சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்தில் பலப்படுத்துங்கள் | உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

Date:

• முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்விக்கு, அனைத்துப் பிள்ளைகளும் கட்டாயமாக உட்படுத்தப்பட வேண்டும்…
• சிறுவர் அபிவிருத்தி தொடர்பில் சர்வதேச முறைமைகளை ஆராய்ந்துப் பாருங்கள்…
உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு…
சிறுவர்களின் பாதுகாப்பை, கிராமிய மட்டத்தில் பலப்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
சிறுவர்களை வேலைக்கமர்த்துவது பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப, அவர்களில் அதிக சதவீதமானவர்கள் தோட்டப் பகுதி பிள்ளைகள் என்றும் இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்குத் தேவையான அதிகாரம், கிராம அதிகாரி மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களின் விபரங்கள், கிராம அதிகாரிகளிடம் உள்ளன. வீடொன்றில் பிள்ளை ஒருவர் இல்லாமல் போவது பற்றி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அது பற்றி உடனடியாகச் செயற்பட்டு, சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக்கு “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதனை யதார்த்தமாக்குவதற்கு, தனியான இராஜாங்க அமைச்சு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் மற்றும் மகளிர் மீதான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு, இராஜாங்க அமைச்சு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களைப் பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், வேறு நாடுகளில் சிறுவர் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சிகளைப் படித்து, நகர மற்றும் கிராமிய மட்டத்தில் அந்த முறைமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.
முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்விகள், அனைத்துப் பிள்ளைகளுக்கும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், சிறுவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பாதிருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த பிள்ளைகளை அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் ஆன்மீகப் பண்புகளின் ஊடாக, பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொடர்பினை பலப்படுத்த முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருட்களுக்கு அடிமைப்பட்டுள்ள பிள்ளைகளை அவற்றிலிருந்து மீட்க வேண்டுமென்பதுடன், அதனுடன் இணைந்ததாக அவர்கள் அதற்காகத் தூண்டப்படக் கூடிய காரணிகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
சேவை நிலையங்கள் ரீதியாக, பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து அறிவூட்டுதல், தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள குடும்பங்களின் பிள்ளைகள் குறித்து விசேட கவனம் செலுத்துதல், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படக் கூடும் என சந்தேகப்படக்கூடிய பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் குறித்து முற்கூட்டியே அறிந்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
“சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்தின் பிரகாரம், தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள், ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீக் காயங்களுக்குள்ளாகி மரணமடைந்த சிறுமிக்காக வீடொன்றை நிர்மாணித்துக் கொடுக்கவும் குடும்பத்தின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தவும், இரண்டு சகோதரிகளுக்கும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதனுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைப் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயலாற்றுகை குறித்து, ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, இராஜாங்க அமைச்சின் செயலாளர் கே.எம்.எஸ்.டி.ஜயசேகர, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்தா விதானபத்திரன ஆகியோரும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...