காலநிலை மாற்றம் என்பது மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பாரதூரமான ஒரு பிரச்சினை-ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Date:

மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு நாடும் வகுக்க வேண்டும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 48 ஆவது கூட்டத்தொடரின் விவசாய சூழலியல் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையில், உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் விவசாயச் சூழலியல் நிகழ்வில் இன்று உங்கள் மத்தியில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

காலநிலை மாற்றம் என்பது மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பாரதூரமான ஒரு பிரச்சினையாகும். அதன் பாதிப்பைக் குறைக்க, அனைத்து நாடுகளினதும் உடனடியான கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது.

மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு நாடும் வகுக்க வேண்டும். விவசாயச் சூழலியலைக் கைக்கொள்வதன் மூலம், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் ஒரு முக்கிய பகுதியாகும்.

நாம் வாழும் உலகின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, மனித சமூகத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்ற தயங்கக்கூடாது. இத்தகைய கொள்கைகள், சூழலியல் பாதுகாப்பை ஆதரிப்பதுடன், உயிர்ப் பல்வகைமை அழிவை எதிர்த்துப் போராட உதவ வேண்டும். மேலும், மக்கள் தங்கள் பொருளாதார அபிலாஷைகளை பல்வேறு பேண்தகு வழிகளில் அடையக் கூடியதாகவும் அவை இருக்க வேண்டும்.

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எங்களது இந்த முடிவு, பரந்துபட்ட சூழலியல் பிரச்சினைகள் மற்றும் குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார கரிசனைகளை கவனத்திற்கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப்பொருட்களின் பயன்பாடு பொது மக்களிடையே தொற்றா நோய்கள் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக இவற்றை அதிகமாகப் பயன்படுத்தியதன் விளைவாக, இலங்கையின் மையப்பகுதிகளில் நீடித்த நோய்கள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாரியளவில் சந்தைகளை ஆக்கிரமித்துள்ள விவசாய இரசாயனப்பொருட்கள், மற்றும் விவசாயிகளிடையே போதியளவு கல்வியறிவின்மை காரணமாக, இலங்கையில் பயன்படுத்தப்படும் நைதரசன் உரங்களில் சுமார் 80 வீதமானவை விரயமாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சும் உரங்கள் நிலத்தை மாசுபடுத்தி, நிலத்தடி நீரைச் சென்றடைகின்றன. இது மண்ணின் தரம் குறைவதற்கும் நீர் மாசுபடுவதற்கும் காரணமாக அமைவதுடன், பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கச்செய்கிறது.

இதன் காரணமாக செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கான எனது அரசாங்கத்தின் தீர்மானமானது, ஆரோக்கியமான மற்றும் சூழலியல் ரீதியாகச் சிறந்த சேதன விவசாய முறைக்கு நீண்டகாலத் தேவைப்பாடாக இருந்துவரும் தேசிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

இந்த மாற்றத்தின் போது, குறுகியகாலப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். உள்நாட்டு உற்பத்தி மற்றும் சேதன மாற்றீடுகளை வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள், அதேபோன்று அத்தடையின் மூலம் எழும் பாதகமான பொதுமக்கள் உணர்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.

எவ்வாறாயினும், தலைவர்கள் என்ற வகையில், நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பது எமது பொறுப்பாகும். முடிவுகளை எடுக்க நாம் தயங்கினால், இது போன்ற அத்தியாவசிய முன்னெடுப்புகள் எப்போதும் கலந்துரையாடல் மட்டத்தில் மட்டுமே சுருங்கியிருக்கும்.

எமது விவசாயச் சூழலியல் மாற்றம் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் எமது விவசாயிகள் மற்றும் விவசாய அடிப்படையிலான தொழிற் துறைகளுக்கு உதவத் தயாராக உள்ளது. தற்காலிகமாக விளைச்சல் குறைவடையும் பட்சத்தில், விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குதல் மற்றும் அரசாங்கத்தினால் உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வனவு செய்தல் ஆகியவை இந்த உதவிப் பொறிமுறைகளில் அடங்கும்.

சேதன விவசாயத்தில், எமது உள்நாட்டுத் திறனை வலுப்படுத்த, பல்தரப்பு நிறுவனங்கள், தனிப்பட்ட அரசாங்கங்கள், காலநிலை நிதியங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அமைப்புகள், வர்த்தகத் துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புகளை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.​

உயிரியல் உரத்தின் உற்பத்தியை அதிகரித்தல், சேதன மண் மேம்படுத்தல் தொழில்நுட்பங்கள் மற்றும் முகாமைத்துவ நுட்பங்களைக் கையாள்வதை ஊக்குவித்தல், சிறந்த விவசாய நடைமுறைகள் குறித்த அறிவுப் பகிர்வு மற்றும் சேதன விவசாயத்துறை குறித்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துதல் ஆகியவை, இந்த ஒத்துழைப்பைக் கட்டமைக்கக்கூடிய சில வழிகளாகும்.

செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கான இலங்கையின் தீர்மானம், நீண்ட காலத்தில் உணவுப் பாதுகாப்பு விடயத்தில் எமது அபிலாஷைகளுக்கு உதவும் அதே நேரத்தில், ஒரு பசுமையான பொருளாதாரத்திற்கும் ஆரோக்கியமான சமூகத்திற்கும் வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கையின் இந்த முயற்சியானது, ஏனைய அரசாங்கங்கள் தங்கள் நாடுகளினதும், அவர்களின் குடிமக்களினதும், எமது இந்தப் புவியினதும் ஆரோக்கியத்திற்காகவும் எமது எதிர்காலச் சந்ததியினரின் முன்னேற்றத்திற்காகவும் இதுபோன்ற தைரியமான நடவடிக்கைகளை எடுக்க உந்து சக்தியாக அமையும் என்று நான் நம்புகிறேன். நன்றி.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...