முன்னாள் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அல் ஹாஜ் யூ.எல்.எம் பாருக் காலமானார்

Date:

கேகாலை மாவட்டத்தின் முதலாவது சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான யூனூஸ் லெப்பே முஹம்மது பாரூக் காலமானார்.

யூனூஸ் லெப்பே முஹம்மது பாரூக் பற்றிய சிறு தொகுப்பு 

கேகாலை மாவட்டத்தின் முதலாவது சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான யூனூஸ் லெப்பே முஹம்மது பாரூக் காலமானார்.

ருவன்வல்லை பாராளுமன்ற உறுப்பினராக, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக, ஆர். பிரேமதாஸ அரசில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக, இலங்கை மத்திய போக்குவரத்துச் சபைத் தலைவராக பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சிங்கள- தமிழ்- முஸ்லிம் இன ஐக்கியத்தை கட்டி எழுப்பப் பாடுபட்ட முன்மாதிரி அரசியல்வாதியாக அவர் கடந்த காலங்களில் திகழ்ந்தார்.

ருவன்வல்லை பாராளுமன்ற உறுப்பினராக 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பதவியேற்ற யூ.எல்.எம்.பாரூக், என்றுமே சாதாரண மக்கள் மத்தியில் வாழும் ஒரு சாமான்ய மனிதராவார்.

கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்று பதிவை இலங்கை அரசியல் வரலாற்றில் பதித்தவர் அவர். மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச 1956ஆம் ஆண்டு இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட ருவன்வெல்லையில் போட்டியிட்ட போது பாரூக் 15 வயது இளைஞராவார். அன்று பிரேமதாசவின் பிரதான அலுவலகம் பாரூக்கின் தந்தைக்குரிய ஒரு கட்டடத்திலே இயங்கியுள்ளது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி போய் வருவதன் மூலம் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு, பாடசாலை மாணவர் காலத்திலிருந்தே அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். முன்னாள் தொழில் அமைச்சரும் ருவன்வல்லை எம்.பி.யுமான பி.சீ.இம்புலானவுடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்தி, அவரது வழிகாட்டலுடன் ஐ.தே.க மூலம் நேரடியாக அரசியலில் பிரவேசித்தார்.

1964ஆம் ஆண்டு ருவன்வல்லை கிராம சபைக்கு கன்னத்தோட்டை வட்டார ஐ.தே.க. அபேட்சகராகப் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அடுத்து நடைபெற்ற கிராம சபை தேர்தலிலும் பாரூக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ருவன்வல்லை தொகுதியின் ஐ.தே.க. மத்திய அமைப்பின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் வெற்றி பெற்றுத் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

1980ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட கேகாலை மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டு, கேகாலை மாவட்ட அபிவிருத்தி சபையின் உறுப்பினராகப் பணிபுரிந்திருக்கிறார்.

1988ஆம் ஆண்டு ருவன்வெல்லை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தொழில் அமைச்சர் பி.சீ. இம்புலான ஊவா மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றதனால் ஏற்பட்ட ருவன்வல்லை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு இரகசிய வாக்கெடுப்பு கட்சித் தலைமையகத்தில் நடத்தப்பட்டது. இத்தெரிவில் பாரூக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றார்.
இதன்படி ஐ.தே.க. செயற்குழு பாரூக்கை ருவன்வெல்லை எம்.பி.யாக நியமிப்பதற்கு ஏகமனதாக முடிவு செய்தது. 1988.06.20 ஆம் திகதி பாரூக் தனது 47 ஆவது பிறந்த தினத்தன்று ருவன்வெல்லை எம்.பி.யாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 1989 பொதுத் தேர்தல் வரை ருவன்வல்லை எம்.பி.யாகப் பதவி வகித்த இவர், 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் கேகாலை மாவட்ட அபேட்சராகப் போட்டியிட்டு, மீண்டும் கேகாலை மாவட்ட எம்.பி.யானார். 17,000 பெரும்பான்மை வாக்குகளால் ருவன்வல்லை தொகுதியில் இத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

1990ஆம் ஆண்டு போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற பாரூக், போக்குவரத்துத் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார். டிப்போக்களுக்கும் புகையிரத நிலையங்களுக்கும் திடீர் விஜயங்களை மேற்கொண்டு, போக்குவரத்து சேவையில் காணப்படும் ஊழல், மோசடி, கவனயீனம், வீண்விரயம் போன்றவற்றைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

டிப்போக்கள் பலவற்றின் ஊழியர்களை ஒன்று சேர்த்து பழுதடைந்துள்ள பஸ் வண்டிகளை சிரமதானம் மூலம் திருத்தி, சேவையிலீடுபடுத்தும் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தி டிப்போக்களில் மாதக்கணக்கில் தேங்கி நின்ற பஸ்கள் சேவையில் ஈடுபட வழி செய்தார்.

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பஸ் சேவைகளைப் புனரமைக்கும் பொறுப்பு பாரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், மன்னார் தவிர்ந்த வடக்கு கிழக்கின் சகல இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களும் இவரது தலைமையிலே மக்கள் மயப்படுத்தப்பட்டன. மட்டக்களப்பு டிப்போ மக்கள் மயப்படுத்தப்படும் நிகழ்ச்சிக்குச் சென்ற போது இவர் போகும் பாதையில் கண்ணிவெடி வைக்கப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பினார். கேகாலை மாவட்ட முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தை ஏற்படுத்தி சப்ரகமுவ மாகாண சபை மூலம் கேகாலை மாவட்டத்திலுள்ள அநேக முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கிய கட்டடப் பிரச்சினைக்கு ஒரே வருடத்தில் தீர்வு பெற்றுக் கொடுத்தார். கன்னத்தோட்டை சுலைமானியா பாடசாலையை மத்திய கல்லூரியாகத் தரமுயர்த்தினார்.

மக்களின் இன்ப துன்பங்களில் என்றும் பங்கு கொள்ளும் சிறப்பான குணம் பாரூக்கிடம் காணப்படுகின்றது. 2000ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமுக்கு இடமளித்து, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீங்கிக் கொண்டார். மேலும் பல வருடங்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய இவர், அமைப்பாளர் பதவியை விட்டுக் கொடுத்தார். அதன்பின் அவரது மகன் நிஹால் பாரூக், சப்ரகமுவ மாகாண சபைக்கு 2000ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மாகாண சபை கலைக்கப்படும் வரை இவர் மாகாணசபைத் தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாரூக், தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற போதும் தனது பெயரில் ஒரு மன்றத்தை உருவாக்கி, மாவட்டத்தின் வசதி வாய்ப்புக் குறைந்த மக்களது மேம்பாட்டுக்காக உதவி வந்தார். யூ.எல்.எம்.பாரூக் மன்றம் மூலம் வருடாவருடம் பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவுவது சிறப்பம்சமாக இருந்தது.

இவரது சேவையைப் பாராட்டி மாவட்ட மக்கள் அஸ்கிரிய பீடத்தில் சங்க நாயக்கர்களுக்குள் ஒருவரான வேந்தல் விகாராதிபதி ஆரியாலே ஆரியவங்ச தேரர் தலைமையில் பல கட்சித் தலைவர்களது பிரசன்னத்துடன் பொதுப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அகவை 80 இல் கால் பதித்த அவரை அபிமானிகள் பலரும் இவரை வாழ்த்தியுள்ளார்கள்.இவரது சேவைகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...