கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் 15 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து தெரிவிக்கையில், இஸ்லாமிய இயக்கங்களை கொண்டு கடந்த காலங்களில் அரங்கேறிய அடிப்படைவாத செயற்பாடுகள் இன்னும் முழுமையாக முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை, எந்த ஒரு தரப்பினராலும் இனங்கண்டுகொள்ள முடியாத பல்வேறுபட்ட நிகழ்வுகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் வருவதாகவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், காதி நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் அதன் மூலம் வழங்கப்படும் தீர்ப்புகள் போன்றவை அடிப்படைவாதத்தை நோக்கி வீடுகளுக்குள்ளேயே கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஆசிரியர் மன்சூரின் மாணவனான தற்போதைய நீதி அமைச்சர் அலி சப்ரியினால் முன்னெடுக்கப்படும் பல நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்நாட்டுக்கு பாதுகாப்பு அமைச்சின் மிக முக்கிய பதவிக்கு சிங்கப்பூரின் பிரஜையான ரொஹான் குணரத்தன நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெட்கம் அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த ஊடகவியலாளர் அமர்வு நாடளாவிய ரீதியில் உள்ள பாரம்பரியம் முஸ்லிம்கள் பலரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ஏற்பாடு செய்ததாகவும் கூறிய அவர் தற்போது யாராலும் கண்டறிய முடியாத வகையில் இஸ்லாமிய இயக்கங்களின் பெயரால் அடிப்படைவாதத்தை வெளிப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த அரசாங்கத்தின் கீழ் சில அரசியல் தலைமைகளின் துணையுடன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிரவாத மற்றும் அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய நாம் இவற்றை முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதிய தலைமை ஒன்று அவசியம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். அதற்கமைவாக 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு ஏற்ற வகையிலான சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார் என்று, என்னைப் போன்ற பலரும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள், ஆனால் இங்கு புதிய தலைமைத்துவத்தின் கீழ் இத்தகைய சில செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பினும் கூட வேறு சில வழிகளில் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் (ஜிஹாத்) கொள்கையானது பல்வேறு துறைகளை மையப்படுத்தியதாக இருப்பதால் அது உலகளாவிய ஜிஹாத் கொள்கையாக மாற்றமடைய கூடிய போக்குகளும் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அண்மையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்து இருப்பதாக செய்திகள் வெளியானது, இது குறித்த ஆலோசனையானது கடந்த ஆட்சிக்காலத்தில் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது அதுமாத்திரமின்றி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பலரும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் திருமண வயதெல்லை உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் மாறுபட வேண்டும் என்று நாமும் குறிப்பிட்டோம். முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் குறிப்பிட்டுள்ள வயதில் பெண்கள் திருமணம் செய்வதென்பது பொதுச் சட்டத்தைப் பொறுத்தவரை குழந்தை திருமணம் ஆகும். அது சிறுவர் துஷ்பிரயோகம் ஆகவே கருதப்படும். எனவே நாட்டில் இவ்வாறான சட்டங்கள் பேசப்படுவதை விடவும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் உள்ள விடயங்களை பொது சட்டத்துக்கு அமைவாக திருத்தி அமைக்கப்பட வேண்டும். எனினும் அதனை திருத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்திற்கு உலமா சபை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம், காதி நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அதன்மூலம் வழங்கப்படும் தீர்ப்புகள் போன்றவை அடிப்படைவாதத்தை நோக்கி அழுத்தங்களை வீடுகளுக்குள்ளேயே ஏற்படுத்துகின்றன.
மேலும் சில மாதங்களுக்கு முன்னர் நிகாப் மற்றும் புர்காவை தடை செய்வதற்கான யோசனை அமைச்சர் சரத் வீரசேகர வினால் முன்வைக்கப்பட்டது. அந்த யோசனை தற்போது என்ன நடந்தது? முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் பேசுபொருளான பின்னர் அவ்விடயம் மறக்கடிக்கப்பட்டு விட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சென்ற அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், குறிப்பாக நீதி அமைச்சரான அலி சப்ரியின் ஆசிரியர் மன்சூர், அவ்வாறு இருப்பின் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பில் எவ்வாறு திருப்தி காண்பது என்றும் குறிப்பிட்டார்.