படும். தற்போதைய அரசியலமைப்பின் மொழிநடையானது பொது மக்களுக்கு கிரேக்க பாஷையை படிப்பது போன்றுள்ளது என்றால் அது மிகையல்ல.

மூன்றாவது, 1972க்கு முன்னர் இருந்த சோல்பரி அரசியலமைப்பானது மக்கள் பிரதிநிதிகள் ஊழல்களுக்கு அடிமையாகும் அனைத்து வாயில்களையும் மூடி வைத்திருந்தது. அந்த நிலைமையை அப்படியே பேணிக் காப்பதற்கும் அல்லது அதனைவிட சிறப்பாக ஊழலற்ற சூழலை உருவாக்குவதற்கும் வாய்ப்புக் கிடைக்கும். 1972 மற்றும் 1978 ஆகிய இரண்டு அரசியலமைப்புகளும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊழலுக்கான கதவை அகலத் திறந்து வைத்துள்ளன.

நான்காவது, மனித உரிமைகள், பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் சிவில்;, அரசியல் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு பொது மக்களுக்கு மத்தியில் ஏற்பட நல்ல வாய்ப்ப கிடைக்கும். தற்போதைய நிலையில் அவர்களுக்கு உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய போதிய தெளிவு இல்லை.

ஐந்தாவது, குடிமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு கிடைப்பதுடன் மக்கள் அரச விவகாரங்களில் கலந்து பங்கேற்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். தற்போதுள்ள நிலையில் மக்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதுவும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதுடன் அவர்களின் அரசியல் பங்கேற்பு நிறைவு பெறுகிறது.

ஆறாவது, அரசியலமைப்பு அல்லது அது தொடர்பான பிரச்சினைகள் எழும்போது விமர்சன ரீதியாக சிந்திப்பதற்கும், தேவையான மாற்றங்களைத் தைரியமாக செய்வதற்கும் பொது மக்கள் தூண்டப்படுகிறார்கள். இன்று இதுபோன்ற பிரச்சினைகள் எழும்போது அவர்கள் அமைதி காப்பதும் அல்லது வெறுமனே விமர்சிப்பதும் அல்லது எப்போதாவது ஒரு சமயத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதும் மட்டுமே நடைபெறுகிறது.

ஏழாவது, பொது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக குறைவடையும். ஆனால் இன்று ஆட்சியாளர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையில் எஜமான்-அடிமை உறவே நிலவுகிறது அல்லது எதிர்ப்பு மனப்பான்மை காணப்படுகிறது.

எட்டாவது, மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஆக்கப்பூர்வமாகவும் அர்த்தமுள்ளதாகவும் பயன்படுத்துவதற்கான திறனும் இயலுமையும் பொது மக்கள் மத்தியில் வளரும். ஆனால் இன்று பொது மக்கள் மத்தியில் வெகுஜன கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பற்றி நல்ல மனப்பதிவு இல்லை.

முன்மாதிரி நாடுகள் உள்ளனவா?

மக்கள் சமர்ப்பிக்கும் மனுக்களையும் கோரிக்கைகளையும் அடிப்படையாக வைத்து அரசியலமைப்பு திருத்தங்கள் உட்பட பல அரச கொள்கை மாற்றங்களை எடுப்பதற்காக 1891ஆம் ஆண்டு முதல் மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை மேற்கொண்டு வரும் ஒரு முதிர்ந்த அணுபவமுள்ள ஜனநாயக நாடொன்றுள்ளது. அதிகமான வெகுஜன வாக்கெடுப்பை நடாத்திய நாடும் அதுவே. அனைத்துலக மகா யுத்தங்களின் போதும் போராட்ட வலைக்குள் சிக்காது அமைதி வழியில் நின்று நிம்மதியாக வாழ அந்த நாட்டுக்கு முடியுமாக இருந்தது. அனைத்து நாடுகளினதும் நம்பிக்கைக்கு பாத்திரமான மக்கள் மனதை வென்றுள்ள மிகவும் வளமான ஒரு நாடு அது. அதனை ஊழல் அற்ற ஒரு நாடு என்றே கூறலாம். அந்த நாடுதான் சுவிட்சர்லாந்து.

சுவிட்சர்லாந்தில் மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கு ஒருலட்சம் வாக்காளர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுப்பத்திரம் மாத்திரம் போதுமானதே. அந்த மனுவை சபையில் சமர்ப்பிப்பதற்கு இரண்டு விதிகள் தான் உள்ளன. ஒரே நேரத்தில் ஒரு மனு மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் மனித உரிமைகளை மீறும் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட முடியாது.

சுவிஸின் அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமாயின் மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் போது பெரும்பான்மை அங்கீகாரம் இருக்க வேண்டும். அத்துடன் சுவிஸின் அரச நிர்வாக மண்டலங்களின் பெரும்பான்மை அங்கீகாரமும் அவசியமாகும். இந்த முறைமையில் வாக்காளர்களால் சமர்ப்பிக்கப்படும் மனுக்கு மாற்றீடான வேறொரு மனுவொன்றை சமர்ப்பிப்பதற்கும் அரசியல் அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் போதுமான கையொப்பங்கள் அடிங்கிய மக்கள் மனுவை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பிலிருந்து தடுக்கும் அதிகாரம் அரசியல் அதிகாரிகளுக்கு இல்லை.

உதாரணமாக, 2018 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தில் உள்ள ‘சுவிஸ் புரோ வேலோ சைக்கிள் ஓட்டும்; லொபி’ எனும் நிறுவனம் நாடளாவிய அளவில் சைக்கிள் பாதைகளை உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை வேண்டி 150,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இந்த மனுவுக்கு மாற்றீடாக வேறொரு பிரேரணையை அரச அதிகாரிகள் முன்வைத்தனர். அத்தகைய மாற்று யோசனை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு மனுதாரர்களும் ஒப்புக்கொண்டனர். அதன்படி மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பும் நடைபெற்றது. அதில் அரச அதிகாரிகளின் மாற்று யோசனைக்கு எதிராக 73.6மூ வாக்குகள் கிடைக்கப் பெற்றன. இதற்குப் புறம்பாக சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களின் (கேன்டன்) அங்கீகாரமும் கிடைத்தது. அந்தவகையில் மத்திய அரசுக்கு சைக்கிள் பாதைகளை உருவாக்குவதற்கான கூடுதல் பொறுப்பை வழங்கும் வகையில் சுவிஸ் அரசியலமைப்பு திருத்தப்பட்டது.

உண்மையில் இத்தகைய வெகுஜன வாக்கெடுப்புகளை நடத்துவதனால் அரசாங்கத்திற்கு பாரிய செலவுகளை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் வருவதுண்டு. ஆனாலும் சுவிஸ் குடிமக்கள் இத்தகைய செலவுகள் நாட்டில் சாந்தி, சமாதானம், சுபீட்சம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கான விலைமதிப்பற்ற முதலீடுகள் என்றே நம்புகின்றனர்.

உடன்படிக்கைகளை ரத்து செய்ய முடியுமா?

2020 செப்டம்பர் 27 அன்று சுவிட்சர்லாந்தில் பல கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. ஆதிலொன்றாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கைக்கு ஏற்ப சுதந்திரமாக குடியேறுபவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் பிரேரணையும் காணப்பட்டது. அவ்வாண்டில் நடைபெற்ற வெகுஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் இந்த பிரேரணையை எதிர்த்தனர். இத்தகைய மாற்று யோசனைகளின்போது வெகுஜன வாக்கெடுப்புக்கு தேவைப்படுவது நூறு நாட்களுக்குள் ஐம்பதாயிரம் கையொப்பங்கள் உள்ளடங்கிய மனுவொன்றை சமர்ப்பிப்பதாகும்.

2016 ஆம் ஆண்டில் ‘பிரெக்ஸிட்’ எனும் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுதல் தொடர்பான மாற்று யோசனைக்கு இங்கிலாந்து அரசு மக்கள் கருத்துக் கணிப்பீடு வாக்கெடுப்பை நடத்தியது. பெரும்பான்மையானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவித்து வாக்களித்திருந்தனர். இதுவும் கூட 2015 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய வெகுஜன வாக்கெடுப்பு சட்டத்தின்படியே நடந்தது.

ஆனால் இலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் குடிமக்களுக்கு எதுவும் தெரியாத நிலையில் வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களில் கைசாத்திடுகின்றனர். இத்தகைய கொள்கை சார்ந்த விவகாரங்களில் மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தும் பாரம்பரியம் இலங்கைக்கு இருந்திருந்தால் 1987ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனா அவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இழிந்த நிலையில் கையெழுத்திட வேண்டியிருந்திருக்காது. கருத்துக் கணிப்பு பாரமபரியம் இருந்திருந்தால் அத்தகைய ஒப்பந்தம் காரணமாக நாடே பற்றி எரிந்ததைக் கூட தடுத்திருக்க முடியும்.

மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளின் போது ஒவ்வொரு தனிமனிதனும் நாட்டை ஆளும் நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்கும் உரிமையை அனுபவிக்கிறார்கள். அந்த உரிமையை வழங்கும் பல நாடுகள் உள்ளன. அந்நாடுகள் அவ்வுரிமையை விரிந்த அளவில் அரசியலமைப்பு சட்டத்தினூடாகவே உறுதிப்படுத்தயும் வைத்துள்ளன. பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும் இத்தகைய நடைமுறை பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, நியூசிலாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் இந்த முறைமை அமுலில் உள்ளது.

ஊழலைத் தடுத்து நிறுத்த முடியுமா?

ஊழலை ஒழிப்பது என்பது மேல் மட்டத்திலிருந்து தொடங்க வேண்டிய ஒரு திட்டம் என்பதை சாதாரண பொது மக்கள் கூட ஏற்றுக் கொள்வர். நாடு சுதந்திரம் பெற்றது முதல் 1977 வரை நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பு, ஆட்சியாளர்களுக்கு ஊழலின் கதவுகளை இறுக்கமாக மூடியே வைத்திருந்தது. அந்த அரசியல் யாப்பின் பிரகாரம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வரவு செலவுகளை சொல்லப்பட்ட வரம்புகளை பேணியே செலவழிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தேர்தல் முடிந்தவுடன் வரவு செலவு அறிக்கையை தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

அந்த யாப்பில் பாராளுமன்றம் செல்லும் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் வர்த்தகம் செய்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டிருந்தது. அக்காலத்தில் மதுபானம், மணல், மண், மறு ஏற்றுமதி போன்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் ஏன் மண்ணெண்ணெய்க்குக் கூட அனுமதிப்பத்திரம் வைத்திருப்பது கண்டிப்பாக தடை விதிக்கப்பட்டடிருந்தது. விதிவிலக்காக பஸ் அல்லது ரயிலில் போக்குவரத்து பயணங்களுக்கு இலவச அனமதிபத்திரம் மட்டுமே வழங்கப்பட்டது. அதனால் தீர்வை கட்டணம் இல்லாத வாகன உரிமங்களை விற்று லாபம் ஈட்டும் வாய்ப்புக்கூட கிடைப்பதில்லை. அற்ப தொகைக்குரிய ஊழல் வழக்காக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்புறிமையைப் பறிக்கப்படும். அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் குடியுரிமையை பறிக்கும் அதிகாரமும் நீதித்துறைக்கு இருந்தது. அந்தக்க காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு வாழுவது தங்களது தூய்மையையும் நன்நடத்தையும் பேணிப் பாதுகாப்பதாகவே அமைந்தது.

இருப்பினும் இலங்கை அரசாங்கத்தில் ஊழல் என்பது 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளின் ஆசீர்வாதங்களைப் பெற்று மேலிருந்து கீழ்வரை ஊடுருவிப் பரவியுள்ளது. எனினும் சிலர் ஹொங்கொங் பாணியிலான லஞ்ச ஆணையம் அல்லது ஊழல் ஆணையம் வழியாக இந்த ஊழலை ஒழிக்க முடியும் என பரிந்துரைத்துள்ளனர். ஆனால் ஆட்சியாளர்களே ஊழல் பேர்வழிகளாக இருக்கும் நாட்டில் இத்தகைய சக்திவாய்ந்த ஊழல் ஆணைக்குழுவை நிறுவுவதற்கான சட்டவரைபுகளை இயற்றுவதற்கு யார் இருப்பார்கள்?

பாராளுமன்றம் செல்லும் மக்கள் பிரதிநிதிகள் அங்கு சென்ற பிறகு நம்பிக்கை துரோகம் செய்வதற்கு தூண்டப்படுவதற்கான முக்கிய காரணம், அடுத்த தேர்தல் வரை அவர்களை மீளழைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு வாக்காளர்களுக்கு எத்தகைய அதிகாரமும் இல்லை என்பதாகும். எனவே அவர்கள் பாராளுமன்றம் சென்ற நாளிலிருந்து அச்சமின்றி ஊழலுக்கு ஆளாகிறார்கள். இலங்கை போன்ற நாடுகளில், ஊழல் மற்றும் மோசடிகள் மூலமாக சம்பாதித்த காசு பணங்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் அதன் ஒரு பகுதி மீண்டும் அதிகாரத்தைப் பெறுவதற்கும் செலவிடப்படுகிறது. இத்தகைய உழல், மோசடி குற்றங்களை ஒழித்துக் கட்டுவதற்காக மக்கள் கோரிக்கையை பயன்படத்தி வெகுஜன வாக்கெடுப்பை நடைமுறைக்கு கொண்டு வர முடியாதா?

சிறந்த தீர்வு யாது?

பாராளுமன்ற பிரதிநிதிகள் ஊழலில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்கு அருமையான ஒரு தீர்வாக அவர்களை மீள்அழைப்பதற்கான மனு முறைமையை குறிப்பிடலாம். மக்கள் தேர்ந்து பாராளுமன்றம் அனுப்பிய தங்கள் பிரதிநிதிகளை இரண்டு தேர்தல்களுக்கிடையில் மீள்ளழைப்பதற்கு அரசியலமைப்பு ரீதியாகவே அதிகாரம் உள்ளது. இந்த ஒழுங்கின் நடைமுறை வடிவம் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் தேசிய அளவில் காணப்படுகிறது. மேலும் சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பிராந்திய மட்டத்தில் அந்த நடைமுறை அமுலில் உள்ளது.

அரசியலமைப்பற்ற ஐக்கிய ராச்சியத்தில் 2015 முதல் பாராளுமன்ற சட்டத்தின் படி மக்கள் பிரதிநிதிகளை மீள் அழைப்பதற்கான அதிகாரம் நடைமுறையில் உள்ளது. அதன்படி ஊழல், மோசடி குற்றங்களை செய்த பாராளுமான்ற உறுப்பினர்களை திருப்பியழைப்பதற்கான மனுவை, பொது மக்கள் வாக்காளர்கள் தொகுதியின் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். மக்களால் முன்வைக்கப்படும் மனுவின் உள்ளடக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருப்பதுடன் குறித்த பிராந்தியத்தின் வாக்காளர்களில் 10மூ க்கும் குறையாத கையொப்பங்களுடன் எழுத்து வடிவில் அந்த மனு சமர்ப்பிக்கப்படுமாயின் இடைத்தேர்தலை நடத்துவதற்கான அடுத்த கட்ட நடிவடிக்கைகளை எடுப்பதே அதிகாரிகளின் பொறுப்பாகும். இந்த சட்ட ஒழுங்கின் படி 2019 மே 1ம் திகதி அன்று திருப்பியழைக்கப்பட்ட முதலாவது இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பியோனா ஒனசன்யா ஆவார்.

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மக்கள் பிரதிநிதிகளை திருப்பியழைக்கும் அதிகாரம் அரசியலமைப்பு ரீதியாகவே அமல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி, ஒரு ஆளுநரை திருப்பியழைப்பதற்கு கடைசியாக நடைபெற்ற தேர்தலில் 12மூ க்கும் குறையாத வாக்காளர்களின் கையெப்பங்களுடன் அடங்கிய மனுவை 160 நாட்களுக்குள் மாநில செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தவகையில் ஒரு விசேட தேர்தல் மூலம் ஆளுநரை திருப்பியழைப்பதற்கு பெரும்பான்மை வாக்குப் பலம் இருந்தால் அவருக்குப் பதிலாக புதிய ஆளுநரை நியமிப்பதற்கும் ஒரே வாக்குச்சீட்டில் வாக்களிப்பு நடத்தப்படும்.

2003 அக்டோபர் 7ம் திகதி அன்று நடந்த சிறப்புத் தேர்தலில் கலிபோர்னியா கவர்னர் கிரே டேவிஸ் திருப்பி அழைக்கப்பட்டார். அப்போது அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் 11 மாதங்கள் மட்டுமே கழிந்திருந்தன. அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மக்கள் வரிப்பணங்களை அதிகமாக செலவழிப்பதன் மூலம் கலிபோர்னியா பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அவர் கடுமையான தவறுகளை செய்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும் உள்ளுர் அசர நிறுவனங்களுக்கு கிடைக்கக் கூடிய நிதிகளை குறைப்பதன் மூலம் பொதுப் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது என்றும் மின்சாரத்திற்கான எல்லைமீறிய செலவினம் குறித்து மக்களுக்கு பதிலளிக்க தவறியமையும் முக்கிய பிரச்சினைகளை பாரிய நெருக்கடி நிலைகளுக்கு வளரும் வரை அது குறித்து எந்த தலையீடும் செய்யத் தவறியமையும் முறைப்பாடுகளாக குறிப்பிடப்பட்டிருந்தன.

இனி என்ன செய்ய வேண்டும்?

இலங்கையில் உள்ள தற்போதைய ஆளும் கட்சி புதிய அரசியலமைப்பை உருவாக்க நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளது. அவர்கள் எத்தகைய அரசியலமைப்பை எழுதி சமர்ப்பித்தாலும் வழக்கம் போல் அது பாராளுமன்றத்தில் ‘பெரும்பான்மையால்’ நிறைவேற்றப்படும். இந்த நடைமுறை சர்வாதிகாரத்திற்கான உந்துதலையும் மக்கள் பிரதிநிதிகளை ஊழலுக்கு அடிமையாகுவதை விட்டும் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்க முடியுமா?

இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தின் முன்னணி உறுப்பினர் ஒருவரான பி.ஆர். அம்பேத்கர் அவர்கள்: ‘ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்கள் அல்ல என்றால், அது மோசமானது என்ற பதிவே நிலைபெறும். அவ்வாறே ஒரு அரசியலமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால், அது நல்லது என்ற மனப்பதிவே நிலைக்கும்’ என்றும் கூறியுள்ளார். இதில் உண்மையுள்ளது.

ஆனால் இங்கு அதைவிட முக்கிய விடயமென்றால், நல்லவர்களை தேர்ந்தெடுத்து சட்ட மன்றம் அனுப்பினாலும் அவர்கள் மிக மோசமானவர்களாக மாறும் நிலையே உள்ளது. எனவே இங்கு மிகுந்த கவனம் கொடுக்க வேண்டிய விடயம் யாதெனில் எத்தகைய பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களை குறைப்பதற்கும் ஒரு வேளை தவறிழைத்தால் அவர்களை உடனடியாக நீக்கும் அதிகாரமும் மக்கள் கைவசம் இருக்கும் ஒரு யாப்பின் தேவையாகும். எனவே மக்கள் பிரதிநிதிகள் உழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும்போது அவர்களை திருப்பியழைப்பதற்காக மனுக்களை சமர்ப்பிப்பதன் மூலம் வெகுஜன வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரத்தை சட்டமூலமாக்குவது இதற்கு சிறந்த தீர்வு ஆகாதா?

அடுத்த முக்கியமான விடயம் என்னவென்றால், பாராளுமன்றத்தில் ‘பெரும்பான்மை’ என்பதை வைத்துக் கொண்டு மக்களுக்கு துயரங்களையும் கஷ்டங்களையும் தரும்; சட்டங்களை திணிப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளமையாகும். எனவே நாட்டின் அடிப்படை சட்டமான அரசியலமைப்பின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ திருத்துவதற்கான அதிகாரத்தை மக்கள் வசம் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே அரசியலமைப்பு உள்ளிட்ட சட்டங்களைத் திருத்துவதற்காக மக்கள் மனுக்கள் மூலம் வெகுஜன வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரத்தை சட்டமாக்குவது சிறந்த தீர்வாக அமையுமல்லவா?

இத்தகைய சட்டமூலமொன்றின் அவசியத்தை 224 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதர் சிந்தித்தார். அவர் வேறு யாருமல்ல, அமெரிக்க அரசியலமைப்பை உருவாக்கிய சிரேஷ்ட மனிதர்களில் ஒருவரான தோமஸ் ஜெபர்சன் ஆவார். அன்று அவர் பின்வருமாறு கூறினார்: ‘மக்கள் வாக்குகளை பெற்று அரச அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளுக்கு வரும் பிரதிநிதிகள் மீது மக்களுக்கு போதுமான அதிகாரங்கள் இல்லையென்றால்; அது மக்களுக்கே வேதனையாகவும் துயரங்கள் நிiறைந்ததாகவும் மாறும். மேலும் பிரதிநிதிகளிடத்திலும் அவர்களின் குடும்பங்களிலும் செல்வமும் அதிகார துஷ்பிரயோகமும் தாண்டவமாட வழி பிறக்கும்’ தோமஸின் இந்தக் கூற்று இலங்கையை பொறுத்தமட்டில் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. இல்லையா?

எனவே குடிமக்கள் ஒரு புதிய அரசியலமைப்பு பற்றி கனவு காண வேண்டுமாயின், மக்களின் கவனக்குவிப்பில் மிக முக்கியமானதாக எது இருக்க வேண்டும்? தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களின் நடத்தை மற்றும் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் ரிமோட்டை மக்கள் எவ்வாறு தம்கைவசம் வைத்துக் கொள்வது என்பதல்லவா?

பிரேமவர்தன முஹாந்திரம்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...