இம்முறை சிறுபோகச் செய்கையில் 1,500,000 மெட்ரிக் டொன் மொத்த நெல் அறுவடை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறுவடையின் குறிப்பிடத்தக்களவு நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்வரும் வகையில் 2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- நாடு நெல் ஒரு கிலோ 50/= ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோ 52/- ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் ஒருகிலோ 55/= ரூபாவுக்கும் நிர்ணய விலையின் கீழ் விவசாயிகளிடம் கொள்வனவு செய்தல்
- நிர்ணய விலைக்கு மேலதிகமாக தரமான நெல்லை, விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்வனவு செய்யும் போதும் போக்குவரத்திற்காகவும் ஒரு கிலோவுக்கு 1.50 ரூபாவை விவசாயிகளுக்கு செலுத்துதல்
- பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள விவசாயிகளின் தரமான நெல்லை, கமக்கார அமைப்புக்கள் மூலம் கொள்வனவு செய்யும் போது நிர்ணய விலைக்கு மேலதிகமாக பதனிடல் மற்றும் போக்குவரத்திற்காக ஒரு கிலோவுக்கு 1.50 ரூபாவை விவசாயிகளுக்கு செலுத்துதல்
- ஈர நெல் உலர்த்தும் வசதிகளைக் கொண்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கமக்கார அமைப்புக்கள் மூலம் நெல் கொள்வனவு செய்யும் போது ஈரப்பதன் 14% தொடக்கம் 22% வரை ஒரு கிலோவுக்கு 8/= ரூபாவைக் கழித்து விவசாயிகளுக்கு செலுத்துவதற்கும், அவ்வாறான நெற்தொகையை உலர்த்தி நியமமாகத் தயாரித்துக் கொள்வதற்காக ஒரு கிலோவுக்கு 4/- ரூபாவும், போக்குவரத்திற்காக 2/- ரூபாவும் குறித்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் கமக்கார அமைப்புக்களுக்கும் செலுத்துதல்
- 2021 சிறுபோக நெல் கொள்வனவுக்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு திறைசேரியின் தலையீட்டில் நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும்ஃஅரசாங்க அதிபர்களுக்கும் அதிகாரம் வழங்கல்