ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பினரால் இலங்கை பல்லின மத இளைஞர் யுவதிகளை தலைமைத்துவம், மற்றும் பல்துறை சார்ந்த ஆளுமைகளாக வளர்த்தெடுக்கும் நாடளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற மைக்கழக தலைவர்களுக்கான மாநாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒன்று கூடுவோம் அமைப்பின் நெறிப்படுத்தலிலும் சர்வோதய தருணோதய வேலைத்திட்டத்தின் அனுசரணையுடனும் இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மைய கழகம் மற்றும் அடுக்கு கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு இளைஞர் யுவதிகளுக்கு அத்தியாவசியமான எட்டு பாடப் பரப்புக்களைக் கொண்ட வழிகாட்டல் புத்தக பயிற்சி இடம் பெற்று வந்தது.
இவ் வேலைத்திட்டத்தின் அரை ஆண்டு மதிப்பீடு நடாத்தப்பட்டு அதற்கான விருது வழங்கள் நிகழ்வு ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் தலைவர் திரு பிரஷான் டி விசர் அவர்களின் தலைமையிலும் நெறிப்படுத்தலிலும் ஆடி 31, 2021 அன்று முற்பகல் 10.00 மணிக்கு இடம் பெற்றது. இதன் போது இலங்கை ரீதியாக அதிகளவான கழகங்களை உருவாக்கி, அதிக இளைஞர் யுவதிகளை பயிற்றுவித்து அதிக செயற்பாட்டு இளைஞர் யுவதிகளை உருவாக்கியமைக்காக சுயாதீன ஊடகவியலாளரும், பல்கலைக்கழக மாணவி மற்றும் ஒன்று கூடுவோம் அமைப்பின் குருநாகல் மாவட்ட இணைப்பாளருமாகிய M.F.F. பஸ்னா அவர்களுக்கும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற கல்வி அமைச்சரும், ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய திரு. ம. சுரேஷ்காந்தன் அவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது இணைய வழி மூலம் இடம்பெற்றதுடன் அனைத்து மாவட்டத்திலிருந்தும் இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.