முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் ஆஷுரா மற்றும் தாஸுஆ நோன்புகள் தொடர்பான ACJU வின் விளக்கம்

Date:

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமாகும். இது அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்ட புனித நான்கு மாதங்களில் ஒன்றாகும்.

இதுபற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய (பதிவு) ஏட்டில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். (9:36)

முஹர்ரம் மாதம் என்பது அல்லாஹ்வின் மாதம் என்பதுடன் அதில் நோன்பு நோற்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அபூ ஹுரைரா றழியல்லாஹு  அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமழான் மாதத்தின் பின்னர் (நோற்கப்படும் நோன்புகளில்) மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம் மாதத்தில் (நோற்கப்படும்) நோன்பாகும் எனவும் பர்ழான தொழுகைக்குப் பின்னர் மிகச் சிறந்த தொழுகை இரவுத் தொழுகை எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  (நூல்: ஸஹீஹு முஸ்லிம் – 1163)

முஹர்ரம் மாதத்தின் 10 ஆவது நாளுக்கு ஆஷுரா என்று சொல்லப்படும். இந்த நாளிலேதான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை (அநியாயம், அட்டூளியம் புரிந்து கொண்டிருந்த) பிர்அவ்ன் மற்றும் அவனுடைய படையினரிடத்திலிருந்து அல்லாஹுதஆலா பாதுகாத்தான். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு இந்நாளில் நோன்பு நோற்றுள்ளார்கள்.

இத்தினத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோன்பு நோற்றதோடு, சஹாபாக்களுக்கும் நோன்பு நோற்கும்படி ஏவியுள்ளார்கள். ஆகவே, ஆஷுராவுடைய தினத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘‘இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். யூதர்கள், ‘‘இது நல்ல நாள். (மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்) பின்பற்றியவர்களை,  அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹு தஆலா காப்பாற்றிய நாளாகும். இதற்காக இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘உங்களைவிட மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு மிகவும் தகுதியானவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள் என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு  அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 2004)

ஆஷுரா எனும் இந்த (முஹர்ரம் பத்தாம்) நாளையும் ரமழான் எனும் இந்த மாதத்தையும் தவிர, வேறெதனையும் சிறப்பாகத் தேர்ந் தெடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 2006)

ஆஷுராவுடைய நோன்பின் கூலியைப் பொருத்தவரையில் இந்நோன்பு கடந்த ஒரு வருடத்தில் செய்யப்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றது.

இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

ஆஷுரா தினத்தில் நோற்கப்படும் நோன்பை அல்லாஹஹு தஆலா கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி விடுவதை நான் ஆதரவு வைக்கின்றேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸுனன் அத்திர்மிதி : 752)

முஹர்ரம் மாதத்தின் 10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : 1134)

10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் நோன்பு நோற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு 10 ஆவது நாளுடன் சேர்த்து 11 வது நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளவது சுன்னத்தாகும்.

இம்மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றுக் கொள்வது விரும்பத்தக்கதாகும் என இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஆகவே, முஹர்ரம் மாதம் 10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் அல்லது 11 ஆவது நாளில் நோன்பு நோற்றுக் கொள்வது சுன்னத்தாகும். இன்னும், 09, 10, 11 ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றுக் கொள்வது விரும்பத்தக்கதாகும். அதேவேளை ஒருவர் 10ஆவது நாளில் மாத்திரம் நோன்பு நோற்றுக் கொள்வதாயின் அதற்கும் அனுமதியுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...