காலம் சென்ற பொலன்னறுவை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ அப்துல் மஜீத் அவர்களுடைய பன்முகப்பட்ட சமூகப் பணிகள் குறித்து முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம் அமீன் எழுதிய ஆக்கத்தை Newsnow வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
ஏழு தசாப்தத்துக்கு மேற்பட்ட இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் சுமார் 35 ஆயிரம் முஸ்லிம்கள் வாழும் பொலன்னறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ. அப்துல் மஜீத் ஆவார்.
81 வருடங்கள் வாழ்ந்து கடந்த ஜுன் மாதம் 18ஆம் திகதி இறைவனடி எய்திய அல்-ஹாஜ் அப்துல் மஜீத் பொலன்னறுவைப் பிரதேசத்தின் பிரபல வர்த்தகரான கண்டியார் முதலாளி என அழைக்கப்பட்ட செய்யத் அஹ்மத் ஹயாத்தும்மா தம்பதியினரது மூத்த மகனாக திவுலான விளாங்காடு கிராமத்தில் பிறந்தார். தனது ஊரில் ஆரம்பக்கல்வியைப் பெற்ற இவர், பின்பு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கல்வி பயின்றார். கலாநிதி டீ.பி.ஜாயா அதிபராக இருக்கும் போது கல்வியைப் பெற்ற இவர், மும்மொழியிலும் பாண்டித்துவம் பெற்றார். பொலன்னறுவை கதுருவெல நகரில் இயங்கிய தன் தந்தையின் வர்த்தக முயற்சிகளை பொறுப்பேற்று நடாத்திய இவர், சமகாலத்தில் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் வழங்கினார். மாவட்டத்தின் சிங்கள அரசியல் தலைவர்களான முன்னாள் சபை முதல்வரும் நீர்ப்பாசன அமைச்சருமான சி.பி. சில்வா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் எஸ்.ஐ.பி நெல்சன் ஆகியோர்களுடன் நெருங்கிச் செயற்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருங்கிச் செயற்பட்ட இவர், 1960 இல் வடக்கு பத்து கிராம சபை உறுப்பினராகத் தேர்தலில் தெரிவானார். அதன் பின் 1965இல் இக் கிராம சபையின் தலைவராகத் தெரிவானார்.
அக்கால கட்டத்தில் பிரதேசத்தின் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதைய உள்ளூராட்சி அமைச்சராக இருந்த தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான மு.திருச்செல்வத்தின் ஆதரவுடன் தம்பாளையில் உள்ளூராட்சிமன்றத் துக்காக அங்கு சம்பூரணமான ஒரு கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. கிராம சபை அலுவலகம், நூலகம், வைத்தியசாலை என்பன உள்ளடக்கப்பட்டு அப் பல்தேவைக் கட்டடம் மர்ஹும் மஜீதின் ஆலோசனையில் நிர்மாணிக்கப்பட்டது.
உள்ளூராட்சி அரசியலில் பெற்ற அனுபவத்தினை மையமாக வைத்து, இவர் 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் இவரது பெயர் மாவட்டத்தின் முதலாவது சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர் எனப் பதிவாகியது. இந்தச் சாதனையை இதுவரை எவராலும் நிலைநாட்ட முடியவில்லை.
இப்பதவி மூலம் மாவட்டத்தில் பரந்து, விரிந்து வாழும் முஸ்லிம், தமிழ் மக்களது அபிவிருத்திக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இக்காலத்தில் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த விஜமு லொக்கு பண்டாரவின் உதவியைப் பெற்று, மாவட்டத்தில் பெருந்தொகையான முஸ்லிம்களுக்கு ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். கல்வியில் பின்தங்கிய நிலையிலிருந்த பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி எழுச்சி இந்த காலகட்டத்திலே ஆரம்பமானது. அதற்கான வித்தினை பொலன்னறுவை மாவட்ட கல்விச் சமூகம் இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கின்றது.
இன்று பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து கணிசமான முஸ்லிம் டாக்டர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் என உருவாகுவதற்கு இந்தக் கல்வி எழுச்சி உதவியுள்ளது.
மர்ஹும் மஜீத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலத்தில் இன, மத, பேதமின்றி சேவையாற்றியதோடு, விசேடமாக சிறுபான்மை சமூகப் பிரதிநிதி என்ற வகையில் மாவட்டத்தின் 30 முஸ்லிம் கிராமங்களிலும் பரந்து, விரிந்து வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அரசின் அபிவிருத்தி முயற்சிகள் கிடைக்க வழி செய்தார்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான பங்குரான, பள்ளியகொடல்ல போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் மர்ஹும் மஜீத் முக்கிய பங்காற்றினார். 1992.10.15 ஆம் திகதி பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி கிராமங்களில் வாழ்ந்த நூற்றுக்கணக்கானோர்
கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்மாவட்டத்தில் வாழ்ந்த காணியற்ற நூற்றுக்கணக்கானோருக்கு இவரது முயற்சியால் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. ஓனகம, திவுலான, தம்பாளை, குடாபொகுண, அழிஞ்சிப் பொத்தான போன்ற கிராமங்களில் வாழ்ந்த பலருக்கு மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் காணிகள் கிடைத்தன.
பொலன்னறுவை மாவட்டத்தின் பௌத்தர்களின் புனித பிரதேசமாக இருக்கும் சோமாவதி பிரதேசம் வீதிகளற்றுக் காணப்பட்டன. இவர் கிராம சபை தலைவராக இருக்கும் போது அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க நீர்ப்பாசன காணி அமைச்சர் சி.பி. சில்வா ஆகியோரது கவனத்துக்குக் கொண்டு வந்து, சோமாவதி பிரதேசத்துக்கு வீதியை நிர்மாணித்துக் கொடுத்ததனை இன்றும் பௌத்த மக்கள் நன்றியுடன் நினைவு கூர்வதாக பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் பணிப்பாளர் ஐ.எல்.எம். தௌபீக் தெரிவிக்கிறார்.
இஸ்லாமிய சமய நடவடிக்கைகளுடன் தீவிர ஈடுபாட்டுடன் செயற்பட்ட இவர், தப்லீக் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டி, அதன் பணிகளுக்காக நாடு முழுவதிலும் மட்டுமன்றி, உலக நாடுகளுக்கும் சென்று தஃவாப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கதிருவெல நகரில் இயங்கும் மஜீதியா அரபுக்கல்லூரியை 1986இல் ஆரம்பித்து நாட்டின் நாலா புறங்களிலும் இருந்து மாணவர்களை உள்வாங்கி, ஆத்மீக கல்வியை வழங்கினார். இந்தக் கல்லூரி மூலம் பல பிரபல உலமாக்கள் உருவாகியிருக்கிறார்கள். பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்காக தனது சொந்த நிதியைச் செலவு செய்த இவர், பிரதேச பௌத்த பிக்குகளது அபிமானத்தை வென்ற ஒரு தலைவராகத் திகழ்ந்தார்.
மஜீதிய்யா அரபுக் கல்லூரியை ஆரம்பிக்க முன் பொலன்னறுவை மாவட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய உலமாக்களே இருந்தனர். அதற்கு முன் பள்ளிவாசல்களில் ஜும்ஆப் பிரசங்கங்களை நடாத்துவதற்கு தரமான உலமாக்களைப் பெறுவதில் பல சிக்கலை எதிர் நோக்கினர். இன்று ஒவ்வொரு ஊரிலும் பல உலமாக்கள் உருவாகி இருக்கின்றனர்.
இதேநேரம், முஸ்லிம் கொலனியில் பிரதேச முக்கியஸ்தர்கள் இணைந்து உருவாக்கிய பெண்களுக்கான அரபுக் கல்லூரியினதும் தலைவராகப் பணிபுரிந்தார்.
மர்ஹும் மஜீத் பொலன்னறுவை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தில் இளம் தலைவர்கள் உருவாகுவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்தார்.பொலன்னறுவை மாவட்டத்தில் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களிலும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளை உருவாக்குவதற்காக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் சபாநாயகர் எம்.ஏ.பாக்கீர் மாக்காரை பொலன்னறுவை மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்களுக்கு மூன்று நாட்கள் அழைத்துச் சென்றார். இதன் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தில் பலமான இளைஞர் தலைவர்கள் உருவானார்கள். பொதுப் பணிகளை மேற்கொள்ளும் பலமான இளைஞர் அமைப்பு ஒன்றும் உருவானது.
பெரும் தனவந்தக் குடும்பத்தில் பிறந்து எளிமையாக வாழ்ந்த மர்ஹும் அப்துல் மஜீத், ஆறு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் ஆற்றிய சமூக, கலாசார பணிகளை மாவட்டத்தில் இவரது சகோதரர் எஸ்.ஏ அப்துல் சமத் முன்னெடுத்து வருகிறார். அரசியல் பணிகளை இவரது மருமகன் எஸ்.எச்.எம். அன்சார் மேற்கொண்டு வருகிறார். இவர் தொடர்ந்து மூன்று முறை மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெற்று வட மத்திய மாகாண சபை உறுப்பினராக மர்ஹும் மஜீத் முன்னெடுத்த சேவைகளை முன்னெடுத்து வருகிறார்.
இன, மத, பேதமற்ற வகையில் சேவை புரிந்து மர்ஹும் மஜீதுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கம் கிடைப்பதற்கு பிரார்த்திப்போமாக!
Allah is great. Marhoom Abdul Majeed is one of the great leaders in our society. I was working with him for a long time. I saw his many good attitudes in those day. He is more than an own brother for me. He has done more than listed in this report. He has shown us a good leadership. Really it is unbearable to tolerate his lost for me. May Allah grand him Jannathul firdows. He is my prayer every day.
I’m Zakariya Faleel – Mawanella